திருவில்லிபுத்தூர் அருகே பள்ளி மாணவர்கள் தர்ணா போராட்டம்
திருவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள லட்சுமியாபுரம் புதூர் பகுதியில், அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையுள்ள இந்த அரசு உயர்நிலைப் பள்ளியில், லட்சுமியாபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 86 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி பணிபுரிந்து வருகிறார். இவர் சரிவர பள்ளிக்கு வருவதில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் சிலர், தாங்கள் உணவு சாப்பிடும் தட்டுகளை சுத்தம் செய்யவும், தாங்கள் பயன்படுத்தும் பொருட்களை சுத்தம் செய்யவும், மேலும் பள்ளியில் உள்ள கழிவறையை மாணவர்கள் தான் சுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளனர். இதனை செய்ய மறுக்கும் மாணவர்களுக்கு தண்டனை கொடுத்துள்ளனர். மேலும் கழிவறையை சுத்தம் செய்ய மறுத்த 8ம் வகுப்பு மாணவி ஒருவரை, பள்ளிக்கு வெளியே முட்டி போட்டு நிற்கச் சொல்லி தண்டனை வழங்கியுள்ளார். தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் இது போன்று செய்து வருவதால், இதனை கண்டிக்கும் வகையில், இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, பள்ளி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் ரெங்கசாமி, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். இனி மேல் இது போன்று சம்பவங்கள் நடக்காது என்றும், மாணவர்களை தண்டித்த ஆசிரியர்கள் மீது உரிய விசாரணை நடத்தி, துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதனையடுத்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு, மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்றனர்.
பள்ளி ஆசிரியர்களை கண்டித்து, பள்ளியின் முன்பு அமர்ந்து மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருத்துகள் இல்லை