Header Ads

  • சற்று முன்

    சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு.

    எந்த அதிகாரியிடம், லஞ்சப் பணத்தை கொடுக்க வேண்டும் என்று கேட்ட தி.மு.க. பெண் கவுன்சிலர்.....

    சிவகாசி : வீட்டுத் தீர்வை பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு உள்ளிட்டவைகளுக்கு லஞ்சம் கேட்பதாகவும், லஞ்சப் பணத்தை எந்த அதிகாரியிடம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு பணத்துடன் வந்த தி.மு.க. பெண் கவுன்சிலரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியின் மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு விவதாங்கள் நடத்தப்பட்டு, 99 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், திருத்தங்கல் பகுதியில் உள்ள 5வது வார்டு தி.மு.க. கட்சியின் பெண் கவுன்சிலர் இந்திராதேவி பேசும்போது, தனது வார்டு பகுதியில் வீட்டுத் தீர்வைக்கு பெயர் மாற்றம் செய்வதற்காகவும், குடிநீர் இணைப்பிற்கு பெயர் மாற்றம் செய்வதற்காகவும், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு, 11 பேர் மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். முறைப்படி மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், ஒவ்வொரு மனுவிற்கும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்சமாக கேட்டுள்ளனர். பணம் கொடுத்தால் தான் பெயர் மாற்றம் செய்ய முடியும் என்று கூறிய அதிகாரிகள் மனுக்களை கிடப்பில் போட்டுள்ளனர். எனது வார்டில் வசிக்கும் மக்களிடம் லஞ்சம் கொடுக்க பணம் இல்லாததால், அதிகாரிகள் கேட்ட 11 மனுவிற்கான பணம் 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை நான் தருகிறேன். இந்த லஞ்சப் பணத்தை எந்த அதிகாரியிடம் கொடுக்க வேண்டும் என்று கூறினால் பணத்தை அவரிடம் கொடுக்கிறேன். வார்டு மக்களின் கோரிக்கை மனுவின் மீது உரிய நடவடிக்கை அப்போதாவது எடுக்கப்படுமா என்று கேள்வி கேட்டவாறு, கையில் கட்டாக பணத்தை வைத்துக் கொண்டு அதிகாரிகளை பார்த்து கேள்வி எழுப்பினார். இதனால் மாமன்ற கூட்டத்தில் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது. அப்போது மேயர் சங்கீதா இன்பம் பேசும்போது, உறுப்பினர் இந்திராதேவி கூறிய குற்றச்சாட்டின் மேல், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார். இதனையடுத்து கூட்டம் அமைதியாக நடைபெற்றது. 

    சிவகாசி மாநகராட்சியில் ஆளும் கட்சியை சேர்ந்த பெண் கவுன்சிலர் ஒருவர், மன்றக் கூட்டத்தில் கையில் கத்தையாக பணத்தைக் கொண்டு வந்து, எந்த அதிகாரியிடம் லஞ்சப் பணத்தை கொடுக்க வேண்டும் என்று கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad