Header Ads

  • சற்று முன்

    ஆவின் பால் விற்பனை அதிகரிப்பு மொட்டைக் கடுதாசி அறிக்கை

    ஆவின் பால் விற்பனை அதிகரிப்பு மொட்டைக் கடுதாசி அறிக்கை, தனிச் செயலர்கள் மூலம் நேரடியாக சாட்டையை சுழற்றுவாரா தமிழக முதல்வர்...?"

                -பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை.

    தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு தினசரி 26லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வந்த நிலையில் அது தற்போது தினசரி 29லட்சம் லிட்டராக விற்பனை நடைபெறுவதாகவும், ஆவின் பால் விற்பனை விலை உயர்வுக்குப் பிறகு தினசரி பால் விற்பனை 3லட்சம் லிட்டர் அதிகரித்திருப்பதாகவும் ஆவின் அதிகாரிகள் தெரிவித்ததாக செவ்வாய்க்கிழமை ஒருசில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருப்பது ஒருவகையில் மகிழ்ச்சியளித்தாலும் கூட அது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

    ஏனெனில் கடந்த ஏப்ரல் மாதம் தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற பால் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது வெளியிடப்பட்ட 2022 - 2023ம் ஆண்டுக்கான பால்வள கொள்கை விளக்க குறிப்பேட்டில் நாளொன்றுக்கு சுமார் 38.26லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு அதில் சுமார் 26.41லட்சம் லிட்டர் (இணையத்தில் 13.36லட்சம் லிட்டர், 25கூட்டுறவு ஒன்றியங்களில் 13.05லட்சம் லிட்டர்) ஆவின் பால் தமிழகம் முழுவதும் விற்பனையாவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் தமிழக பால்வளத்துறை அமைச்சர் திரு. சா.மு.நாசர் அவர்களோ அதன் பிறகு பத்திரிகை, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் தினசரி 43லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு அதில் 30லட்சம் லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டுகளாக விற்பனையாவதாக தொடர்ச்சியாக பேசிவரும் நிலையில் சட்டமன்றத்தில் ஒரு புள்ளி விபரத்தையும், ஊடகங்கள் மற்றும் பொதுவெளியில் முன்னதற்கு மாறான ஒரு புள்ளி விபரத்தையும் மாற்றி, மாற்றி பேசி வருவதை "அமைச்சரே தவறான தகவல்களை பதிவு செய்யலாமா..?" என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தொடர்ச்சியாக சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பி வந்தது.

    இந்த நிலையில் தான்  செவ்வாய்க்கிழமை (29.11.2022) ஆவின் அதிகாரிகள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டதாக (அது எந்த அதிகாரி, என்ன பொறுப்பில் இருப்பவர் தந்த செய்தி என்கிற எந்த ஒரு தகவலும் இல்லை) ஒருசில ஊடகங்களில் வெளியான செய்தி "மொட்டைக் கடுதாசி" போல அமைந்திருக்கிறது. ஏனெனில் ஆவினில் உள்ள எந்த அதிகாரி அந்த அறிக்கையை வெளியிட்டார்..? திடீரென்று அப்படி ஒரு அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன வந்தது..? என்கிற எந்த ஒரு தகவலும் அந்த அறிக்கையில் இடம்பெறவில்லை.

    மேலும் பால்வளத்துறை அமைச்சர் தொடர்ச்சியாக கூறி வந்த "தமிழகத்தில் தினசரி 30லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனையாகிறது" என்கிற புள்ளி விபரத்தோடு தற்போது ஆவின் அதிகாரிகள் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையோடு ஒப்பிட்டால் அது தினசரி 1லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை குறைவானதை சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது. அப்படியானால் இது வீழ்ச்சி தானே தவிர ஆவினுக்கு எந்த வகையிலும் வளர்ச்சி கிடையாது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

    மேலும் கடந்த ஆண்டில் சுமார் 38.26லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் அந்த காலகட்டத்தில் தினசரி 26லட்சம் லிட்டர் ஆவின் பால் தான் விற்பனையானது என அதிகாரிகள் தரப்பில் ஒப்புதல் வாக்குமூலமாகவே ஊடகங்கள் வாயிலாக தெரிவித்திருப்பது உண்மையாக இருக்கும்பட்சத்தில் கடந்த ஓராண்டு காலமாகவே பால்வளத்துறை அமைச்சர் கூறி வரும் தினசரி 30லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனையாகிறது என்கிற தகவலும் பொய்யாகத் தானே இருக்க முடியும்.?

    அதுமட்டுமின்றி தினசரி 38.26லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்ட போதே தினசரி 26லட்சம் லிட்டர் தான் விற்பனையானது என்றால் தற்போது தினசரி 30.50லட்சம் லிட்டர் மட்டுமே கொள்முதல் நடைபெறும் சூழலில் அதாவது தினசரி பால் வரத்தில் சுமார் 7.76லட்சம் லிட்டர் கொள்முதல் குறைந்திருக்கும் போது ஆவின் அதிகாரிகள் கூறியிருப்பது போன்று தினசரி 3லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை எப்படி அதிகரித்திருக்க முடியும்..? என்கிற சந்தேகம் எழுவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை. அப்படியானால் ஆவினில் உண்மையாக என்ன தான் நடைபெற்று வருகிறது..? பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்களுக்கும், ஆவின் நிர்வாகத்திற்கும் இடையே நடப்பது தான் என்ன..? என்பதை தீர விசாரிக்கவும், பால்வளத்துறைக்கான அமைச்சரை மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் தமிழக முதல்வர் அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் பால்வளத்துறை அமைச்சர் திரு. சா.மு.நாசர் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழும் போதெல்லாம் ஆவினில் உள்ள உண்மையான களநிலவரத்தை மறைத்து ஆவினின் செயல்பாடுகளை மிகைப்படுத்தி காட்டுவது வாடிக்கையாகி வருவது ஆவின் நிறுவனத்தை வீழ்ச்சிக்கே கொண்டு செல்லும், வளர்ச்சிக்கு அல்ல என்பதை அமைச்சர் நாசர் அவர்கள் உணர வேண்டும்.

    தமிழகத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் நலனிற்கான ஆவின் நிறுவனம் உண்மையில் வளர்ச்சியடைய வேண்டுமானால் பால்வளத்துறையில் உள்ள கறுப்பு ஆடுகளை களையெடுக்க தனது தனிச் செயலர்கள் மூலம் தமிழக முதல்வர் அவர்கள் நேரடியாக சாட்டையை சுழற்ற வேண்டும், அத்துடன் ஆவினில் உண்மையில் என்ன நடக்கிறது..? என்பதை நேர்மையான அதிகாரிகளை கொண்டு கண்டறிந்து அதற்கேற்றவாறு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்தால் மட்டுமே ஆவின் உண்மையான வளர்ச்சி காணும் என்பதையும், தமிழக அரசு கேட்டுக் கொண்டால் ஆவினின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கி அதன் வளர்ச்சிக்கும், தமிழக அரசின் நற்பெயருக்கும் துணை நிற்க  தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தயாராக இருக்கிறது என்பதையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.


    நன்றி சு.ஆ.பொன்னுசாமி


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad