சிவகாசி அருகே, பட்டாசு ஆலையில் இடி தாக்கி விபத்து. ஒரு அறை முற்றிலும் இடிந்து சேதம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (58). இவர் சிவகாசி - சாத்தூர் சாலையில் உள்ள மீனம்பட்டி பகுதியில், வேலவன் பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையை நடத்தி வருகிறார். இன்று மே தினம் என்பதால் பட்டாசு ஆலைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று மாலை, சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த இடி, மின்னலுடன் லேசான தூறல் மழை பெய்தது. அப்போது பட்டாசு ஆலையின் ஒரு அறையில் பலத்த இடி தாக்கியது. இடி தாக்கியதில் அந்த பட்டாசு தயாரிக்கும் அறை முற்றிலும் இடிந்து விழுந்து சேதமானது. மேலும் அந்த அறையிலிருந்த பட்டாசுகளும் எரிந்து சேதமானது. விபத்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இன்று விடுமுறை நாள் என்பதால், பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால், நல் வாய்ப்பாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை