• சற்று முன்

    மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் “நான் முதல்வன்” திட்டம் இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பு

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தும் வகையில் “நான் முதல்வன்” திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். மதுரை மாவட்டத்தில் “நான் முதல்வன்” எனும் இத்திட்டத்திற்கு இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. 

    மதுரை மாவட்டத்தில் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 10 அரசு / தனியார் பொறியியல் கல்லூரிகளில் இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்க திடடமிடப்பட்டு இதுவரை 4,285 மாணவ, மாணவியர்கள் பயிற்சி நிறைவு செய்து பயனடைந்துள்ளனர். இத்திட்டம் மாணவ, மாணவியர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. “நான் முதல்வன்” திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தில் தமிழக இளைஞர்கள் வளர்ந்துவரும் தொழில் நுட்பத்திற்கேற்ப தனித்திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் இலவச திறன் பயிற்சிகள், குறைவான கட்டணத்துடன் கூடிய திறன் பயிற்சிகள், பாடத்திட்டத்துடன் கூடிய திறன் பயிற்சிகள் மற்றும் பாடத்திட்டத்துடன் இணைக்கப்படவுள்ள திறனெய்தும் தொழில்நுட்ப பாடங்கள், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், ஆங்கிலம், ஜப்பானிய, ஜென்மன் மொழித் திறன் பயிற்சிகள், ஆளுமைத்திறன் பயிற்சிகள், உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வு பயிற்சிகள் என அனைத்தும் “நான் முதல்வன்” இணையதளத்தின் மூலம் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    குறிப்பாக, ஆண்டுக்கு 10 இலட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி வழங்குவது “நான் முதல்வன்” திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். இதன்மூலம் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் நவீன தொழில் நுட்பங்களில் விருப்பத்திற்கேற்ற வேலைவாய்ப்பினை பெறும் வகையிலான குறுகிய கால பயிற்சிகளை தெரிவு செய்து உலகத்தரத்திலான பயிற்சிகளையும் அதற்குரிய சான்றிதழ்களையும் பெறலாம். இதற்கான இலவச படிப்புகள், குறைவான கட்டணத்துடன் கூடிய படிப்புகள் மற்றும் பாடத்திட்டத்துடன் கூடிய படிப்புகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், இதுதவிர, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் இளைஞர்களுக்கு அவர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தவும், மாநிலத்தை இந்தியாவின் திறன் மையமாக மாற்றவும் தேவை அடிப்படையிலான மற்றும் தொழில் சார்ந்த திறன்களை வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டு பல்வேறு குறுகிய கால திறன்மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், மதுரை மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் அமைந்துள்ள திறன் பயிற்சி நிலையங்களில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனப் பராமரிப்பு, ஆட்டோமோட்டிவ் சர்வீஸ் டெக்னிஷியன், சரக்கு கண்காணிப்பு நிர்வாகி, ஒப்பனைக் கலைஞர், சுய தொழில் தையல்காரர், சிசிடிவி இன்ஸ்டாலேஷன், நுண்ணீர் பாசன தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் இயந்திர பராமரிப்பு உள்ளிட்ட 18 வகையான திறன் பயிற்சி சார்ந்த குறுகிய கால பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. 

    மேலும், விவரங்களுக்கு www.tnskill.tn.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது மதுரை மூன்றுமாவடி பகுதியில் செயல்பட்டு வரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் நேரிலோ தெரிந்து கொள்ளலாம். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயனடைந்த கல்லூரி மாணவர் செல்வன் கே.சங்கரநாராயணன்  தெரிவித்ததாவது: எனது பெயர் சங்கரநாராயணன்,  நான், மதுரையில் உள்ள வைகை பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். எனக்கு மெக்கானிக்கல் பாடப்பிரிவில் மிகுந்த ஆர்வம் உண்டு. மெக்கானிக்கல் தொழில்நுட்ப இயந்திரங்கள், என்ஜின்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து தெரிந்துகொள்வதில் மிகவும் ஆர்வமாக இருப்பேன். 


    தற்போது,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எண்ணைப் போன்ற இறைஞர்கள் பயன்பெறும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி வழங்க வழிவகை செய்துள்ளார்கள். இத்திட்டத்தின் கீழ் மெக்கானிக்கல் ஆட்டோமேசன் பயிற்சி பெற விண்ணப்பித்தேன்.  அதன்படி மூன்று மாதங்கள் இணைய வழயில் நடத்டதப்பட்ட சிறப்பு பயிற்சியில் பங்கேற்றேன். இப்பயிற்சி மெக்கானிக்கல் பொறியியல் துறையில் கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள எனக்க வாய்ப்பாக அமைந்தது. மேலும் முன்னணி தொழில் நிறுவனங்களில் நேர்முக தேர்வுகளை எதிர்கொள்ள தன்னம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.  இத்திட்டத்தை வழங்கியுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயனடைந்த கல்லூரி மாணவர் செல்வன் ஏ.கார்மெல் கிறிஸ்டோபர்  தெரிவித்ததாவது: எனது பெயர் ஏ.கார்மெல் கிறிஸ்டோபர் நான்,  மதுரையில் உள்ள வைகை பொறியியல் கல்லூரியில் மின்சாரம் மற்றும் மின்னணு பொறியியல் நான்காம் ஆண்டு படித்து வருகிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதை அறிந்தேன். இத்திட்டத்தின் கீழ் கணினி தொடர்பான பயிற்சிளைப் பெற விண்ணப்பித்தேன். 

    அதன்படி, 2 மாத காலம் ஆட்டோ கேட், போட்டோஷாப், கோரல் டிரா, டேலி, எம் எஸ் ஆபீஸ் உள்ளிட்ட கணினி செயல்பாடுகளை உள்ளடக்கிய பயிற்சிகளும், ஆளுமைத் திறன் மேம்பாடு, கம்யூனிகேசன் பயிற்சிகள் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. அடுத்தடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படி படிக்கலாம் என்றும் நேர்முகத் தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டது. எவ்வித பயிற்சிக் கட்டணமும் இல்லாமல் எனக்குத் தேவையான அனைத்து பயிற்சிகளையும் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் வழங்கினர். எண்ணைப் போன்றவர்களின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு மென்மேலும் ஊக்குவிக்கும் வகையிலான இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என, நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad