விளை நிலங்கள் வழியாக உடலை தூக்கி செல்லும் அவல நிலை
விளை நிலங்கள் வழியாக உடலை தூக்கி செல்லும் அவல நிலை நிலவுவதாகவும் சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த கிராம மக்கள்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திற்குட்பட்ட கட்டக்குடி ஊராட்சியில் உள்ள கட்டக்குடி கிராமத்தில் சுமார் 53 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.இதில் 48 குடும்பத்தினர் பட்டியிலனத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஊரில் வசிக்கும் பொது மக்களுக்கான சுடுகாடு ஊரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வெட்டாற்று கரையில் அமைந்துள்ளது. கடந்த பல வருடங்களாக இந்த சுடுகாட்டிற்கு செல்வதற்கு பாதை வசதி இல்லாத காரணத்தினால் விளை நிலங்களில் இறங்கி உடல்களை எடுத்துச் செல்லும் அவல நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து கடந்த 35 வருடங்களுக்கு மேலாக இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அரசு தரப்பினரிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வரை ஆற்றில் இறங்கி உடல்களை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை இருந்ததாகவும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அங்கு பாலம் அமைத்துக் கொடுக்கப்பட்டதால் தற்போது அந்த பாலத்தை கடந்து விளை நிலங்கள் வழியாக இறங்கி முட்டியளவு நீரில் இறந்த உடல்களை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடிய நிலை இருப்பதாகவும் இப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அதில் அரசுக்கு சொந்தமான நிலமும் இருப்பதாக கூறப்படுகிறது.எனவே அரசுக்கு சொந்தமான நிலத்தையாவது அரசு கையகப்படுத்தி தங்களுக்கு பாதை அமைத்து தர வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை மனுவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
திருவாரூர் மாவட்ட செய்தியாளர் : இளவரசன்
கருத்துகள் இல்லை