Header Ads

  • சற்று முன்

    சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில், திமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதம்.....

    சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியின் சாதாரண கூட்டம், மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் விக்னேஷ்பிரியா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் துவங்கியவுடன், மாமன்றத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ள திமுக உறுப்பினர்கள், மாநகராட்சியில் சுகாதாரப் பணிகள் முற்றிலும் நடைபெறாத நிலை உள்ளது என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வார்டு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்றுவதற்கு போதிய வாகன வசதிகள் இல்லாமல் இருக்கிறது. இந்த நிலையில் ஆணையாளர், மேயர், துணை மேயருக்கு புது கார்கள் வாங்கியது அவசியமா என்று கூறி கடும் வாக்குவாதம் செய்தனர். இதற்கு பதிலளித்து பேசிய ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி பொது நிதியிலிருந்து கார்கள் வாங்கப்படவில்லை. அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தனி நிதியில் இருந்து தான் கார்கள் வாங்கப்பட்டுள்ளது என்று கூறினார். பெரும்பாலான உறுப்பினர்கள் தங்களது பகுதிகளில், சுகாதாரப்பணிகள் முற்றிலும் செய்யப்படாமல் உள்ளது.

    இதனால் வார்டுகளுக்குள் உறுப்பினர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தூய்மை பணிகளை விரைந்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மாநகராட்சியில் பெரும்பாலான அதிகாரிகள் எந்தவித பணிகளிலும் ஈடுபடுவது கிடையாது. சரியாக வேலை பார்க்காத அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை உடனடியாக மாற்று இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, சரியாக வேலை பார்க்காத ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மண்டல தலைவர் சூரியா பேசும்போது, மாநகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போதுள்ள அலுவலகத்தில் லிப்ட் வசதி செய்வதற்காக 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பது தேவையற்றது, மாநகராட்சியின் மற்ற அத்தியாவசியமான பணிகளுக்கு இந்த நிதியை செலவழிக்க வேண்டும் என்று பேசினார். திமுக உறுப்பினர் ஞானசேகரன் பேசும்போது, மாநகராட்சியில் 400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருந்தும் குப்பைகள் அகற்றும் பணி, சாக்கடை அடைப்புகள் அகற்றும் பணிகள் முற்றிலும் இல்லாமல் உள்ளது. இதனால் சிறிய மழை பெய்தாலே ஊர் முழுவதும் சாலைகளில் சாக்கடை தண்ணீர் ஓடுகிறது. மேலும் கட்டிட வரைபட அனுமதி வழங்குவதில் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது, முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார். இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் பதில் கூறினார். கூட்டத்தில் பேசிய மாமன்ற உறுப்பினர்கள் சிலர்  மாநகராட்சி பகுதிகளில் அதிக அளவில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது என்று கூறி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகளின் முன்பு கொண்டுவந்து போட்டனர். இதனால் கூட்டத்தில் கடும் சலசலப்பு ஏற்பட்டது. அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மேயர் சங்கீதா இன்பம், ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி கூறினர்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad