கோயம்பேட்டில் தொழிலாளி கொலையில் 4 ஆண்டு தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
சென்னை துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 48). சமையல் தொழிலாளியான இவர் கோயம்பேடு பஸ் நிலையத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
இவர் கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் பணி முடிந்து வழக்கமாக படுத்து உறங்கும் இடத்திற்கு வந்தார். அப்போது அங்கு மதுபோதையில் வாலிபர் ஒருவர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அவரை தங்கதுரை தட்டி எழுப்பியபோது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் தங்கதுரையை தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த தங்கதுரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து நடத்திய விசாரணையில் தங்கதுரையை அடித்து கொலை செய்துவிட்டு தப்பியது வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பாலாஜி என்ற காதுகுத்து பாலாஜி (36) என்பது தெரிந்தது.
கடந்த 4 ஆண்டுகளாக அவர் போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் திருவல்லிக்கேணி கலைவாணர் அரங்கம் அருகே சுற்றிய பாலாஜியை இன்ஸ்பெக்டர் ரபிக் உசேன் தலைமையிலான தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பாலாஜி மீது ஏற்கனவே பெரம்பூர், பட்டினப்பாக்கம், அரக்கோணம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் செல்போன் மற்றும் நகை பறிப்பு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.






கருத்துகள் இல்லை