• சற்று முன்

    ஜாதி, மதம் சாராதவர்' சான்றிதழ் கோரி குடும்பத்துடன் கருப்புத் துணி கட்டி உண்ணாவிரதம்: கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு நாள் முகாமின் போது, தனது இரு மகன்களுக்கு "ஜாதி மற்றும் மதம் சாராதவர்" என்ற சான்றிதழ் வழங்கக் கோரி குடும்பத்துடன் கருப்புத் துணி கட்டிக்கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.



    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பொன்மொழி என்பவர், தனது மனைவி வித்யா, இரு மகன்கன் தேவமித்ரன்,ஜுவமித்ரன்  ஜாதி மற்றும் மதம் சாராதவர் என்ற சான்றிதழ் வழங்க வேண்டும் என 2025-ஆம் ஆண்டு முதல் ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனு அளித்ததாக கூறப்படுகிறது. இதுவரை அந்த மனுவுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்றும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தபோதும் திருப்திகரமான விளக்கம் அளிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    இந்த நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் நினைவு நாளான நேற்று திங்கட்கிழமையில் காஞ்சிபுரம் மாவட்ட  கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு நாள் முகாமின் நுழைவாயில் முன்பு, தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் வாயில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், இதுதொடர்பாக நான்கு அம்ச கோரிக்கைகளையும் வலியுறுத்தினார்.

    இதையடுத்து, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட முடியாது என தெரிவித்த காவல்துறையினர், பொன்மொழியை காவல் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் அவரை விடுவித்தனர்.

    அதன்பின் மீண்டும் மக்கள் குறைத்தீர்வு நாள் முகாமில் வருவாய் துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்த பொன்மொழிக்கு உடனடி தீர்வு கிடைக்காததால், கூடுதல் மாவட்ட  கலெக்டர் மனு வழங்கினார். மனுவை பெற்றுக் கொண்ட கூடுதல் மாவட்ட கலெக்டர் தேவையான விவரங்களை பெற்று ஓரிரு நாட்களில் மீண்டும் சந்திக்குமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்மொழி, திரைப்பட நடிகர் பர்த்திபனுக்கு இதேபோன்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சாதாரண மக்களுக்கு ஏன் அதே சான்றிதழ் வழங்க முடியவில்லை என கேள்வி எழுப்பினார். இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால், உயர் அதிகாரிகள் அல்லது தலைமைச் செயலகம், சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    இந்த சம்பவம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad