வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியது மதுரை மாவட்டம்! மாற்றுத்திறனாளி முகாம்களில் 20000 பேர் பங்கேற்று பலனடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார முகாம் செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 12 வரை 14 நாள்களில் 15 முகாம்கள் நடந்துமுடிந்துள்ளன. ஒன்றிய அரசின் சமூகநலன் மற்றும் அதிகாரம் வழங்கல் துறை, மாநில அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை ஆகியவற்றின் திட்டங்களை இணைத்து மிகவிரிவான முறையில் இம்முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இம்முகாம்களில் 17796 பேர் பங்கெடுத்துப் பயனடைந்துள்ளனர். இதுபோக சிறப்புப்பள்ளி மாணவர்கள் 2500 பேரின் தேவைகளையும் இத்துடன் இணைக்கவுள்ளோம். மொத்தத்தில் 20000 பேர் பங்கேற்றுப் பலனடைந்த முகாம்களாக இவை நடந்து முடிந்துள்ளன. தமிழகத்தில் இதுவரை நடந்த முகாம்களிலே மிக அதிகமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயனடைந்த முகாம்கள் இவையேயாகும். இம்முகாம்களில் அலிம்கோ மூலம் செயற்கை உபகரணங்கள் வழங்க தேர்வு செய்யப்பட்டு, அளவீடு செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2546 ஆகும். இவர்களுக்குரிய கருவிகளை 45 நாள்களில் தயாரித்துத் தரும் பொறுப்பினை ஒன்றிய அரசின் சார்பில் அலிம்கோ ஏற்றுள்ளது. இந்தக் கருவிகளின் மதிப்பு சுமார் 8 கோடி ரூபாய் இருக்கும். இது தவிர இரயில், பேருந்துப் பயணச்சான்று அட்டை பெற்றவர்கள் 3043 பேர். இரு சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் 500 பேர். தனித்துவ அடையாள அட்டை( UDID) 2450 பேர். வங்கிக் கடன் மானியம் 250 பேர். மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் 226 பேருக்கு தர தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இம்மாபெரும் முகாம்களை வெற்றிகரமாக்க உழைத்திட்ட மதுரைமாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், அலிம்கோவின் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 20 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளை முகாம்களுக்கு அழைத்து வந்த வகையில் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இம்முகாம்களுக்கு வந்து போயுள்ளனர். அனைவருக்கும் தேவையான உதவிகள் செய்வதில் மிகச்சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர்கள், மாற்றுத்திறனாளிகளின் சங்கங்கள் ஆகிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதனை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்ற கடந்த ஒருமாத காலமாக உழைத்திட்ட எங்கள் இயக்கத்தோழர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றிகள். 15 முகாம்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக செய்துகொடுத்து உதவிய ரோட்டரி கிளப் நண்பர்களுக்கும் எனது அன்பான நன்றி. சமகாலத்தில் மதுரையில் மகத்தானதொரு நிகழ்வாக இம்முகாம்கள் நடந்துமுடிந்துள்ளன. மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை