காஞ்சிபுரத்தில் வடமாநில சாதுக்களின் சாதுர்மாஸ்ய விரதம் தொடக்க விழா,காஞ்சி சங்கராசாரியர் தொடங்கி வைத்தார்
காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தில் வியாழக்கிழமை முதல் தொடங்கும் வடமாநில சாதுக்களின் சாதுர்மாஸ்ய விரதத்தினை காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு தொடங்கி வைத்து ஆசியுரை வழங்கினார்.
காஞ்சிபுரத்தில் நெல்லுக்காரத்தெருவில் அமைந்துள்ளது சுமார் 600 ஆண்டுகள் பழமையான உதாசின் பாவாஜி மடம். இந்த மடத்தில் வடமாநில சாதுக்கள் சுமார் 250க்கும் மேற்பட்டோர் தங்களது பலத்தை மேலும் பெருக்கிக்கொள்ள சாதுர்மாஸ்ய விரதத்தை தொடங்குகின்றனர்.
இதன் தொடக்க விழாவிற்கு வருகை தந்த காஞ்சி சங்கராசாரியர் சுவாமிகளுக்கு பாவாஜி மடத்தின் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து மடத்திற்கு எழுந்தருளிய சங்கராசாரியர் சுவாமிகள் பாவாஜி மடத்தின் பீடாதிபதி அனுபவானந்துக்கு சால்வை அணிவித்து ஆதிசங்கரர் திருஉருவச் சிலை ஒன்றையும் நினைவுப்பரிசாக வழங்கினார்.இதன் பின்னர் ஆசியுரை வழங்கி சாதுக்களின் சாதுர்மாஸ்ய விரதத்தை தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மற்றும் காமாட்சி அம்மன் கோயிலின் சிறப்புகள்,சாதுர்மாஸ்ய விரதத்தின் முக்கியத்துவும் ஆகியன குறித்து வட மாநில சாதுக்களுக்கு விளக்கி ஆசியுரை வழங்கினார்.இதனையடுத்து உதாசின் பாவாஜி மடத்தின் வடக்கு மாகாணத்திற்கான பீடாதிபதியாக சத்தியமுனிக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.இந்நிகழ்விற்கு வட மாநில மடத்தின் பீடாதிபதிகள் மகந்த் அத்வைதானந்த் சுவாமிகள்,ராமநவமி சுவாமிகள்,துர்காதாஸ் சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஏற்பாடுகளை உதாசின் பாவாஜி மடத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுதான்சு முனி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
நிகழ்வில் தெலுங்கானா மாநில பணி ஓய்வு பெற்ற டிஜிபி ஜிதேந்திர கோயல்,காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மூத்த மேலாளர் ந.சுந்தரேச ஐயர்,மேலாளர் அரவிந்த் சுப்பிரமணியன்,சங்கரா கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன்,காஞ்சி சங்கர மட வரவேற்புக்குழுவின் நிர்வாகிகள் ராஜேஷ்ஜெயின்,பாபு ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.






கருத்துகள் இல்லை