கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான்பட்டி கிராம மக்கள் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தை முற்றுகை
கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான்பட்டியில் உள்ள கோயில் மற்றும் மயானத்தை சுற்றி கம்பி வேலி அமைப்பதை கண்டித்துகிராம மக்கள் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தை முற்றுகை இட்ட தால் பரபரப்பு....
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின் புதூர் காவல் நிலையத்தை முடுக்குமீண்டான்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் ஊர் நாட்டாண்மை லெட்சுமணன், முடுக்குமீண்டான்பட்டி ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் சந்தனமாரியம்மாள், புரட்சி பாரதம் மாவட்ட இளைஞரணி செயலாளர் கலைச்செல்வன், ராஜன் தலைமையில் முற்றுகையிட்டு தரையில் அமர்ந்தனர். அவர்கள், தாங்கள் வணங்கி வரும் கல்லுடையப்பன் சாமி கோயில், அப்பகுதியில் உள்ள மயானம் ஆகியவற்றை சுற்றி வேலி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.
பின்னர் அவர்கள் காவல் நிலையத்தில் வழங்கிய மனு விபரம்: முடுக்குமீண்டான் கிராமத்தில் எஸ்.டி.ஏ. சர்ச் தெருவில் ஆதிதிராவிடர் சமுகத்தை சேர்ந்த சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தின் கிழக்கே அமைந்துள்ள கல்லுடையப்பன் சாமி கோயிலுக்கு ஆண்டுதோறும் கொடை விழா நடத்தி அன்னதானம் வழங்கி வருகிறோம். இந்த கோயிலின் தென் பகுதியில் எங்களது சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட மயானம் அமைந்துள்ளது. இந்த மயானத்தை காலம் காலமாக பயன்படுத்தி வருகிறோம்.
இந்நிலையில் நேற்று (29-ம் தேதி) கல்லுடையப்பன் சாமி கோயில் மற்றும் மயானத்தை சுற்றிலும் நிலக்கற்களை நட்டி, கம்பி வேலி அமைக்கும் பணி நடந்தது. இதையறிந்த நாங்கள் அங்கு சென்று கேட்டபோது, நில புரோக்கர் ஒருவர் அமைக்க சொன்னதாக கூறினர். அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, தான் தூத்துக்குடியில் இருக்கிறேன். என்னால் அங்கு வர முடியாது என கூறிவிட்டார். எனவே, கல்லுடையப்பன் சாமி கோயில் மற்றும் மயான இடத்தை மீட்டு தர வேண்டும். வேலி அமைக்கும் நில புரோக்கர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்திருந்தனர். அவர்களிடம் காவல் ஆய்வாளர்கள் விஜயகுமார், முத்து ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், வட்டாட்சியர் மற்றும் தலைமை நில அளவையரை கொண்டு இடத்தை அளந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
கருத்துகள் இல்லை