150 ஆண்டுகள் பழமையான காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ ரேணுகாதேவி திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரம் மாநகரின் மையத்தில் உள்ள கோட்ராம் பாளையம் தெருவில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ ரேணுகா தேவி திருக்கோவில் அமைந்துள்ளது. இத் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக பணிகள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு துவங்கி அனைத்தும் திருப்பணிகளும் நடைபெற்று முடிந்தது. இதை தொடர்ந்து அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜை நேற்று முதல் தொடங்கப்பட்டு பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசம் யாகசாலையில் வைத்து விக்னேஸ்வர பூஜை,கணபதி ஓமம், நவக்கிரக ஓமம்,லட்சுமி ஹோமம்,என பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேள தாளம், சிவ வாத்தியங்கள் முழங்க புனித நீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் மூலமாக எடுத்து வந்து
ஸ்ரீ செல்வ விநாயகர்,ஸ்ரீ ரேணுகாம்பாள்,வள்ளி தேவசேன சமேத சுப்பிரமணியசாமி,குரு பகவான், கோபுரம் மற்றும் மூலவர் சன்னதிகளுக்கு ஆலய ஆர்ச்சகர் ராஜேஷ் சிவாச்சாரியார் தலைமையில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விநாயகர் மற்றும் ரேணுகாதேவிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவினை செல்வ விநாயகர் ரேணுகா தேவி அம்மன் ஆலய ஆன்மீக மற்றும் சமுதாய சேவா அறக்கட்டளை மற்றும் கோட்ராம்பாளையம் பகுதி வாசிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
செய்தியாளர் : தினேஷ்
கருத்துகள் இல்லை