• சற்று முன்

    வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு இயற்கை வளத்தைப் பெருக்கும் நிர்வாக அதிகாரி.

     

    காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்று பிரசித்திபெற்று விளங்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது.

    இது கல்யாண பிரார்த்தனை தலமாகவும் சத்ரு சம்கார பரிகார தலமாகவும் உள்ளது. அதனால் இங்கு வாரந்தோறும் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில்  பெருமளவில் பக்தர்கள் கலந்துகொண்டு பலன் பெறுகின்றனர்.

    புராண காலத்தில் தேவர்களின் தலைவனாகிய இந்திரன் வல்லக்கோட்டைக்கு வந்து முருகப் பெருமானை வேண்டி, இந்திராணியைத் திருமணம் செய்து கொண்டான். அதேபோல் வல்லன் எனும் அசுரனை முருகப்பெருமான் அழித்து கோயில் கொண்டமையால் இந்த ஊருக்கு வல்லக்கோட்டை என்று பெயர் வழங்கப்படுகின்றது.  பிரசித்தி பெற்ற இந்த கோயில் பாழடைந்து இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கோயிலுக்கு சோ.செந்தில்குமார் என்பவர் நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். 

    அவர் பொறுப்பேற்ற பிறகு விரைவாக பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2025 ஜூலை மாதம் விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. புதியதாக வடக்கு இராஜகோபுரம் கட்டப்பட்டு பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்திருக்கோயிலில் தடைபட்டிருந்த பல உற்சவங்கள் இந்த நிர்வாக அதிகாரியின் முயற்சியால் மீண்டும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.


    இந்த நிலையில் திருக்கோயிலுக்குச் சொந்தமான 6.50 ஏக்கர் நிலம் திருக்கோயிலுக்குப் பின்புறம் பயன்பாடற்று இருந்தது. இந்த இடத்தினைப் பயன்பாட்டுக் கொண்டுவந்து பலன்தரும் மரக்கன்றுகளை நட்டு நந்தவனமாக உருவாக்க நிர்வாக அதிகாரி திட்டமிட்டார். முதலில் திருக்கோயில் இடத்தைச் சுற்றிலும் ரூ.8 லட்சம் செலவில் பாதுகாப்பு முள்வேலி அமைக்கப்பட்டது. நீர் தேவைக்காக இரண்டு இடங்களில் போர்வெல் அமைக்கப்பட்டது.மூன்று மாதங்களுக்கு முன்னர் விதைகள் தன்னார்வல அமைப்பு மற்றும்  பல்வேறு கல்லூரி பள்ளி மாணவர்களுடன் இணைந்து 500 எண்ணிக்கையில் வேங்கை தேக்கு மரக்கன்றுகள் நடப்பட்டன. அதற்குப் பிறகு தமிழ்நாடு முதல்வராக ச.ஜோசப் விஜய்  பொறுப்பேற்றவுடன்  வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.பி.கே.தென்னரசு கடந்த மே மாதம் வல்லக்கோட்டைக்கு வந்து  வேங்கை, மகோகனி, மா முதலிய மரக்கன்றுகள் 500 எண்ணிக்கையில் நட்டு வைத்து இத்திட்டத்தினை ஊக்குவித்தார்.

    இந்நிலையில் இத்திட்டத்தை விரிவுபடுத்தி வேங்கை, தேக்கு, மகோகனி, மா, இலுப்பை, பாதிரி, அரசு, மகிழம் மற்றும் நட்சத்திர மரக்கன்றுகள் என 2 ஆயிரம் மரக்கன்றுகள்  நடுவதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நிர்வாக அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  மரக்கன்றுகளின் நீர் தேவைக்கு நந்தவனத்தில்  இரண்டு சிறு குளங்களும் ஏற்படுத்திட திட்டமிடப்பட்டு எதிர்காலத்தில் திருக்கோயிலுக்கும் இயற்கை வளத்திற்கும் பெரும் பயன்தரும் இந்த திட்டத்தினை மேற்கொண்டுவரும் தமிழ்நாடு அரசினையும் நிர்வாக அதிகாரியினையும் பக்தர்களும் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டுகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad