துத்திப்பட்டில் ஸ்ரீ மாரியம்மன் – ஸ்ரீ காளிகாம்பாள் 27-வது ஆண்டு ஆவணி மாத திருவிழா கோலாகலம்
திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி இந்திரா நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் மற்றும் ஸ்ரீ காளிகாம்பாள் ஆலயத்தில் 27-வது ஆண்டு ஆவணி மாத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு, கூழ்வார்த்தல் மற்றும் மாவிளக்கு படைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோவில் பூசாரி சரோஜா அம்மாள் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து இரவு ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் நாடகக் குழுவினரின் ‘விதிசூரன் – மதிசூரன்’ நாடகம் நடைபெற்றது. இதில் மதியா அழகன் உள்ளிட்ட கலைஞர்களின் கதாபாத்திர நடிப்பை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக துத்திப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சுவிதா கணேஷ் கலந்து கொண்டார். ஊர் நாட்டாண்மைக்காரர்கள் வேலு, ஜெயபாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், கோவில் விழாக்குழுவினர் ராஜா, வேலன், செல்வா, பாஸ்கர், கார்த்தி, தர்மா உள்ளிட்டோர் உடனிருந்து, பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா மற்றும் நாடக நிகழ்ச்சியை துத்திப்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.






கருத்துகள் இல்லை