Header Ads

  • சற்று முன்

    ஆவின் பால் பண்ணைகளில் ஒப்பந்த வாகனங்கள் மூலம் அரங்கேறும் பால் திருட்டு, ஆளுங்கட்சி பிரமுகர்கள் ஒப்பந்தம் என்பதால் மூடி மறைப்பு




             பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு.

    மதுரை மத்திய பால் பண்ணையில் இருந்து மதுரை மண்டலத்தில் உள்ள பால் முகவர்களுக்கு 52வழித்தடங்களாக பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு பால் முகவர்களுக்கு ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யும் வாகனங்களுக்கான ஒப்பந்தம் பெரும்பாலும் ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கே வழங்கப்படுவதால் அவர்களின் அட்டூழியத்தை கேள்வி கேட்பார் எவருமில்லை.

    இந்த நிலையில் மதுரை மத்திய பால் பண்ணையில் ஒப்பந்த தொழிலாளர்கள் சரிவர வேலைக்கு வராததால் அங்கே உற்பத்தியாகும் ஆவின் பால் பாக்கெட்டுகளை பிளாஸ்டிக் டப்புகளில் அடுக்கி ஏற்றிச் செல்லும் பணிகளை ஒப்பந்த வாகனங்களின் ஓட்டுநர்கள், கிளீனர்களே மேற்கொள்வதாகவும், அதனால் பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யும் ஆர்டர் அளவை விட அதிகமான பாலினை தங்களின் வாகனங்களில் அவர்கள் திருட்டுத்தனமாக ஏற்றிச் செல்வதாகவும், அதனை ஆவின் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை எனவும், அதையும் மீறி தவறுகளை தட்டிக் கேட்கும் நேர்மையான அதிகாரிகளுக்கு ஆளுங்கட்சி பிரமுகர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும்   கூறப்படுகிறது.

    அந்த வகையில் தினசரி குறிப்பிட்ட அளவை விட பலநூறு லிட்டர் (டீமேட்) பாலினை திருடிச் சென்று மதுரையில் பல்வேறு பகுதிகளில் உள்ள தேனீர் கடைகளுக்கும், உணவகங்களுக்கும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில் இருந்து லிட்டருக்கு 10ரூபாய் வரை குறைவான விலையில் வழங்கி வருவதாகவும் கூறப்பட்ட நிலையில் நேற்று (13.11.2022) எண் 5, 7வழித்தடங்கள் மற்றும் இரண்டு வழித்தட வாகனங்களில் ஒன்றில் 120லிட்டர் மற்ற வாகனங்களில் 36லிட்டர், 26லிட்டர் என ஆவின் டீமேட் பால் பாக்கெட்டுகளை திருடிச் சென்ற கயவர்களின் கைவரிசை கையும் களவுமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் பால் திருட்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒப்பந்த வாகனங்கள் ஆளுங்கட்சியான திமுக பிரமுகருடைய என கூறப்படும் நிலையில் இரண்டு வாகனங்களில் மட்டும் தலா 60லிட்டர் வீதம் வெறும் 120லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டுகள் மட்டுமே களவாடப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டதாக ஊடகங்களுங்கு செய்தி வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

    எனவே மதுரை மத்திய பால் பண்ணையில் பால் திருட்டில் ஈடுபட்ட ஆளுங்கட்சி பிரமுகரின் வாகன ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்வதோடு, பால் திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட அந்த ஒப்பந்த வாகனத்தை பறிமுதல் செய்தும், பால் திருட்டில் ஈடுபட்ட ஒப்பந்த வாகன ஊழியர்களை கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அத்துடன் தற்போது நம் கவனத்திற்கு வந்திருப்பது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆவின் பால் பண்ணைகளிலும் நடைபெற்று வரும் முறைகேடுகளில் வெறும் 0.000001%மட்டுமே. கண்டுபிடிக்கப்படாத அல்லது அதிகாரிகளால் கண்டு கொள்ளப்படாத முறைகேடுகள் தினமும் கணக்கிலடங்காமல் நடைபெற்று வருகிறது.

    இதனை தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து பால் கொள்முதல் நிலையங்கள், ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் பண்ணைகளில் உற்பத்தி செய்யுமிடம், பதப்படுத்துதல், லோடு ஏற்றும், இறக்கும் இடங்கள் என அனைத்து இடங்களிலும் சிசிடிவி காமிரா பொருத்தி அதனை ஒரே கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கக் கூடிய வகையில் அதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். அதுமட்டுமின்றி கொள்முதல் செய்யப்பட்ட பாலினை ஏற்றி வரும் டேங்கர் லாரி மற்றும் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யும் டெம்போ வாகனங்களின் ஒப்பந்தத்தில் ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடு இல்லாமலும், ஒருமுறை ஒப்பந்தம் எடுத்தவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே அனுமதி அளிப்பதும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் அந்த ஒப்பந்தத்தை வழங்கக் கூடாது என்பதையும் விதிமுறையாக வைக்க வேண்டும்.

    இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒப்பந்தம் வழங்கப்படும் போது முறைகேடுகளை ஆதரிக்கும் அதிகாரிகளோடு ஒப்பந்ததாரர்கள் கரம் கோர்த்து கொண்டு மிகப்பெரிய அளவில் முறைகேடுகளை செய்து வருகின்றனர் என்பதற்கு சிறந்த உதாரணமாக சென்னையில் உள்ள மொத்த விநியோகஸ்தர்களை கூறலாம். ஏனெனில் கிட்டத்தட்ட 22ஆண்டுகளாக மாற்ற முடியாத சக்திகளாக அவர்களே மொத்த விநியோகஸ்தர்களாக இருப்பதும், பால்வளத்துறை அமைச்சராக எவர் வந்தாலும் அவர்களை பணத்தால் வீழ்த்தி அவர்கள் மூலம் ஆவின் நிர்வாக இயக்குனர் முதல் அடிமட்ட அதிகாரிகள் வரை தங்களின் கைக்குள் வைத்துக் கொண்டு காரியத்தை சாதித்துக் கொள்வதும் தொடர்கதையாக நடந்து வருவதாக நேர்மையான அதிகாரிகளால்  கூறப்படுகிறது. 

    எனவே இதையெல்லாம் தடுக்க குளிர்சாதன அறையை விட்டு களத்திற்கு செல்லாமல் இருக்கும் ஆவினில் உள்ள அனைத்து தரப்பு அதிகாரிகளும் பால் கொள்முதல் நிலையங்கள், பால் பண்ணைகள், பால் முகவர்களின் விற்பனை நிலையங்கள் என தினமும் களத்திற்கு சென்று பணியாற்றுமாறும், அவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிட மாறுதல் கட்டாயம் அமுல்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிடுமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad