பராமரிப்பு இல்லாத தாம்பரம் ரயில்நிலைய சுரங்க பாதை பொது மக்கள் அவதி
சென்னை: தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் என தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை தாம்பரம் சுற்றுவட்டார பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது.
முறையான பராமரிப்பு இல்லாததால் தாம்பரம் சானடோரியம் ரயில் நிலைய சுரங்கப்பாதையில் அங்காங்கே ஓட்டைகள் இருப்பதால் ஓட்டைகள் வழியாக நிலத்தடி நீர் சுரந்து, சுரங்கப்பாதையில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனை அப்புறப்படுத்த ரயில்வே அதிகாரிகளிடம் பயணிகள் தெரிவித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் சுரங்கப்பாதை பராமரிப்பு பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில், காண்ட்ராக்டர்களின் பணிகள் சரி இல்லாததால் பராமரிப்பு பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கடந்தும் இதுவரை சுரங்கப்பாதை பராமரிப்பு பணி முடிக்காததால், அதிலிருக்கும் ஓட்டைகள் வழியாக நிலத்தடி நீர் சுரந்து அடிக்கடி சுரங்க பாதையில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்திற்குள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் அந்த சுரங்க பாதையை பயணிகள் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். உடனடியாக ரயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தி பராமரிப்பு பணியை விரைவாக முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை