Header Ads

  • சற்று முன்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது

    தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சாமி கோயிலில் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் கந்த சஷ்டி திருவிழாவும் ஒன்று. நடப்பாண்டு கந்த சஷ்டி திருவிழா, இன்று (அக் 25) யாகசாலை பூஜையுடன் துவங்கியது .

    இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இதனையடுத்து காலை 5.30 மணிக்கு ஸ்ரீ ஜெயந்திநாதர் யாக சாலை மண்டபத்தில் எழுந்தருளினார். திருவிழாஅதன்பின் யாக சாலை பூஜை தொடங்கியது. கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.  அருகே உள்ள கடலில் புனித நீராடி, அங்க பிரதட்சணம் செய்து தங்கள் விரதத்தைத் தொடங்கினர்.

    தொடர்ந்து ஆறு நாட்கள் விரதம் இருந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதால், பக்தர்களின் வசதிக்காக கோயிலின் 18 இடங்களில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டு, குடிநீர் மற்றும் கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.அதேநேரம் பக்தர்கள் கோயில் உட்பிரகாரத்தில் தங்கி விரதம் இருக்க அனுமதி வழங்கப்படவில்லை. கரோனா கட்டுப்பாட்டு தளர்வுகளுக்கு பிறகு நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவிற்கு தற்போது பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்று மாலை 5 மணி முதல் 6.15 மணி வரையில் சூரிய கிரகணம் இருப்பதால், மாலை 4 மணிக்கு சாமிகளுக்கு பட்டு சாத்தி திருக்கோயில் நடை சாத்தப்படும்.

    அடுத்ததாக மாலை 6.45 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு, கோயிலில் மற்ற பூஜைகள் மற்றும் யாகசாலை பூஜை தொடர்ந்து நடைபெறும். கந்த சஷ்டி 2ஆம் நாள் முதல் 5ஆம் நாள் வரை திருக்கோயில், அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.மேலும் விழாவின் சிகர நிகழ்ச்சியான அக்டோபர் 30ஆம் தேதி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, கோயில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்று மாலை 4 மணிக்கு மேல் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad