Header Ads

  • சற்று முன்

    ஜல்லிகட்டு வழக்கில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இடையீட்டு மனுத் தாக்கல்

    உச்ச நீதிமன்ற உத்தரவால் தடை செய்யப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில் ஒன்றிய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு சட்டம் இயற்றி இருந்தது. தமிழக அரசின் இச்சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கூபா (Compassion Unlimited Plus Action - CUPA) உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்திருக்கின்றன.ஜல்லிகட்டு விவகாரத்தில் தமிழர்களின் பாரம்பரிய உரிமையை நிலைநாட்ட வேண்டி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இவ்வழக்கில் இடையீட்டு  மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.



    அம்மனுவில் சு.வெங்கடேசன் கூறியிருப்பதாவது " தமிழர்களின் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக ஜல்லிகட்டு உள்ளது. காதலையும் வீரத்தையும் போற்றிப்பாடிய தொன்மையான தமிழ் இலக்கியங்களில் ஜல்லிகட்டு 'ஏறுதழுவுதல்' எனும் பெயரில் இடம்பெற்றுள்ளது.  பன்னெடுங்காலமாக தமிழர்களுக்கு ஏறுதழுவுதல் மீதான  பிணைப்பு இந்நாள் வரைக்கும் தொடர்வதை இது காட்டுகிறது. ஸ்பெயின் போன்ற நாடுகளில் நடத்தப்பட்டு வரும் Bull fighting எனும் மாட்டுச் சண்டை விளையாட்டுகள் பெரும்பாலும் வணிக நோக்கில் விளையாடப்படுகின்றன. ஆனால், ஜல்லிகட்டு அப்படியில்லாமல் கலாச்சார நிகழ்வாக கடைபிடிக்கப்படுகிறது. இது உள்ளூர் கிராம நிர்வாகத்தால் மாவட்ட ஆட்சியர், வருவாய் அதிகாரிகள், கால்நடைத்துறை, மருத்துவர்கள் ஆகியோரின் மேற்பார்வையிலேயே நடத்தப்படுகிறது.

    வெளிநாடுகளில் மாடுபிடிச் சண்டையில் மாடோ அல்லது மனிதரோ உயிரிழப்பது பொதுவானதாகவும் அந்த விளையாட்டின் ஓர் அங்கமாகவும் உள்ளது. ஆனால், ஜல்லிகட்டு கால்நடைகளின் வளத்தை உயர்த்தவும் ஜல்லிகட்டு நடத்தப்படும் கிராமங்கள், அதற்காக மாடுகளை வளர்க்கும் கிராமங்களின் பொருளாதாரத்தையும் உயர்த்துவதற்குமான ஆதாரமாக உள்ளது. ஜல்லிகட்டுக்கு அனுமதி அளித்த அரசாணையால் நாட்டு மாடுகளின் இனப்பெருக்கம் மற்றும் தமிழர்களின் கலாச்சார பாரம்பரியம் பாதுகாக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் Convention of Protection of Cultural and Societal Rights, 1948ன் படி ஜல்லிகட்டை அனுமதிப்பது அவசியம்.  போலோ போன்ற விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும் குதிரைகளுக்கு ஊக்கமருந்து கொடுக்கப்படுகிறது. ஆனால், ஜல்லிகட்டில் காளைகளுக்கு எந்த ஊக்க மருந்தும் கொடுக்கப்படுவதில்லை. மேலும் ஜல்லிகட்டானது ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் பங்குபெறும் நிகழ்வாக இல்லாமல் தமிழர்கள் அனைவரும் பங்குகொள்ளும் கலாச்சார நிகழ்வாக உள்ளது.  ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பாரம்பரிய மொழி, அறிவு, வாழ்க்கைமுறை, பழக்க வழக்கங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் அடுத்த தலைமுறைக்கு அது கடத்தப்பட வேண்டும் என்பதையும் UNESCO வலியுறுத்துகிறது" என அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேற்கூறிய இக்காரணங்களைக் குறிப்பிட்டு ஜல்லிகட்டு விளையாட்டுக்கு அனுமதி வழங்கும் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட Writ Petition (C) No 24 of 2016 எனும் வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்துக்கொள்ள வேண்டும் எனக்கோரி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இடையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad