• சற்று முன்

    உரிமைகள் மறுக்கப்படுவதை எதிர்த்து ஒன்றுபட்டு போராடுவோம்



    உரலுக்கு ஒரு பக்கம் இடி! மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி! பத்திரிக்கையாளர்களுக்கோ பக்கமெல்லாம் இடி!

    1. ஒன்றிய அரசின் இடி! 2. மாநில அரசின் இடி.! 3 கார்ப்பரேட்டுகள், வகுப்புவாதிகள், அரசியல்வாதிகள், சமூக விரோதிகளின்  என்று பலவாறு இடி!

    + மெகா காட்சி ஊடகங்கள் சிறிய காட்சி ஊடகங்களை மதிப்பதில்லை

    + காட்சி ஊடகங்கள் அச்சு ஊடகங்களை மதிப்பதில்லை.

    + மெகா தினசரி பத்திரிகைகள் பருவ இதழ்களை மதிப்பதில்லை.

    + மெகா பத்திரிகைகள் சிறிய பத்திரிகைகளை மதிப்பதில்லை.

    பத்திரிகை என்பதற்குள் அனைத்தும் அடங்கும் என்றாலும் மேற்கண்ட வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.

    பக்கமெல்லாம் இடி என்பதைத் தாங்கி, மெகா ஊடகங்கள் மற்றும் மெகா பத்திரிக்கைகள் ஆதிக்கத்தையும்  எதிர்கொண்டு செயல்பட வேண்டிய சூழல் பருவ இதழ்களுக்கும், சிறு பத்திரிக்கைகளுக்கும் இருக்கிறது.  இந்த சிறு பத்திரிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் கோரிக்கை குரல் எழுப்பி போராடி வருவதுதான் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு. இன்றைய உலகமய அரசியலில் பத்திரிகைகள், ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை ஆளு வோரும், அரசியல் கட்சிகளும் நன்றாகவே உணர்ந்திருக்கின்றன.

    தமிழ்நாடு அரசை பொறுத்தவரையில் வாக்குறுதி ஒன்று செயல்முறை வேறொன்றுமாக இருக்கிறது.2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பேசும்போது, ”செய்தியாளர்களுக்கு உரிய நலத்திட்டங்கள் சென்று சேரும் வகையில் தமிழகத்தில் 'பத்திரிக்கையாளர்கள் நலவாரியம்' அமைக்கப்படும்" என்று வாக்குறுதி கொடுத்தார்.

    செய்தியாளர்கள் யார்? அவர்கள் யாரால் எப்படி தேர்ந்தெடுத்தப்படுகிறார்கள் என்பதற்கு விளக்கம் அவரது உரையில் இடம்பெறவில்லை.

    6.9.2021ல் செய்தி மற்றும் மானிய கோரிக்கையில் செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் அவர்கள் பேசும் போது,

    * " உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்படுவர்.

    * " உழைக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து செவ்வனே செயல்படுத்தும் வகையில் நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நல வாரியத் திட்டங்கள் செயல்படுத்திடும் வகையில் 'பத்திரிக்கையாளர்கள் நல வாரியம்' அமைக்கப்படும் பேசினார்.

    உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் என்பவர் யார்? 2021ல் என்பது குறித்த விளக்கம் அவரது பேச்சில் இடம் பெறவில்லை. பத்தாண்டு காலத்திற்கு பின்பு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால்‌ பத்திரிகை யாளர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவியது.

    இந்தச் சூழலில் 2021 ஆகஸ்ட் 30 ஆம் தேதி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தொடங்கப்பட்டது.20 க்கும் மேற்பட்ட சங்கங்கள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன. பல்வேறு சங்கங்கள் கூட்டமைப்பில் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன. தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றுபட்ட கூட்டமைப்பாக, பத்திரிக்கையாளர்களின் குறைந்தபட்ச அடிப்படையான நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறது.

    28.11.2022,  10.2.2023,  27.3.2023, மற்றும் 11.4.2023,  8.9.2023 ஆகிய தேதிகளில் கூட்டமைப்பின் சார்பில்  தமிழக அரசுக்கு கோரிக்கை விளக்க கடிதங்கள் அனுப்பப்பட்டது.

    11.2.2022 ல் - கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.     29.2.2022 ல் - கண்டன ஆர்ப்பாட்டம்.

    18.3.2023 ல் விளக்கேந்தி விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் என்றவாறு தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.

    ந.க. எண்.1666/ 3.3.2023,   த.க.எண். 1666/18.4.2023   கடித எண்- 49 51/அ.செ.2/2023 9.6.2023    த.க.எண்- 9256/செ.வெ/2023 / 3.10.2023. ஆகிய தேதிகளில் அரசின் சார்பில் கூட்டமைப்புக்கு பதில்கள் கிடைத்துள்ளன.

    எங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதுடன் குறிப்பாக பருவ இதழ்களை, சிறு பத்திரிக்கையாளர்களை அரசு முற்றிலுமாக புறக்கணிக்கிறது. என்பதையும் அரசின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

    1. முதலில் Accreditation Card மற்றும் Press Pass இந்த இரண்டுக்குமான தெளிவான விளக்கங்களை அரசு விளக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வந்த அடையாள அட்டைகள் தற்போது மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்று மாற்றப்பட்டுள்ளது. இது செய்தியாளர்களை இழுதடித்து அலைக்கழிக்கும் போக்காகும்.

    இதை மீண்டும் ஆண்டுக்கு ஒரு முறை என்று மாற்ற வேண்டும்.

    2. செய்தியாளர் அங்கீகார அட்டை (Accreditation card ) வழங்குவதற்கு வெளியிடப்பட்டுள்ள அரசாணை விதிமுறைகளில்..

    + பத்திரிக்கையாளரின் பணி நிய ஆணை.

    + பத்திரிக்கையாளரின் கல்விச் சான்றிதழ்.

    + வங்கி மூலம் ஊதியம் பெறுவதற்கான சான்று.

    + ஆடிட்டர் மூலம் 3 ஆண்டுகள் வரவு செலவு கணக்கு.

    + காலமுறை இதழ்கள் 10000 பிரதிகள்‌ அச்சடித்ததற்கான சான்று

    இது போன்ற விதிமுறைகளை பருவ இதழ்கள், சிறு பத்திரிக்கைகள் நிறைவேற்ற முடியாது. எனவே இந்தவகை இதழ்களுக்கு விதிமுறைகளை மாற்றி அமைக்குமாறு கோரிக்கை வைத்திருந்தோம்.

    + பத்திரிகை ஆர்.என்.ஐ. பதிவு.        + ஆண்டுதோறும் புதுப்பித்தல்,    + நிற்காமல் தொடர்ந்து வெளிவருதல்,

    + 2000 பிரதிகள் வரை அச்சடித்தல்,     + குறிப்பிடத்தக்கப் பகுதிகளில் விநியோகம்..

    என்றவாறு பொருத்தமான மாற்றையும் தெரிவித்திருந்தோம். அரசு இதற்கு செவிசாய்க்கவில்லை. அவ்வாறு மாற்றியமைக்கும் கருத்துரு அரசின் பரிசீலனையில் இல்லை என்று அரசு பதில் கூறியுள்ளது. பருவ இதழ்களில் (வார, மாத இதழ்கள்) தாமரை, செம்மலர், சமூக விஞ்ஞானம், காலச்சுவடு, உயிர்மை, தீராநதி, தீப்பொறி, ஆயுத எழுத்து உள்ளிட்ட பத்திரிகைகளும் அரசு அங்கீகாரத்தை இழக்க வேண்டிய சூழல் உருவாகும். எனவே பருவ இதழ்களில் ஒரு சில முக்கிய பத்திரிகைகளை தேர்வு செய்து அரசு அங்கீகரிக்க முன்வர வேண்டும்.

    3. அரசு ஆணை 117/ 13.7.2023.ன் படி அரசு வெளியிட்டுள்ள அடையாள அங்கீகார அட்டை(Accreditation card) பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தில்..

    * தினசரி பத்திரிகை (காலை)     * தினசரி பத்திரிக்கை (மாலை)    * செய்தி தொலைக்காட்சி நிறுவனங்கள். என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. பருவ இதழ்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும் தினசரி நாளிதழ்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அரசு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. பருவ இதழ்களில் பணியாற்றும பத்திரிகையாளர்களுக்கு அங்கீகார அட்டை வழங்கும் கருத்துரு அரசின் பரிசீலனையில் இல்லை.என்று அரசு திட்டவட்டமாக பதில் கூறி யுள்ளது.  இது பருவ இதழ்களையும், சிறு பத்திரிக்கையாளர்களையும்  புறக்கணிக்கும் போக்காகும். சிறு பத்திரிகைகளை முற்றிலுமாக ஒதுக்கி விடாமல் முன்பு போன்று அரசு அடையாள அட்டை( Press pass) வழங்க அரசு முன்வர வேண்டும்.

    4. அரசு அங்கீகார அடையாள அட்டை பரிசீலனை. குழு மற்றும் பத்திரிக்கையாளர் நலவாரிய குழு அமைக்க கோரி இருந்தோம். மேலும் இந்தக் குழுக்களில் பத்திரிகையாளர்கள் சங்கங்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம். மேற்கண்ட இரண்டுக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது‌ வரவேற்கத்தக்கது. ஆனால் அடையாள அங்கீகார அட்டை பரிசீலனைக் குழுவில் பருவ இதழ்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. 

    ‘தி வீக்' என்ற ஆங்கில பருவ இதழ்க்கு மட்டும் வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. தமிழ் பருவ இதழ்கள் மற்றும் சிறு பத்திரிக்கைகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. ‘நலவாரிய குழுவில்’ தமிழ் பருவ இதழ்களும்; சிறுபத்திரிக்கைகளும் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அடையாள அட்டை பரிசீலனை குழுவிலும், நலவாரிய குழுவிலும் பத்திரிகையாளர்கள் சங்கங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.

    பத்திரிகையாளர்கள் சங்கங்களுக்கு நலவாரிய குழுவில் பிரதிநிதித்துவம் வழங்குதல் கருத்துரு அரசின் பரிசீலனையில்‌ இல்லை என்று பதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் 2016 ஆம் ஆண்டு வரை அடையாள அட்டை அங்கீகாரக் குழுவில் பத்திரிகையாளர் சங்கத்தின்  பிரதிநிதிகள் இடம்பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது பத்திரிகையாளர் சங்கங்களின் ஜனநாயக உரிமையை பறிப்பதாக அமைந்துள்ளது.

    5. அரசு அங்கிகார அட்டை என்பது அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் செய்தியாளர்களுக்கான அடையாள அட்டை மட்டுமே என்று அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் இவ்வாறு பின்பற்றப்படவில்லை. அரசு அடையாள அட்டை வைத்திருப்பவர்களே பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர முடியும். அரசு நலத்திட்டங்களை பெற முடியும். என்று அரசு தெரிவித்துள்ளது. (ஆதாரம்: 31.9.2023 தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்டது)

    6. பத்திரிகைத்துறை பணியாளர்கள் அனைவரையும் பத்திரிகையாளர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. பத்திரிகைத்துறை பணியாளர்கள் அனைவரையும் பத்திரிகையாளர்களாக அங்கீகரிப்பது அரசின் கொள்கை முடிவாகும் என்ற பதில் கூறப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் மட்டுமே பத்திரிகையாளர் என்று வரையறுப்பது சரியல்ல. மாறாக இது பத்திரிகையாளர்களை பிளவுபடுத்தும் போக்காகும். இதில் அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

    7. நலவாரிய குழுவில் அலுவல் சாரா பிரதிநிதிகள் எண்ணிக்கையை அதிக படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இதற்கு அலுவல் சாரா எண்ணிக்கையை அதிகப்படுத்துவது அரசின் கொள்கை முடிவு என்று பதில் வந்தது. இதை பருவ இதழ்களின், மற்றும் சிறு பத்திரிகைகளின் பங்களிப்பை அரசு புறக்கணிப்பதாகவே எடுத்துக் கொள்ள முடியும்.

    8. நல வாரிய செயல்பாடுகள் வெளிப்படையாக அமைய வேண்டும்.

    அவை  ஜனநாயக பூர்வமாக அமைய பத்திரிக்கையாளர்கள் சங்கங்களை அழைத்துப் பேச வேண்டும். நலவாரிய குழுவிற்கு நிதி எங்கிருந்து திரட்டப்படுகிறது? பத்திரிகைகளுக்கு ஊடகங்களுக்கு வரும் விளம்பரங்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை இதில் சேர்க்க வேண்டும். அரசு சார்பில் ஒரு குறிப்பிட்ட தொகையை நல வாரிய நிதிக்கு தர வேண்டும். என்றவாறு கோரிக்கை வைத்தோம். இதற்கு முழுமையான பதில் தராமல் நலவாரியம் வெளிப்படையாக செயல்படுகிறது என்று மட்டும் பதில் கூறப்பட்டுள்ளது.

