காஞ்சிபுரத்தில் ரூ.30 கோடி மதிப்பில் வடிவமைக்கப்பட்ட தங்கத்தேர் வீதியுலா அமைச்சர்கள், மடாதிபதிகள் பங்கேற்பு
காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோயிலில் ரூ.30 கோடி மதிப்பில் வடிவமைக்கப்பட்ட தங்கத்தேர் வீதியுலா முதல் முதலாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் காஞ்சி சங்கர மடத்தின் பிடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் , தமிழக அமைச்சர்கள் மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் எஸ்.பி.கே.தென்னரசு , மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் மற்றும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார் , மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா, ஆகியோர் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவிலின் தங்க தேரினை கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
தங்கத்தேரில் ஒய்யாரமாக பவனி வந்த ஸ்ரீ ஏலவார்குழலியும் ஸ்ரீ ஏகாம்பரநாதரும் கண்டு ரசித்த பொதுமக்கள் திருச்சிற்றம்பலம் பாகம் பென்ணுரு ஆனாய் போற்றி , சிவமயம் ஏகம்பத்துறை எந்தாய் போற்றி , சிவாய நமக சிவாய நமக என்ற கோஷமிட்டு மனம் உருகி சிவபெருமானே வழிபட்டனர்.பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோயில். இக்கோயிலுக்கு பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை என்ற அமைப்பு ரூ.30 கோடி மதிப்பில் தங்கத்தேர் செய்து கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்திருந்தது. இந்தியாவிலேயே முதல் முறையாக 25 அடி உயரம்,13 அடி நீளம்,10 அடி அகலத்தில் மொத்தம் 22 கிலோ 306 கிராமில் தங்கத்தேர் வடிவமைக்கப்பட்டிருந்தது. இத்தேரின் வெள்ளோட்டம் கடந்த 6.12.2025 ஆம் தேதி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி சுப்பிரமணியன்,ஓரிக்கை மணிமண்டப நிர்வாக அறங்காவலர் மணி ஐயர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த தங்கத்தேரானது பிரம்மன் 4 குதிரைகளுடன் தேரை ஓட்டுதல்,8 சங்க நாத பூதங்கள்,16 நந்திகள்,8 கந்தர்வர்கள், சாமரம் வீசும் 4 பெண்கள் போன்ற சிற்ப உருவங்களுடன் 24 காரட் சுத்த தங்கத்தினாலான ரேக்குகள் ஒட்டப்பட்டு தங்கத்தேர் தயாரானது.இந்த தங்கத்தேர் வீதியுலாவையொட்டி காலையில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும், அதனையடுத்து புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது. மாலையில் வண்ண மின்விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த தங்கத்தேரில் சுவாமியும்,அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் காஞ்சிபுரம் நகரின் ராஜவீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.






கருத்துகள் இல்லை