ஆம்பூர் அருகே வடபுதுப்பட்டில் அருள்மிகு ஶ்ரீ திருப்பதி கெங்கையம்மன் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ திருப்பதி கெங்கையம்மன் திருக்கோயில் திருவிழா பக்தர்கள் திரளான பங்கேற்புடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை ஸ்ரீ வரசித்தி விநாயகர், மாரியம்மன், பொன்னியம்மன், ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ பாட்டை சாரி அம்மன் மற்றும் ஸ்ரீ கெங்கையம்மன் உள்ளிட்ட அனைத்து மூலவர் சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீ கெங்கையம்மனுக்கு கூழ் அமுது படைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
புதன்கிழமை அதிகாலை ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மன் சிரசு தாரை, தப்பட்டை மற்றும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டதுடன், மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், வடபுதுப்பட்டு சின்னத்தாய் நகர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் சார்பில் 11-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மகா அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை நேரத்தில் ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மனுக்கு அந்தரத்தில் பறந்து வந்து மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி பக்தர்களை பரவசப்படுத்தியது. இரவு வடபுதுப்பட்டு விநாயகர் ஆலயத்தில் இருந்து சக்திகரகம் காளியம்மன் கோயில் வரை ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து திரைப்பட நடன நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளில் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.






கருத்துகள் இல்லை