"என்று தணியும் பால் முகவர்களுக்கான இந்த சுதந்திர (அங்கீகார) தாகம்..?
கடந்த காலங்களில் உருவான தானே, வர்தா, கஜா, நிவர், ஒக்கி புயல்களின் வரிசையில் நள்ளிரவிற்கு முன்னரே ருத்ரதாண்டவமாடத் தொடங்கிய "மாண்டஸ்" புயல் இயற்கையின் ஆதரவுடன் தனது பணியை செவ்வனே செய்து கொண்டிருந்த வேளையில் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலினை தமிழகம் முழுவதும் விநியோகம் செய்ய பால் முகவர்களும், பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்களும் தங்களின் பணியில் கண்ணும் கருத்துமாக இருந்து ஆவின், தனியார் என்கிற பாகுபாடின்றி தங்குதடையற்ற பால் விநியோகத்தை செய்து முடித்துள்ளனர்.
துரோணாச்சாரியாரிடம் பாடம் கற்றுக் கொண்டிருந்த சீடர்கள் மரத்தின் உச்சியில் இருந்த கிளி பொம்மையை குறி வைத்த போது மரக்கிளை தெரிகிறது, கிளியின், கால், இறக்கை தெரிகிறது என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கூறிய போது அர்ஜூனனுக்கு மட்டும் எப்படி மரத்தின் உச்சியில் இருந்த கிளியின் ஒரு கண் தெரிந்ததோ அது போல நள்ளிரவிற்கு முன்னரே ருத்ரதாண்டவமாடத் தொடங்கிய "மாண்டஸ்" புயலின் சூறாவளி காற்றால் சாலைகளிலும், தெருக்களிலும் சாய்ந்து கிடந்த மரங்கள், தகர சீட்டுகள், கம்பங்களுக்கு மத்தியிலும் பயணித்து, பேயாட்டம் ஆடி பயமுறுத்திக் கொண்டிருந்த மரங்களையும் பொருட்படுத்தாமல், சாலைகளில் தேங்கியிருந்த மழைநீரின் அளவும், அங்குள்ள மேடு, பள்ளங்களும் தெரியாத சூழலிலும் கூட குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் என பொதுமக்கள் அனைவருக்கும் குறித்த நேரத்தில் பால் தங்குதடையின்றி கிடைக்க வேண்டும் என்கிற ஒரே இலக்கை மட்டுமே மனதில் கொண்டு செயலாற்றியுள்ளனர். இதுவரையிலும் அவ்வாறே செயல்பட்டும் வந்துள்ளனர்.
ஆனால் பால் முகவர்கள், பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்கள் சாதாரண காலங்களில் மட்டுமல்ல, இயற்கை சீற்றங்கள் மிகுந்த பேரிடர் காலங்களிலும் மக்கள் நலனை மட்டுமே மனதில் வைத்து செயல்பட்டு வந்தாலும் கூட அவர்களுக்கான அங்கீகாரம் என்பது இங்கே ஆவின், தனியார் என்கிற பிரித்தாளும் சூழ்ச்சியால் பிளவுபடுத்தப்பட்டு கடந்த காலங்களிலும் சரி, தற்போதும் சரி ஆட்சியாளர்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது தான் வேதனைக்குரியது. என்று தணியும் பால் முகவர்களுக்கான இந்த சுதந்திர (அங்கீகார) தாகம்...?
நிறுவன தலைவர் : சு. ஆ.பொன்னுசாமி
கருத்துகள் இல்லை