Header Ads

  • சற்று முன்

    நாள் பதிவேடே இல்லாத அய்யலூர் பேரூராட்சி அலுவலகம்!! நொந்துகொள்ளும் ஆர்.டி.ஐ ஆர்வலர்!



    திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், அய்யலூர் அருகே வேங்கனூரை சேர்ந்தவர் செம்.மகிடேஸ்வரன். இவர் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர். இவர் அய்யலூர் பேரூராட்சியின் சில ஆவணங்களை நேரடியாக கள ஆய்வு செய்ய விண்ணப்பித்திருக்கிறார்.

    ஆனால் இவரின் மனு காரணமே இல்லாமல் பல மாதங்களாக அலைகழிக்கப்பட்டிருக்கிறது. பிறகு மேல்முறையீட்டின் மூலம் கள ஆய்வுக்கான வாய்ப்பை பெற்ற இவர் பேரூராட்சியின் நாள் பதிவேட்டை பார்வையிட கேட்டிருக்கிறார். இதில்தான் பேரூராட்சியின் தினசரி வரவு செலவு கணக்கு விபரங்கள் பதியப்பட்டிருக்கும். ஆய்வின் போது அலுவலகத்தில் இருந்த இளநிலை உதவியாளர் அல்லிமுத்து முறையான பதிலளிக்காமல் முழித்திருக்கிறார். ஆய்வின் போது பொது தகவல் அலுவலராக இருந்து கடமையாற்ற வேண்டிய பேரூராட்சி செயல் அலுவலர் அலுவலகத்தில் இல்லாததால் அவருக்கு போன் செய்து நாள் பதிவேடு குறித்து கேள்வி எழுப்புகையில் உரிய பதிலளிக்காமல் இடையிலேயே போனை கட் செய்துள்ளார். 

    பிற ஆவணங்களையாவது பார்வையிடலாம் என்றால் பேரூராட்சி தரப்பிலிருந்து எவ்வித ஒத்துழைப்பும் இல்லாததால் வெறுமனே திரும்ப வேண்டியதாகி விட்டது என்கிறார்.   கிராமப்புறங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் பொது தகவல் அலுவலர்களாக இருப்பவர்களுக்கு அல்லது தற்காலிகமாக அத்தகைய பொறுப்பு வகிப்பவர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த புரிதலோ தெளிவோ இல்லை. அதே சமயம் இத்தகைய ஆய்வுகளின் மூலம் பல மோசடிகள் அம்பலமாவதற்கும் வாய்ப்புகளுண்டு. அதுதான் இதுபோன்ற அலைகழிப்புகள் மற்றும் மறுப்புகளுக்கு காரணம் என்ற மகிடேஸ்வரன் இதுகுறித்து மாநில தகவல் ஆணையருக்கு மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். சாதாரண நாள் பதிவேட்டை பார்வையிட கேட்டதற்கே திருதிருவென முழித்து போக்கு காட்டும் அய்யலூர் பேரூராட்சி நிர்வாகம் இன்னும் முக்கியமான ஆவணங்களை ஆய்வு செய்யக் கேட்டால் என்ன முழி முழிக்குமோ என்று நகைப்புடன் கண்ணடிக்கின்றனர் அய்யலூர் பகுதி வாழ் பொதுமக்கள்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad