தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை.. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை விழாவை புறக்கணித்த டிஜிபி!
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு வழங்கப்பட்ட இடம் தொடர்பான சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தால் தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் விழா நிகழ்வில் பங்கேற்காமல் புறக்கணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிரிமினாலஜி பாடப்பிரிவில் முனைவர் பட்டம் பெற விழாவில் கலந்துகொள்ள இருந்த டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், இறுதிநேரத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. விழா நிரலில் வந்தே மாதரம் முதலில், தேசிய கீதம் இரண்டாவதாக, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியின் காரணமாகவே அவர் நிகழ்வை புறக்கணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் மொழிக்கும் அதன் மரியாதைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நிகழ்வில் இந்த நடைமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது என்ற கருத்தும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பல்கலைக்கழக வட்டாரங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தின் இடம் தொடர்பான சர்ச்சை ஏற்கனவே எதிர்ப்பை கிளப்பிய நிலையில், மாநிலத்தின் உயர்மட்ட காவல் அதிகாரி விழாவைத் தவிர்த்தது இந்த விவகாரத்திற்கு மேலும் முக்கியத்துவம் சேர்த்துள்ளது. இதுகுறித்து பல தரப்பினரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வரும் நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.






கருத்துகள் இல்லை