விருதுநகர் அருகே, காரின் டயர் வெடித்து கவிழ்ந்து விபத்து... தந்தை பலி. 3 மகள்கள் படுகாயம்.
விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்து கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியானார். 3 சிறுமிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (40). இவர், கார்களுக்கு பைனான்ஸ் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி மதுரையில் உள்ள தன்னுடைய தாயாரை பார்ப்பதற்காக, தன்னுடைய மகள்கள் பிரியதர்ஷினி (11), ஜீவிதா (10), சங்கவி (8) ஆகிய மூன்று பேருடனும் தன்னுடைய காரில் கோவில்பட்டியிலிருந்து சென்று கொண்டிருந்தார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, நான்கு வழிச் சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது, காரின் டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் தடுப்புக்கம்பியில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணமூர்த்தி, படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காருக்குள் இருந்த பிரியதர்ஷினி, ஜீவிதா, சங்கவி 3 பேரும் கார் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த சூலக்கரை காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கிருஷ்ணமூர்த்தியின் உடலை மீட்டு, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த 3 சிறுமிகளையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். விபத்து குறித்து சூலக்கரை காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகே, நான்கு வழிச்சாலையில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்து காரணமாக மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை