Header Ads

  • சற்று முன்

    ஆவின் மாதாந்திர அட்டை, நெய் விற்பனையில் முறைகேடு, உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்த அதிகாரி

    ஆவின் நிறைகொழுப்பு பால் பொது வணிகத்திற்கான விற்பனை விலை உயர்த்தப்பட்ட நிலையில் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு விலை உயர்த்தப்படாமல் பழைய விலையிலேயே வழங்கப்பட்டு வருவதால் லிட்டருக்கு 14.00ரூபாய் குறைவாக இருக்கின்ற காரணத்தால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மாதாந்திர அட்டைகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வருவதும் அதற்கு ஆவின் அதிகாரிகளே துணை போய் வரும் தகவலும் அதிர்ச்சியளிக்கிறது.

    ஆவின் இணையத்தின் சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் உதவிப் பொதுமேலாளராக இருக்கும் சிவக்குமார் என்பவர் மூலம் தாம்பரம் பகுதியில் சுமார் 4ஆயிரம் மாதாந்திர அட்டைகள் முறைகேடாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை பணியிடை நீக்கம் செய்ய பால்வளத்துறை அமைச்சர் திரு. சா.மு.நாசர் அவர்கள் உத்தரவிட்டிருப்பதாகவும், ஆனால் தனது அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி அதனை நீர்த்துப் போகச் செய்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது கூடுதல் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. 

    ஏனெனில் 4000ம் மாதாந்திர அட்டைகள் என்றால் நாளொன்றுக்கு 28ஆயிரம் ரூபாய், மாதத்திற்கு 8.68லட்சம் ரூபாய் ஆவினுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வேலியே பயிரை மேய்ந்த கதை போல் அமைந்துள்ளது உதவிப் பொதுமேலாளர் சிவக்குமார் அவர்களின் செயல்பாடுகள்.

    மேலும் நடப்பாண்டில் ஆவினில் பால் கொள்முதல் சுமார் 10லட்சம் லிட்டர் வரை குறைந்து போன காரணத்தால் நெய் உற்பத்திக்கான வெண்ணெய்க்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டு, நெய் உற்பத்தியும் பாதிக்கப்பட்டதால் தீபாவளி சமயத்தில் நெய் விற்பனையிலும் தட்டுப்பாடு ஏற்படும் என்பதை கவனத்தில் கொண்டு ஆவினில் உற்பத்தியாகும் நெய்யை மொத்தமாக யாருக்கும் விற்பனை செய்யக் கூடாது, நேரடி ஆவின் பாலகங்கள் மூலம் சில்லறையாக மட்டுமே விற்பனை செய்ய வேண்டும், அவ்வாறு ஆவின் நேரடி பாலகங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் போது நுகர்வோருக்கும் தீபாவளி பண்டிகை சமயத்தில் நெய் தட்டுப்பாடின்றி வழங்க முடியும் அத்துடன் மொத்த விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் ஒரு லிட்டர் நெய்க்கான லாபத் தொகை 64.00ரூபாய் (WSD to MRP) ஆவினுக்கே கூடுதல் வருவாயாக கிடைக்கும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்களும், நிர்வாக இயக்குனர் சுப்பையன் ஐஏஎஸ் அவர்களும் உத்தரவிடிருந்தனர்.

    ஆனால் சிவக்குமார் அவர்களோ பால்வளத்துறை அமைச்சர் மற்றும் நிர்வாக இயக்குனரின் உத்தரவை காற்றில் பறக்க விட்டு, விட்டு சென்னையில் உள்ள குறிப்பிட்ட ஒரே மொத்த விநியோகஸ்தருக்கு மட்டும் சுமார் 7கோடி ரூபாய்க்கு நெய் மொத்தமாக விற்பனை செய்து ஆவினுக்கு சுமார் 77லட்சம் ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தி ஆதாயம் அடைந்துள்ளதோடு பால் பொருட்கள் விநியோகம் செய்யும் வாகனங்கள் இவரது பினாமிகளின் பெயரில் இயக்கப்படுவதாகவும், பெரும்பாலும் இவர் பால் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு அறையில் இருப்பதாகவும், அலுவலகத்திற்கு தினசரி காலை 11.00மணிக்கு மேல் தான் வீட்டிலிருந்தே அவர் கிளம்புவதாகவும் கூறப்படுகிறது.

    இதே உதவி பொது மேலாளர் தான் கடந்த அதிமுக ஆட்சியில் 2019-2020ம் நிதியாண்டில் தீபாவளி பண்டிகையையொட்டி உயரதிகாரிகள், அமைச்சர்களுக்கு ஆவின் சார்பில் தீபாவளி பரிசளிக்க லெதர் பேக் வாங்கிய வகையில் முறைகேடுகள் செய்தது கண்டு பிடிக்கப்பட்டு கூட்டுறவு தணிக்கைத்துறையின் அறிக்கையில் அவர் மீது கடுங்குறையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதும், அதற்கும் அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    அதுமட்டுமின்றி கடந்த அதிமுக ஆட்சியில் காமராஜ் ஐஏஎஸ் அவர்கள் ஆவின் நிர்வாக இயக்குனராக இருந்த போது மொத்த விநியோகஸ்தர்கள் முறையை ரத்து செய்து சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் (C/F) எனும் நடைமுறையை கொண்டு வந்து அதன் மூலம் ஆவினுக்கு சுமார் 28கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட காரணமாக இருந்த குழுவில் இவரின் பங்கு மிக முக்கியமானதாகும்.

    தற்போது உதவி பொது மேலாளராக இருப்பதால் அதற்கடுத்து எப்படியும் ஆவினில் பொதுமேலாளராகி விட வேண்டும் என்கிற எண்ணத்தில் காய்களை நகர்த்தி வரும் சிவக்குமார் அவர்கள், வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களால் துவக்கப்பட்ட "The Institute of Rural Management Anand" (IRMA) ல் படித்து விட்டு வரும் இளம் தலைமுறையினர் எவரும் ஆவினில் பொது மேலாளர் ஆகி விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து அவர்களாகவே அங்கிருந்து வேலையை விட்டு போகும் சூழலை அவர் உருவாக்கி நெருக்கடி தந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    கடந்த அதிமுக ஆட்சியின் போதும் சிவக்குமார் மீது கடுமையான புகார்கள் வந்த காரணத்தினால் வள்ளலார் ஐஏஎஸ் அவர்கள் நிர்வாக இயக்குனராக இருந்த போது அவரை சென்னையில் இருந்து திருச்சிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். ஆனால் அவரோ தனது அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி திருச்சியில் பணியில் சேராமலேயே மீண்டும் சென்னைக்கே பணி மாறுதல் வாங்கி வந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆட்சியிலும், தற்போதைய ஆட்சியிலும் ஆவினில் நடைபெற்று வரும் முறைகேடுகளுக்கு காரணகர்த்தாகவாக விளங்கி வேலியே பயிரை மேய்ந்த கதை போல் செயல்பட்டு, பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களின் உழைப்பினால் வளர்ந்து ஆவினில் இருந்து ஊதியம் பெற்றுக் கொண்டே உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்து வரும் சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணை உதவி பொது மேலாளர் சிவக்குமார் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad