காஞ்சிபுரத்தில் ஜூலை 12 இல் தங்கத்தேர் திருவிழா, அமைச்சர்கள்,மடாதிபதிகள் பங்கேற்பு,அறநிலையத்துறை அதிகாரிகள் அறிவிப்பு
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் வரும் ஜூலை 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தங்கத்தேர் திருவிழா நடைபெற இருப்பதாகவும் அவ்விழாவில் அமைச்சர்கள்,மடாதிபதிகள்,ஆதீனங்கள் பங்கேற்க இருப்பதாகவும் அறநிலையத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
பஞ்சபுத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் திருக்கோயில். இக்கோயிலுக்கு காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை மூலமாக ரூ.30 கோடி மதிப்பில் தங்கத் தேர் செய்து ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.இந்தியாவிலேயே முதல் முதலாக 25அடி உயரம்,13 அடி நீளம்,10 அடி அகலத்தில் மிகுந்த தொழில் நுட்பங்களுடன் தங்கத்தேர் தயாரிக்கப்பட்டுள்ளது.இத்தேர் திருவிழா வரும் ஜீன்.12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி அளவில் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதரின் சிறப்பு அலங்காரத்துடன் நடைபெறவுள்ளது.
இது குறித்து கோயில் ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர்கள் ச.சீனிவாசன் மற்றும் கதிரவன் ஆகியோர் தெரிவித்தது.
தங்கத்தேர் திருவிழா காஞ்சிபுரம் மாநகரில் ராஜவீதிகளில் முதல் முதலாக நடைபெறவுள்ளது.விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ்,வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் எஸ்.பி.கே.தென்னரசு, வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார்,காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகள், ஆதீனங்கள், மக்களவை மற்றும் சட்டப் பேரவை உறுப்பினர்கள்,ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி சுப்பிரமணியன் மற்றும் உறுப்பினர்கள்,கோயில் அறங்காவலர் குழுவின் தலைவர் எம்.வி.எம்.வேல்மோகன் மற்றும் உறுப்பினர்கள்,அறநிலையத் துறை இணை ஆணையர் சி.குமரதுரை மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலரும் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனர்.
ஜூலை 12 ஆம் தேதி இரவு 7 மணிக்கு தொடங்கும் விழாவில் 108 தவில் மற்றும் நாதஸ்வர வித்வான்கள்,1000 சிவனடியார்களின் சிவ வாத்தியங்கள் இசைத்தல்,திருப்பூர் காவடி குழு,கொங்கு மண்டல கும்மிப்பாட்டு, சிலம்பாட்டம், சிறப்பு வாணவேடிக்கைகளும் நடைபெறுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.






கருத்துகள் இல்லை