காஞ்சிபுரம் போலி பட்டு விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் பா.ம.க. காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட தொழிற்சங்க செயலாளர் கோரிக்கை மனு
உலகளவில் பட்டு நகரம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், கைத்தறி பட்டு என்ற பெயரில் பவர் லூம் சேலைகளை விற்பனை செய்து பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் ஏமாற்றும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ம.துரைராஜ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சினேகாவிடம் அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நெசவுக்கு பெயர் பெற்ற காஞ்சிபுரத்தில், போலியான விளம்பரங்கள் மூலம் பவர் லூமில் நெய்யப்பட்ட சேலைகளை காஞ்சிபுரம் கைத்தறி பட்டு என்று கூறி விற்பனை செய்து வருகின்றனர். இதனால் வெளிமாநிலங்களில் இருந்து காஞ்சிபுரத்தை நம்பி வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றப்படும் நிலை உள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள சில பெரிய பட்டு விற்பனை கடைகள் உள்பட சுமார் 30-க்கும் மேற்பட்ட கடைகளில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுவதாகவும், அந்த கடைகளில் அதிகாரிகளின் ஆய்வுகள் முறையாக நடைபெறவில்லை என்றும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனால் உண்மையான கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு, கைத்தறி தொழில் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே, காஞ்சிபுரத்தில் உள்ள பட்டு விற்பனை கடைகளில் அதிகாரிகள் முறையான ஆய்வு மேற்கொண்டு, கைத்தறி பட்டு என்ற பெயரில் போலி சேலைகளை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்.
மேலும்,போலி சேலை விற்பனைகளை தடுக்க மாநகரின் மையப்பகுதிக்ளில் அறிவிப்பு பலகை போன்றவற்றை வைத்திடவும்,உண்மையான கைத்தறி நெசவாளர்களுக்கு உரிய ஊதியம் கிடைப்பதை உறுதி செய்து, கைத்தறி தொழிலை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.






கருத்துகள் இல்லை