    9. அங்கீகார அட்டை அரசு திரும்பப் பெறுவது குறித்த விதிகளில் தீவிர குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டால், அரசு தொடர்பான தவறான அல்லது உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டாலோ, ஒளிபரப்பினாலோ அங்கீகார அட்டை திரும்ப பெறப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் அரசு தொடர்பான தவறான செய்திகள், உண்மைக்கு புறம்பான செய்திகள் எது என்பதை எப்படித் தீர்மானிப்பது? என்பதற்கான விளக்கம் இல்லை.

    அடையாள அட்டை வைத்திருக்கும் பத்திரிகையாளர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப் படும்போது இதை அரசு எப்படி கையாளும்? இது ஒரு வகையில் பத்திரிக்கையாளர்களை அச்சுறுத்த கூடியதாகும் என்றும் கூறியிருந்தோம். ஆனால் இதற்கு அரசாணையில் தெரிவித்தவாறு குற்றச் செயலில் ஈடுபடும் பத்திரிகையாளர்களின் அடையாள அட்டை திரும்ப பெறப்படும் விதியணை தளர்த்திட வழிவகை இல்லை என்று அரசு பதில் கூறியுள்ளது. இந்த பதில் திருப்திகரமானது அல்ல. போதிய விளக்கம் தரப்பட வேண்டும்.

    10. டிஜிட்டல் ஊடகத்தின் வளர்ச்சியை கவனத்தில் கொண்டு அதில் பணியாற்றும் ஊடகவிய்லாளர்களுக்கும் அரசு அங்கீகார அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். இதற்கு சமூக ஊடகங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது கொள்கை முடிவாகும். சமூக ஊடகங்களுக்கு அங்கீகார அட்டை வழங்கும் கருத்துரு அரசின் பரிசீலணையில் இல்லை என்று பதில் கிடைத்துள்ளது. ஒன்றிய அரசின் சர்வாதிகார, ஜனநாயக விரோத செயல்பாடுகளை துணிச்சலாக விமர்சித்து சுயேட்சையான நிலையில் நின்று களமாடுகிறது. இத்தகைய சமூக ஊடகங்களை புறக்கணிப்பது என்பது அரசின் செயல்பாட்டுக்கு நல்லதல்ல எதிர்வினைகளையே உருவாக்கும்.

    11. தொலைக்காட்சி செய்தி ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு அரசு அங்கீகார அட்டை மட்டுமே வழங்கப்படுகிறது. மற்றபடி பத்திரிகையாளர்களுக்கு உள்ள பென்ஷன், நிவாரணத்தொகை போன்ற எதுவும் வழங்கப்படுவதில்லை. ஊடகவியலாளர் பத்திரிக்கையாளர் என்று பிரித்துப் பார்க்காமல் போராடி பெறப்பட்ட அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இந்த அடிப்படையில் தொலைக்காட்சி செய்தி ஊடகங்களில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கும் இவை கிடைக்கப் பெற வேண்டும்.

    12. ஆட்சியாளர் அலுவலகங்களில் மாவட்ட அளவில் செய்தியாளர்களை தேர்வு செய்து அங்கீகரிப்பது, அடையாள அட்டை உள்ளிட்ட உரிமைகள் வழங்குவது போன்றவற்றில் பெரும் பிரச்சனை நிலவுகிறது. குறிப்பாக பருவ இதழ்கள் மற்றும் சிறு பத்திரிகையாளர்கள் புறக்கணிக்கப்படுவதுடன் மரியாதையாக கூட நடத்தப்படுவதில்லை.

    மக்கள் தொடர்பு அதிகாரி பெயரில் அனுப்பப்படும் பத்திரிகைகள் பிரித்துக் கூட பார்க்கப்படாமல் பத்திரிகை வரவில்லை என்று கூறுகிறார்கள். தமிழ்நாடு அரசு உரிய முறையில் தலையிட்டு இதற்கு தீர்வு காண முன்வர வேண்டும்.

    தமிழ்நாடு பத்திரிக்கையாளர் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் சமர்ப்பிக்க படும் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டுகிறோம். நிறைவேற்றப்படாத பட்சத்தில் கூட்டமைப்பு அடுத்த கட்ட போராட்ட களத்திற்கு தயாராகும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.


    கா.குரு                                                                                                    இளசை கணேசன்

    மாநிலப் பொதுச்செயலாளர்                                                           மாநிலத் தலைவர்

    செல் : 91 93810 24328                                                                             செல் : 82204 68816  

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad