Header Ads

  • சற்று முன்

    மதச்சார்பற்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை சமஸ்கிருத-வேதமயமாக்கும் மோடி அரசு - சு.வெங்கடேசன் எம்.பி., நேர்காணல்

    இந்திய அரசியலமைப்புச் சட்ட தினம் ஆகும். இந்த நாளைக் கொண்டாடுவது என்பது,  அரசியலமைப்புச் சட்டத்தையும் அது உறுதிசெய்துள்ள மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு உள்ளிட்ட விழுமியங்களையும் பாதுகாப்பதற்காக நாட்டு மக்கள் உறுதியேற்றுக் கொள்வதே ஆகும். ஆனால், ஒன்றிய பாஜக அரசு இந்த ஆண்டு நவம்பர் 26 அரசியலமைப்புச் சட்ட தினத்தையொட்டி, இந்தியா என்பது முழுக்க முழுக்க ஒரு வேத நாகரிக நாடு என்பதை நிறுவுவதற்கான குரூர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்காக இந்தியாவின் வரலாற்றையே திரித்து எழுதும் நோக்குடன், இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎச்ஆர்) மூலமாக கருத்துரு ஒன்றை உருவாக்கி அதை அனைத்து அரசுத் துறைகள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றிற்கு அனுப்பி, அந்த கருத்துருவின் அடிப்படையில் உறுதியேற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துமாறு வழிகாட்டியுள்ளது.

    ஐசிஎச்ஆர் உருவாக்கிய ‘‘பாரதம்: ஜனநாயகத்தின் தாய்’’ (பாரத் : லோக் தந்திர கி ஜனனி) என்ற தலைப்பிலான இந்த கருத்துரு, கடந்த நவம்பர் 7 அன்று ஒன்றிய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கவுபார் மூலமாக அனைத்துத் துறை செயலாளர்களுக்கும், நவம்பர் 9 அன்று நாடாளுமன்ற அலுவல் துறை செயலாளர்  குடே ஸ்ரீனிவாஸ் மூலமாக அனைத்துத் துறை செயலாளர் களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இதே கருத்துரு பல்கலைக்கழக மானியக்குழு சார்பாக நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைச் சிதைக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த கருத்துரு, பண்டைய இந்தியா என்பது முழுவதும் ஒற்றை அடையாளம் கொண்டதாக இருந்தது என்ற ஆர்எஸ்எஸ் கருத்தியலை வலிந்து திணிக்கும் முயற்சியாகும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு சாடியுள்ளது.

    இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் உருவாக்கி யுள்ள அந்த கருத்துருவில் வேதகால நாகரிகமே ஒட்டு மொத்த இந்தியாவின் நாகரிகமாக இருந்தது என்றும்  வேதங்களும் உபநிஷதங்களும் உலகின் பிற நாடுகளை விட இந்தியாவில் ஜனநாயகத்தை உருவாக்குவதில் முன்னின்றன என்றும், அடிப்படையில் விரிந்து பரந்த பன்முகத் தன்மை இருந்தாலும் இந்து என்ற உணர்வுடன் கூடிய பெரிய ஒற்றைச் சமூகமாகவே இந்தியா இருந்தது என்றும் முற்றிலும் உண்மை வரலாற்றுக்கு விரோதமான திரிப்புகள் இடம்பெற்றுள்ளன. வேதகாலத்திலிருந்து உருவான இந்திய ஜனநாயக அமைப்பு முறையில் பிரஜா தந்திரா (ஜனநாயகம்); ஜன தந்திரா (மன்னராட்சி அல்லாத, மக்களால் ஆளப்பட்ட ஆட்சி முறை); லோக தந்திரா (சமூகத்தின் நலனை நோக்கி உருவாக்கப்பட்ட ஒரு சமூகக் கட்டமைப்பு) ஆகிய மூன்று அம்சங்கள், ‘பாரதத்தின்’ ஜனநாயக வளர்ச்சிக்கு அடித்தள மாக இருந்தன என்று, முழுக்க முழுக்க இந்துத்துவா கருத்தியலை முன்வைத்து, இதுதான் இந்தியாவின் அரசியல் சாசனத்திற்கு அடிப்படை என்று, இதுவரை இல்லாத அளவிற்கு அறிவியல் மற்றும் பகுத்தறிவுச் சிந்தனைகளுக்கு எதிரான கருத்துக்களை இந்திய வர லாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் உருவாக்கி அனுப்பியுள்ளது.  இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் அளித்துள்ள சிறப்பு நேர்காணல்:

    நவம்பர் 26- அரசியலமைப்புச் சட்ட தினத்தை ஆர்எஸ்எஸ் -  பாஜக குறிவைப்பது ஏன்?

    அவர்கள் இந்தியர்கள் மீது தொடுக்கும் தத்துவார்த்த தாக்குதலை தடுக்கும் பெரும் அரணாக இருப்பது இந்திய அரசியல் சாசனம். இந்திய குடியரசு தினம் ஜனவரி 26 ஆகும். இதுதான், அரசியல் சாசனத்தை நாடு அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்த நாள். ஆனால், இந்த நாளை, அரசியலமைப்புச் சட்டம் குடியரசு தலைவரிடம் ஒப்படைக்கப்பட்ட நவம்பர் 26க்கு மாற்ற வேண்டும் என்று 2015-இல் பாஜக அரசு கூறியது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஆட்சி யாளர்களிடம், அரசியல் சாசனத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் ஒப்படைத்த நாளாக நவம்பர் 26 இருந்தது.  ‘‘குடியரசு’’ என்ற கருத்தாக்கத்தின் முக்கியத் துவத்தை குறைக்கும் முயற்சியே இது என்று பலரும் அன்று தெரிவித்தனர்.  இன்றோ அதன் அடுத்தகட்ட தாக்குதலைப் பார்க்க முடிகிறது. ஜனவரி 26, இல் இருந்து நவம்பர் 26 க்கு நகர்ந்து இன்று அம்பேத்கரின் தலைமையிலான அரசியல் சாசனக்குழு எந்த அடிப்படைகளைத் தகர்த்து ஜனநாயக மாண்பு களை இந்நாட்டின் விதியாக மாற்றினார்களோ அந்த விதிகளின் மீது ஈவிரக்கமற்ற தாக்குதலை பாஜக ஆட்சியாளர்கள் தொடுத்துள்ளனர். வேதநாகரிகம், சனாதனம், மனு(அ)தர்மம் ஆகியவற்றிற்கு எதிராக முழங்கிய அம்பேத்கரின் சிந்தனைகளை வெளியேற்றும் நோக்கத்துடன் அரசி யலமைப்புச் சட்டத்திற்கு வேறொரு அர்த்தத்தை கற்பிக்க பாஜக ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர். இந்திய குடியரசு - அரசியல் சாசனம் - அம்பேத்கரின் பங்களிப்பு ஆகிய மூன்றையும் ஒரே நேரத்தில் அடித்துத்  தகர்க்கிற நுட்பமான கொடிய அரசியலே இப்பொழுது அனுப்பப்பட்டுள்ள கருத்துரு.

    இம்முயற்சி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தனித்தன்மையின் மீதான தாக்குதல் என்று எப்படி சொல்கிறீர்கள்?

    உலகின் பல சட்ட நூல்கள் தனது முகவுரையில் ஏதாவது ஒரு தெய்வத்தின் பெயரையோ அல்லது மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியைக் குறிப்பிட்டோ துவங்குகின்றன. ஆனால் இந்திய அரசியல் சாசனத்தின் முதல் வரி, ‘‘இந்திய மக்களாகிய நாங்கள் எங்களுக்கு நாங்களே உருவாக்கிக் கொண்ட சாசனம் இது’’ என்று தான் துவங்குகிறது. இதைத் தகர்ப்பதுதான் பாஜக அரசு  உருவாக்கியுள்ள கருத்துருவின் நோக்கம். ‘இந்திய அர சியலமைப்புச் சட்டமானது இந்திய மக்களுக்காக மக்களே  உருவாக்கிக் கொண்டதல்ல; மாறாக ஏற்கெனவே  இங்கு காலம் காலமாக நீடித்து வருகிற வேதகால கருத்தாக்கங்களின் நீட்சியாகத்தான் உருவானது; வேதகால மரபுதான் அரசியல் சாசனத்தின் அடிப்படை’  என்று, நிறுவும் முயற்சியாகவே வரலாற்று  ஆராய்ச்சிக் கவுன்சிலின் கருத்துரு உருவாக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது  டாக்டர் அம்பேத்கர் முழுக்க முழுக்க அதை ஆங்கிலத்தில் எழுதினார். அதில் சமஸ்கிருதச் சொல்லே இல்லை என்ற நிலை வருகிறது. அப்போதுதான் குடி யரசுத் தலைவரை பற்றி குறிப்பிடும் போது ‘ராஷ்ட்டிரபதி’ என்று சமஸ்கிருதத்தில் குறிப்பிட வேண்டும்  என அன்றைய இந்துத்துவா சக்திகள் கூப்பாடு போட்டனர். இந்தப் பிரச்சனைக்காக மிகப்பெரிய விவாதமே நடந்தது. அந்த விவாதத்தில் அம்பேத்கர், ஆங்கிலத்தில் ‘பிரசிடென்ட் ஆப் இந்தியா’ என்று தான் எழுதுவேன், சமஸ்கிருதத்தில் குறிப்பிட முடியாது என்று உறுதியாக நிராகரித்தார். எனவே, அரசியலமைப்புச் சட்டத்தில் சமஸ்கிருத வார்த்தையே இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது அதை ஒட்டுமொத்தமாக புரட்டிப்போடும் முயற்சியில் ஆர்எஸ்எஸ் - பாஜக ஈடுபட்டுள்து. லோக் தந்திரா, பிரஜா  தந்திரா ஆகிய இரண்டு சமஸ்கிருத பதங்களை முன்னி றுத்தி தற்போது, இந்திய அரசியலமைப்புச் சட்டமே இதன் அடிப்படையில் அமைந்ததுதான் என்று வலிந்து குறிப்பிட்டிருக்கிறார்கள். இதன் நோக்கம், அரசிய லமைப்புச் சட்டத்தை சமஸ்கிருதமயமாக்குவது; அதன் வழியாக வேதகால மரபே இந்திய மரபு என்று வலிந்து திணிப்பதே ஆகும். ஒட்டுமொத்தத்தில் சமஸ்கிருத வேத மேலாதிக்கத்தை நிறுவும் முயற்சியே இது.

    வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சிலின் கருத்துரு சொல்லும் மையக்கருத்து என்ன? அது மோசடியானதா?

    கருத்துத் தாளின் மையக் கருவே “லோக் தந்திர கி ஜனனி” என்பது ஆகும். அதாவது, ‘‘ ஜனநாயத்தின் தாய்’’  என்று பொருள். லோக் தந்திர என்பது சமஸ்கிருதச் சொல் ஆகும். தமிழை மேடையில் உதட்டால் புகழ்பவர்கள், வள்ளுவரைக் கொண்டாடுவது போல தமிழகம் வரும் போதெல்லாம் அரை குறை உச்சரிப்பில் குறளைக் கொல்பவர்கள், சித்தாந்தம் என்று வரும் போது தெளிவாக சமஸ்கிருதத்தை கையாள்வது என்பதே ஒரு அரசியல்தான். மொழி அரசியலும் கூட! வரலாற்று ஆராய்ச்சிக்கவுன்சில் கருத்துருவில், வேத கால ஜனநாயகம் என்று சொல்வது இன்று உள்ள நவீன ஜனநாயகத்திற்கு, குடியரசு மாண்புகளுக்கு எந்த  சம்பந்தமும் இல்லாதது. அந்தக் குறிப்பே அதை தெளிவு படுத்தவும் செய்கிறது. அது மூன்று சொல்லாடல்களை விளக்குகிறது. ஒன்று பிரஜா தந்திரா - இதற்கு பொருள் ஜனநாயகம் என்றும் விளக்கம் தருகிறது.

    அடுத்து, ஜன தந்திரா எனக் குறிப்பிட்டு, மக்கள் (எதிர்) ஆள்வோர் என்று கூறுகிறது. பிறகு லோக் தந்திரா பற்றி விளக்குகிறது. அது சமூகம் சார்ந்த (Community based) சமூக நலனுக்கான அமைப்பு என்கிறது. லோக் தந்திரா என்பது இந்திய அரசியல் சாசனம் வகுத்துள்ள ‘குடியரசு’ என்பதற்கு உடன்பாடானதா? லோக் தந்திராவில் நாடாளுமன்றத்திற்கு என்ன இடம்? நாடாளுமன்றத்திற்கு மேல் ஒருவர் இருப்பாரா? சமூகமே அடிப்படையானது என்றால் அதில் மதம், சாதிக்கான பாத்திரம் என்ன என்ற கேள்விகள் எழுகின்றன. ‘இந்து’ என்ற உணர்வுடன் கூடிய கலாச்சாரம்தான் பன்மைத்துவக் கூறுகளை ஒன்றிணைத்து “பாரதிய” கலாச்சாரத்தை புவி அரசியல் வரையறையாக (Geo Political definition) ஆக்கியது என்று கூறப்பட்டுள்ளது. இது பன்மைத்துவத்தை மறுதலிக்கிற, ஒற்றைப் பண்பாட்டை நிறுவ முனைகிற வரலாற்றுத் திரிபே ஆகும்.  “இந்து மனது” என்ற வார்த்தையையே அக்குறிப்பு பயன்படுத்துகிறது. பன்மைத்துவ இந்தியாவின் உரு வாக்கத்தில் “புத்த மனதுக்கு” இடம் இல்லையா? “சமண  மனதுக்கு” இடம் இல்லையா? “சித்தர் மனதுக்கு” இடம்  இல்லையா? “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று சொன்ன வள்ளுவ மனதுக்கு இடம் இல்லையா? “இந்து மனது” என்று இவர்கள் சொல்கிற பாரம்பரியத்தில் “சூத்திர மனது” க்கு, நால்வர்ண அடுக்கிற்குள்ளேயே இடம் தராத “பஞ்சமர் மனதுக்கு” என்ன இடம்?

    ஒரே பெரிய சமூகமாக இந்து சமூகம் இருந்து வந்துள்ளது என்ற கருத்து பற்றி...

    பாரதத்தில் பண்டைக் காலத்தில் இருந்தே ஒரே பெரிய  சமூகமாக - இந்து சமூகமாகவே இருந்து வந்துள்ளது என்பது அவர்களது நிகழ்கால அரசியல் தேவைகளுக்கு ஏற்ப வரலாற்றை வளைப்பதும், திரிப்பதும் ஆகும். இன்னும் சொல்லப் போனால் முறிப்பது ஆகும். பிராமணிய மதத்திற்கு எதிராக எத்தனை கலகங்கள்!  சைவ வைணவ மோதல்கள் எத்தனை! சமணர்கள் இரத்தம் வழிந்தோடிய மலைகள் எத்தனை! இந்து என்ற வரையறைக்குள்ளேயே ஒடுக்கப்பட்ட மக்கள் வரமாட்டார்கள், அவர்கள் பூர்வ பவுத்தர்கள் என்று பேசிய  அயோத்தி தாசர், அம்பேத்கர் போன்ற ஆளுமைகளின் எதிர்வினைகள் எத்தனை! இப்படி வரலாறு நெடுகிலும் பேச லாம். இந்திய நாட்டின் பன்மைத்துவத்தை முற்றிலும் மறுக்கிற “ஒரே பெரிய சமூகம்” என்ற வரையறுப்பு சித்தாந்த ரீதியான பெரும் தாக்குதல்.

    5000 ஆண்டுகளுக்கு முன்பே மக்களாட்சி இருந்தது என்று கருத்துரு கூருகிறதே...!

    5000 ஆண்டுகளுக்கு முன்பாக மக்களாட்சி இருந்தது  என்பது நவீன ஜனநாயகத்தின் வேர்கள் அல்ல. உடமை சமுதாயம் தோன்றாத காலங்களில் இருந்த “கண அமைப்பு”, அன்றைய பொருளாதார உற்பத்தி முறைமை யின் காரணமாக கூட்டு உழைப்பு, கூட்டுப் பகிர்வு என்பதே இயல்பான பண்புகளாக இருந்தன. உலகம் முழுக்க இப்படித் தான் ஆதி சமூகம் இருந்திருக்க முடியும். மதம் ஒரு நிறுவனமாக உருவாகாத காலம். அறிவியல்பூர்வமான பார்வையை மறுத்து இன்று அதை முன் வைப்பது மக்களாட்சியை கொண்டாடுவதற்காக அல்ல; மாறாகச் சிதைப்பதற்கே.

    மக்களாட்சி - சுயாட்சி என்ற கோட்பாடுகள், 5000 ஆண்டுகளுக்கு முன்பே வேதகாலத்திலேயே வேர் கொண்டுவிட்டன என்பதை ராக்கிகரி மற்றும் சனவுலி ஆகிய இடங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளதே?

    ராக்கிகரி மற்றும் சனவுலி ஆகிய இடங்கள் சிந்து சமவெளி நாகரிகத்தின் தொல் எச்ச இடங்கள் ஆகும். இதன் காலம் கிமு 2600 முதல் 1900 ஆகும். அதாவது இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முந்தையது. சிந்து வெளி நாகரிகத்தில் இருந்த ஆட்சிமுறை என்ன வென்று இதுவரை தொல்லியல் ரீதியாக அறியப்பட வில்லை. சிந்துவெளி நாகரிகத்தை வேதகால நாகரிகம் என திரிக்கிற வேலையை இந்துத்துவா கும்பல் தொடர்ந்து செய்து வருகிறது. வேத காலம் என்பது கிமு 1500 முதல் தான். அதுவும் பிற்கால வேத காலத்தில் சாதிய அடிப்படையில் இருந்த கிராம பஞ்சாயத்துக்கள் தான். ஒரே நேரத்தில் சிந்து வெளி நாகரிகத்தை வேத நாகரிகம் என்று சொல்வதும், வேதநாகரிகத்திலேயே மக்களாட்சி வேர் ஊன்றத் துவங்கிவிட்டது என்று சொல்வதும், அறி வுத்துறையில் நிகழ்த்தப்படும் அயோக்கியத்தனமான தாக்குதல்.

    ராக்கிகரி அகழ்வாராய்ச்சிக்கு ஏன் முக்கியத்துவம் தருகிறார்கள்?

    அகழ்வாராய்ச்சி நடைபெற்ற ராக்கிகரி மற்றும் சனவுலி ஆகிய இடங்களைப் பற்றி பேசும் இந்தக் கருத்துரு,  ஏன் கீழடி மற்றும் கொற்கையைப் பற்றி பேசத் தயாராக இல்லை என்ற கேள்வி எழுகிறது. ராக்கிகரியில் அகழாய்வு  நடைபெற்ற அதேகாலம்தான் கீழடியில் அகழாய்வு துவங்கிய காலம். கீழடியில் கிடைத்திருக்கிற 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எதிலும் எந்தக்  குறிப்பிட்ட பெருமதத்தின் அடையாளம் எதுவும் இல்லை. பெருமதங்கள் உருவாவதற்கு முன்பே உருவாகி வளர்ந்த  பண்பாடாக தமிழ்ப் பண்பாடு இருந்தது என்பதை அது உணர்த்துகிறது. கீழடியின் செய்திகள், இந்த இந்துத்துவா  சக்திகளின் நோக்கங்களுக்கு நேர் எதிராக அமைந்துள் ளன. ராக்கிகரியில் கிடைத்த பொருட்களுக்கு வேதகால  முத்திரையை இட முயற்சிக்கும் இந்த ஆட்சியாளர்கள் கீழடியில் அவர்களது விருப்பங்களுக்கு முற்றிலும் மாறான ஆதாரங்கள் கிடைத்திருப்பதால், இங்கு எந்தவிதமான வரலாற்றுத் தடயங்களும் கிடைக்கவில்லையென ஒரே போடாகப் போட முயற்சித்தது இந்திய அகழ்வா ராய்ச்சி துறையின் தலைமை.

    உபநிஷதங்களும் பகவத்கீதையும் மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றி அன்றைக்கே பேசிவிட்டன என்றும் கூறப்பட்டுள்ளதே....!

    மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றி பேசவில்லை. மக்களை அடக்கியாள மேல்வர்ணத்தவருக்கு இருக்கும் உரிமைகளைப்பற்றித்தான் இவை பேசுகின்றன. பிராமணியக் கோட்பாட்டின் தத்துவார்த்த விளக்க நூல்கள் தானே இவை. இவர்களின் கோட்பாட்டை தர்க்கத்தின் கண் கொண்டு - அதாவது அறிவுப் பூர்வமாக யார் கேள்வி எழுப்பினாலும் அவரது தலையை அறுக்க  வேண்டும் என விதி வகுத்துள்ள இந்தக் கூட்டம், எந்த உரிமையை யாருக்குக் கொடுத்தது? வரலாறு முழுக்க அடக்கப்பட்டவர்கள் எழுப்பிய உரிமைக்குரலை பறிக்கவும், மடைமாற்றவும் தான் கீதாஉபதேசங்கள் பயன்பட்டு வருகின்றன. கடமையைச் செய்ய கட்டாயப்படுத்துவதும் அதன் பலனை எதிர்பார்க்க உரிமையற்றவராக மாற்றியதும் தான் இந்த நூல்கள் செய்துள்ள திருப்பணிகள். உலகம் முழுவதும் அரசியல் அதிகாரமும் சமூக அதிகாரமும் மாறி மாறித்தான் வந்துள்ளது. ஆனால் இந்திய நிலப்பரப்பில் மட்டும்தான் கடந்த 1500 ஆண்டு களாக அரசியல் அதிகாரம் எத்தனையோ பேரிடம் கைமாறினாலும் சமூக அதிகாரம் சனாதன மேலாதிக்க கூட்டத்தின் கையில் மட்டுமே தக்கவைக்கப்பட்டது. இது போன்ற நிலை உலகில் வேறெங்கேயும் இல்லை. எவ்வளவு பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தாலும் தங்களது சமூக அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள இவர்களுக்கான மூலநூல்களாக பயன்பட்ட நூல் களைத்தான் இன்று அரசியல் சாசனத்தின் இடத்தை நோக்கி நகர்த்தும் சதி நடக்கிறது.

    இந்து தர்மம்’ என்று கருத்துருவில் இடம்பெற்றுள்ளது. அதன் பொருள்...!

    வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சிலின் கருத்துருவில் இந்து தர்மம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதுதான்  இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை என்று கூறப் பட்டுள்ளது. ‘இந்து தர்மம்‘ என்ற அடிப்படையிலான காப் பஞ்சாயத்து - அதாவது சாதி முறையுடன் கூடிய கிராமப் பஞ்சாயத்து மேன்மையானது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் எத்தனையோ தர்ம  முறைகள் இருந்துள்ளன. அவை அனைத்தையும் தகர்த்து  ஒற்றை முறைதான் இருந்தது என்று நிறுவும் முயற்சியே இது. இந்து தர்மம் வலுவாக இருந்ததால் தான், எத்தனையோ இஸ்லாமிய படையெடுப்புகள் நடந்த போதும், அது எந்தப் பாதிப்பும் இல்லாமல் அப்படியே நீடித்து வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் இந்தியாவின் வரலாற்றை வேதகாலம் என்ற குறிப்பிட்ட காலத்திலிருந்து மட்டுமே துவக்குகிறார்கள். இஸ்லாமியப் படையெடுப்பைப் பற்றிப் பேசுகிற இவர்கள்,  ஆரியப் படையெடுப்பைப் பற்றிப் பேச மறுக்கிறார்கள். நகர நாகரிகத்தையே அறியாத ஆரியர்கள், படை யெடுத்து,

    இங்கே வலுவாக நகர நாகரிகமாக வளர்ச்சி பெற்றிருந்த சிந்துவெளி நாகரிகத்தின் மீது பேரழிவை நிகழ்த்தியதைப் பற்றிப் பேச ஏன் மறுக்கிறார்கள்? வரலாறு இவர்கள் விரும்பும் ஆண்டிலிருந்து துவங்குவது அல்ல. முழுமையான வரலாறு மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டிய அவசியம் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. அசோகரின் அறம் போற்றும் சின்னமான நான்கு சிங்கம் கொண்ட இலட்சினையை இந்தியாவின் தேசியச்  சின்னமாக நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். சிங்கங்களின் பற்களை அகோர வடிவமாக்கி குருதி குடிக்கும் கொடிய விலங்காக உருமாற்றி, பண்பட்ட இந்திய நிலத்தை தங்களின் அரசியலுக்கான வேட்டைக்காடாக மாற்றும் முயற்சிதான் இன்று எல்லா வடிவிலும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த கருத்துருவும் அந்த முயற்சியின் ஒரு பகுதி தான். இதை மக்களிடையே அம்பலப்படுத்தி, மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக இந்தியாவையும் அதன் அடித்தளமாக விளங்கும் அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்க உறுதியேற்போம்! களத்தில் செயலாற்றுவோம்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad