வடலூர் தைப்பூசம் ; லட்சக் கணக்கில் திமுகவினர் சுருட்டல் !தைப்பூச தரிசனம் பார்க்கவந்த பத்தர்கள் 3 வது ஆண்டாக அவதி !
தரிசனம் பார்க்க வந்த எவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்புகிடைத்த உளநிறைவு ஏற்படவில்லை என வருத்தம் !
+ மூன்று கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்படும் நான்கு சக்கர வாகனங்கள்
+ தேவையற்ற கட்டுப்பாடு காரணமாக வெறுப்படைந்த பத்தர்கள்
+ வயதானவர்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் கடும் அவதி
+ மேட்டுக் குப்பத்திற்குப் பேருந்து வசதி இல்லை
+ பெருவெளியை அடைத்துக் கிடக்கும் தகரத் தடுப்புகள்
+ பெருவெளிக்கான தனித்துவத்தை சிதைத்த அவலம்
+ வடலூர் தைப்பூசத்திற்கு என்று இருந்த ஈர்ப்பும், மகிழ்ச்சியும் பறிக்கப்பட்ட கொடுமை !
சாதி, மதம், சமயம் ஆகியவை பொய் என்று இறைவரே கூறிவிட்டதால் சாதி வேறுபாடு, சமய வேறுபாடு, மத வேறுபாடு, ஆண் – பெண் வேறுபாடு பார்க்கக் கூடாத ஒரு நல்ல மார்க்கமாக சமரச சுத்த சத்திய சன்மார்க்கத்தை திருவருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் கடந்த 1865 ம் ஆண்டு நிறுவினார்.
வடலூர் பார்வதிபுரம் மக்களிடம் 106 ஏக்கர் நிலத்தைத் தானமாகப் பெற்று அதில் 1867 ம் ஆண்டு ஏழை, எளிய மக்களின் பசி போக்க தருமச்சாலை ஒன்றை அமைத்தார்.பசி தீர்ந்தவுடன் பத்தர்கள் இறைவரின் ஞானம் பெற ஞானசபை ஒன்றையும் 1872 ம் ஆண்டு நிறுவினார் வள்ளலார். தருமச்சாலை தொடங்கிவைத்து 1867 ம் தம் கைப்பட ஏற்றிவைத்த விளக்கும், பற்றவைக்கப் பட்ட அடுப்பும் இன்றும் அணையாமல் காக்கப்பட்டு விளக்கு வழிபாட்டுக்காகவும், அடுப்பின் நெருப்பு உணவு சமைக்கவும் பயன்படுகின்றன.
இந்த 159 ஆண்டுகளில் பல கோடிப்பேருக்கு பசிப் பிணி போக்கியுள்ளது தருமச்சாலை. ஆனால், இந்த அமைப்பிலும் தீயவர்கள், திருடர்கள் அவ்வப்போது புகுந்து கொண்டு சீர்குலைப்பதும் நடைபெற்றே வருகிறது. காரணம், வள்ளலாரின் இந்த 106 ஏக்கர் பெருவெளித்தலம், தருமச்சாலை, ஞானசபை, மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் உள்ளிட்ட அமைப்புகளை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அதாவது இறைவற்கு முழுமையாக அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து வாழும் உண்மையான சாதுக்களே நிர்வாகம் செய்யவேண்டும் என்பது வள்ளலார் வகுத்த விதி.
அப்படிப்பட்ட சாதுக்கள் தங்களுக்கு என்று எந்த தனிப்பட்ட விருப்பு வெறுப்பும் இல்லாது இறைவர் பணிகளை மட்டுமே செய்யும் தகுதியும், பக்குவமும் பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஆனால், கடந்த காலங்களில் இதுகுறித்த தெளிவு இல்லாத நமது முன்னோர்கள் செய்த பிழை மற்றும் கவனக்குறைவாலும், ஒழுக்கமான உண்மையான சாதுக்கள் வசம் நிர்வாகம் ஒப்படைக்கப் படாததாலும், 106 ஏக்கரில் 31 ஏக்கர் நிலம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டது. அந்த 31 ஏக்கரில் 25 ஏக்கர் நிலம் கடந்த 1975 ம் ஆண்டு திமுக ஆட்சியில் தனியாருக்குப் பட்டாப் போட்டுக் கொடுக்கப்பட்டு விட்டது. இத்தனைக்கும் 106 ஏக்கர் தவிர வள்ளலாருக்கு தானமாகக் கொடுக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அனைத்தும் வள்ளலாரின் பெயரில் பட்டா செய்யப்பட தனியார் நிலங்களே. ஆனால், அவை இப்போது எங்கே என்றே தெரியவில்லை.
இத்தகைய நிலையில் வள்ளலார் மீது அக்கறை கொண்டது போல நடந்துகொள்ளும் திமுக அரசு, பறிபோன அந்த 34 ஏக்கர் நிலத்தை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, மீதமுள்ள 72 ஏக்கர் நிலத்திலும் “சர்வதேச மையம்” எனும் பெயரில் கட்டடங்கள் கட்டவே துடிக்கிறது.
வள்ளலார் அன்பர்களின் கடும் எதிர்ப்பு, நீதிமன்ற வழக்குகள் காரணமாக அந்தக் கட்டடப் பணிகள் ஞானசபை உள்ள 72 ஏக்கரில் நடத்தப்படாமல், சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் வள்ளலார் பெயரில் உள்ள இடத்தில் பிடிவாதமாக சில கட்டடங்களைக் கட்டிக்கொண்டு இருக்கிறது திமுக அரசு.
பெருவெளித் தலம் என்பது வெட்டவெளிக் கோயில் என்றும் அதில் சர்வதேச மையம் உள்ளிட்ட எந்தக் கட்டுமானமும் கூடாது என்றும் வலியுறுத்தியவர்கள் மீதெல்லாம் பிணையில் வர முடியாத வழக்கு, கைது என்று காவல்துறை மூலம் மிரட்டி வருகிறது திமுக அரசு. மேலும், அங்கே கட்டியே தீருவோம் என்று பிடிவாதம் பிடித்து ஒரு பினாமி வள்ளலார் சங்கத்தை உருவாக்கி அந்த சங்கத்தின் மூலமாக ஒட்டுமொத்த சன்மார்க்கத்திற்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது திமுக அரசு.
இருக்கும் 72 எக்கரையும் ஆக்கிரமித்து அதில் வணிக வளாகம் போல, வசூல் நடக்கும் கோயில் போல ஒருவழித் தரிசனம், சிறப்பு தரிசனம், கட்டண தரிசனம் போல வள்ளலாரின் சன்மார்க்கத்திற்கு நேர் எதிராக மாற்றத் துடிக்கும் திமுக அரசு தைப்பூச தரிசனம் அன்று மக்கள் வரும் நான்கு சக்கர வாகனங்களை மூன்று கிலோ மீட்டர் தொலைவில் தடுத்து விடுகிறது.
வள்ளலாரை நாடி வருபவர்கள் பெரும்பாலும் வயதில் மூத்தவர்கள், பெண்கள். அத்தகையோரெல்லாம் இதனால் கடும் அவதிக்கு ஆளாகி, வடலூர் வருவதையே நிறுத்திக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் படாத பாடு படுகின்றனர்.
மேலும், மேட்டுக்குப்பத்திற்கு வாகன வசதி ஏதும் இல்லாததால் மக்கள் நடந்தே செல்லும் நிலை உருவாகியுள்ளது.
சுதந்திரமாக மக்கள் வந்து சன்மார்க்க சங்கம், சாலை, சபை தரிசனம் செய்துகொண்டிருந்த நிலை மாறி வேண்டாத கட்டுப்பாடு, இறுக்கம், அடக்குமுறை காரணமாக வள்ளலாரின் சமரச சுத்த சத்திய சன்மார்க்கத்தை கொஞ்சமும் அனுபவிக்க இயலாது கடமைக்கு வரிசையில் தரிசனம் செய்யச்சொல்லும் திருப்பதி கோயில் போல மாற்றம் செய்துள்ளனர்.
வள்ளலாரின் சமரச சுத்த சத்திய சன்மார்க்கம் என்பது “ஆன்ம விசாரம்” செய்யப்பட வேண்டிய மார்க்கம். அதாவது ஆன்மிக விசாரணை / ஆன்மிக சிந்தனை செய்யக்கூடிய மார்க்கம். மெல்லென துதிக்கும் மார்க்கம், மனமுருகி நெகிழ்ந்து நெகிழ்ந்து உருகி கண்ணீர் மல்கி இறைவரை நெருங்கும் மார்க்கம்.
ஆனால், அரசு மற்றும் காவல்துறையினரின் முரட்டுத்தனமான கட்டுப்பாடுகள் காரணமாக விரக்தி வேதனையில் பத்தர்கள் “கண்ணீர் விடும்” மார்க்கமாக மாற்றப்பட்டிருக்கிறது. ஆக்கிரமிக்கப்பட்ட 34 ஏக்கர் நிலத்தை மீட்கும் வரையிலும் கட்டுமானம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டும், பெருவெளியில் தோண்டப்பட்ட பள்ளங்களை மூடாமல், தகரத் தடுப்புகள் போட்டு முடக்கி வைத்துள்ளது திமுக அரசு. இதனால் தரிசனம் பார்க்க வரும் லட்சக்கணக்கான மக்கள் பெரும்பாடு படுகின்றனர், வடலூரில் பெருவெளி அழகை தரிசிக்க முடியாது முகச்சுளிப்பும், வெறுப்பும் அடைகின்றனர்.
நெய்வேலி பாதையில் இருந்து ஞானசபையை தரிசித்த வண்ணமே மனமுருகிச் சென்ற காலம் போய் இப்போது இடிபாடுகளுக்கு இடையில் பெருவெளிக்குள் நிற்கும் நிலை. இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ஆண்டுதோறும் தைப்பூசம் அன்று மூன்று நாட்கள் பெருவெளியில் தற்காலிகக் கடைகள் அமைக்க ஒப்பந்தப் புள்ளி அறிவிக்கப்படுவது வழக்கம். இது, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏலம் விடப்படும்.
இந்த ஆண்டு, இரண்டு முறை ஒப்பந்தப் புள்ளி வெளியிட்டும் யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. காரணம், வழக்கமாக ஞானசபைக்கு வடக்கே, நெய்வேலி சாலைக்கு அருகில் கடை போட அனுமதிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு, ஞானசபைக்கு தென் மேற்கே கடை போடவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு வணிகம் நடக்காது என்பதால் வணிகர்கள் ஏலம் எடுக்க முன்வரவில்லை.
ஆனால், மூன்றாம் முறை விடப்பட்ட ஏலத்தை வாஞ்சிநாதன் எனும் திமுக கட்சிக்காரர் 15 லட்சத்துக்கு எடுத்துள்ளார். இவர் எடுத்த நிலையில் ஒப்பந்தப் புள்ளியில் குறிப்பிட்ட ஞானசபைக்குத் தென்மேற்கே உள்ள இடம் அல்லாது, ஆண்டுதோறும் வழக்கம்போல கடைகள் போடும் வடபுறமே கடைகளுக்கு இடம் மாற்றி வாடகைக்குக் கொடுக்கப்பட்டது. அதாவது, ஒப்பந்தப் புள்ளியில் வழக்கமான வடபுறம் என்று குறிப்பிட்டு இருந்தால் பலரும் ஆர்வமாக ஏலம் எடுத்து இருப்பார்கள், கடைகள் மூலம் வரும் சுமார் 30 லட்சம் ரூபாய்க்கும் மேலான வருவாய் நேரடியாக வள்ளலார் தெய்வநிலையத்துக்கே அதாவது வள்ளலார் அமைப்பு நிர்வாகத்திற்கே சென்று இருக்கும்.
ஆனால், தென்புறம் என்று கூறிவிட்டு திமுகக்காரருக்கு குறைந்த ஏலத்தொகையான அடிமாட்டு விலைக்கு 15 லட்சத்துக்கு கொடுத்துவிட்டு வேறு யாரும் ஏலம் எடுக்காமல் இருக்குமாறு சூழ்ச்சி செய்யப்பட்டு கடைகள் வழக்கம்போல வடபுறம் போடப்பட்டுள்ளன. இதன்பிறகு என்ன, அந்த ஏலதாரர் வாஞ்சிநாதன், கடைகளை வடபுறம் மதிப்பில் வாடகைக்கு விட்டு சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமான வருவாய் பார்த்துவிட்டார். தெய்வ நிலையத்துக்கு அவர் ஏலம் எடுத்த 15 லட்சத்தைக் கட்டினாலும்கூட அவருக்கு கடை வாடகை மூலம் 15 முதல் 20 லட்சம் லாபம் கிடைத்து இருக்கும். அதாவது, தமிழ்நாடு அரசின் வள்ளலார் தெய்வ நிலையத்துக்கு இந்த 15 முதல் 20 லட்சம் ரூபாய் நட்டம். அரசு நிர்வாகத்திற்கு 20 லட்சம் நட்டம் ஏற்படுத்தும் அளவுக்கு ஒப்பந்தப் புள்ளியில் சூழ்ச்சி செய்து லட்சக்கணக்கில் பணம் சுருட்டப்பட்டுள்ளது என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.
இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து அரசு விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வருமா என்றும் வடலூர் மக்களும், வள்ளலார் அன்பர்களும் கேட்கின்றனர்.
–சிறப்பு செய்தியாளர் குழு 02/2/26






கருத்துகள் இல்லை