ராஜபாளையத்திற்கு பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 175 கிலோ புகையிலை மூடைகள், லாரி, இருசக்கர வாகனம் பறிமுதல்
ராஜபாளையத்திற்கு பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 175 கிலோ புகையிலை மூடைகள், லாரி, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நால்வரை கைது செய்து காவல் துறையினர் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனை அடுத்து குற்றப்பிரிவு ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப் படையினர் இன்று காலை சத்திரப்பட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரில் இருந்து வந்த லாரியை சோதனை செய்த போது, அதன் உள் பகுதியில் அறை அமைத்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவது தெரிய வந்தது.
இதனை அடுத்து ஓட்டுனர் தட்டாங்குளத்தை சேர்ந்த புஷ்பராஜ், ஶ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கிளீனர் கூடலிங்கத்திடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் ராஜபாளையம் கணபதியாபுரத்தை சேர்ந்த தந்தை மகனான ஹரி பாலகிருஷ்ணன், பாலகிருஷ்ணன் ஆகிய இருவர் காந்தி சிலை, அருகே உள்ள தனியார் சந்தையில் பலசரக்கு கடை நடத்தி வருவதாகவும், அவர்களுக்கு மொத்தமாக புகையிலை பொருட்கள் கொண்டு செல்வதும் தெரிய வந்தது. இதனை அடுத்து ஓட்டுனர், கிளீனர், தந்தை மகன் ஆகிய நால்வரையும் கைது செய்த தெற்கு காவல் துறையினர் கடத்தி வரப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான 175 கிலோ புகையிலை பொருட்கள் அடங்கிய 196 மூடைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் ஹரி பாலகிருஷ்ணனுக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை