Header Ads

  • சற்று முன்

    நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், நரேந்திர மோடியை சந்தித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!*

    தி.மு.க. கட்சி அலுவலக திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக நேற்று டெல்லி சென்றார். டெல்லி சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில், டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலக அறையில் மோடி-மு.க.ஸ்டாலின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிற்பகல் 1 மணியளவில் பிரதமர் மோடியை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

    டெல்லி தி.மு.க. அலுவலக திறப்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அதற்கான அழைப்பிதழையும் வழங்கினார். அதன்பிறகு தமிழகத்துக்கான பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

    தமிழகத்துக்கு தர வேண்டிய நிதி நிலுவை தொகையை உடனடியாக தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மழை வெள்ளம் மற்றும் மாநில அரசின் திட்டங்களுக்கான நிதியையும் தாமதம் இல்லாமல் தர வேண்டும் என்று கூறினார். மேலும் ஜி.எஸ்.டி. நிலுவை தொகையையும் உடனே விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    தமிழகத்தில் டெல்டா விவசாயத்தை பாதிக்கும் வகையில் மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பது பற்றியும் பிரதமரின் கவனத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு சென்றார். கர்நாடகாவின் திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

    அதுபோல கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் தினமும் இலங்கை கடற்படையால் சிறைப்பிடித்து செல்வது பற்றியும் பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கி கூறினார். தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் நீட் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுவதை பற்றியும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தனது கோரிக்கைகள் அனைத்தையும் அவர் மனுவாக தயாரித்து வைத்திருந்தார். அந்த மனுவை பிரதமர் மோடியிடம் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நீண்ட நேரம் இந்த சந்திப்பு நடந்தது.

    முன்னதாக டெல்லி, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொள்ள சோனியா காந்திக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad