காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைப்பு.
காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; கூடுதல் பணிக்கு தனி பணியாளர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில், 10-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் ஊழியர்கள் மூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், ஓரிக்கை பகுதியில் உள்ள காஞ்சி தெற்கு மண்டல டாஸ்மாக் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலி மதுபாட்டில்களை வாங்கும் பணிக்கு தனியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும் அல்லது இந்தத் திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்தினர். மேலும், மதுபாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிக்கும் தனியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும், டாஸ்மாக் கடைகளுக்குத் தேவையான நிதியை அரசு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு நிர்ணயித்துள்ள ஊதியம் போதுமானதாக இருந்தாலும், கூடுதல் பணிச்சுமைகளை ஊழியர்களிடம் ஒப்படைக்கக் கூடாது எனவும் அவர்கள் தெரிவித்தனர். டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டத்தால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளதால், மதுபான விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.






கருத்துகள் இல்லை