Header Ads

 • சற்று முன்

  தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளர் சம்மேளனப் (ஏஐடியூசி) பொதுக்குழு கூட்டம் 30.05.2022 அன்று நீலகிரி மாவட்டம், வெல்லிங்டன் ஐஎம்ஏ அரங்கில் நடைபெற்றது

  உள்ளாட்சி தொழிலாளர் குறை தீர் ஆணையம் அமைத்திடுக! புதிய தலைமையின் கொடூர செயல்களைத் தடுத்திடுக! தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளர் சம்மேளனம்(ஏஐடியூசி)

  ஜூன்-21 அன்று தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்

  தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளர் சம்மேளனப் (ஏஐடியூசி) பொதுக்குழு கூட்டம் 30.05.2022 அன்று நீலகிரி மாவட்டம், வெல்லிங்டன் ஐஎம்ஏ அரங்கில் சம்மேளனத் தலைவர்   தோழர் ஆர். ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு ஏஐடியூசி பொதுச் செயலாளர் தோழர் டி.எம். மூர்த்தி இன்றைய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய   வழிமுறைகள் குறித்து பேசினார். சம்மேளனப் பொதுச்செயலாளர் தோழர் ம. இராதாகிருஷ்ணன் அறிக்கை வைத்து பேசினார்.  

  சிபிஐ மாவட்ட செயலாளர் தோழர்  பி. போஜராஜ், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தோழர் கே. மூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நீலகிரி மாவட்ட உள்ளாட்சி பணியாளர் சங்க செயலாளர் என்.துரை வரவேற்புரையாற்றினார்.. போக்குவரத்து சங்க மண்டலத் தலைவர் தோழர் மோகனன், சம்மேளனத் துணைத்தலைவர் மீனாள் சேதுராமன், செயலாளர் ஆர். மணியன்,  பொருளாளர் எம். சங்கையா, உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்ட  நிர்வாகிகள் ஆர்.ரகுநாதன் (நீலகிரி), பி.என்.பெரியசாமி சேலம்) எம்.எஸ்.பி.ராஜ்குமார் (தேனி), என்.மனோகரன் (தர்மபுரி) பி.சாந்தகுமார் (திருவாரூர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

  உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையில் நிர்பந்தம் காரணமாக அற்ப ஊதியம்  பெற்று பல ஆண்டுகளாக, பல பெயர்களில் பணிபுரிந்து வருகின்றனர். பணிப் பாதுகாப்பு, பணி நிரந்தரம், சட்டப்படியான ஊதியம், சமூகப்பாதுகாப்பு  உள்ளிட்ட தொழிலாளர்களின் நீண்ட நாளைய நியாயமான கோரிக்கைகள் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தனர். 60 நாள் பொருங்கள் நல்ல காலம் பிறக்கும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பரப்புரையின் போது கூறிய வாக்குறுதியின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர்.

  ஆட்சி மாறியது ஆனால் நல்ல காலம் பிறக்க வில்லை. மாறாக உள்ளதும் போச்சு என்னும் நிலை உள்ளாட்சி  உருவாக்கப்பட்டு வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று  புதிய நிர்வாகிகளும், உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.  அவர்கள்   தமிழக அரசின் சமூக நீதி கோட்பாட்டு அடிப்படையில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை அணுகுவதற்கு மாறாக: ஏற்கனவே பணிப் பாதுகாப்பு கேள்விக்குறியாக பணிபுரிந்து வரும் பணியாளர்களை தங்கள் விருப்பம் போல் வேலையை விட்டு வெளியேற்றுவது, தங்களுக்கு வேண்டிய அல்லது தர வேண்டியதை தருகின்ற தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது போன்ற தன்னிச்சையான நடவடிக்கைகள் பரவலாக நடைபெற்று வருகின்றன. அலுவலர்களின் தன்னிச்சையான  செயல்பாடுகளில் சிக்கித் திணறிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் இப்போது மக்கள் பிரதிநிதிகளின்   ஆதிக்கச் செயல்பாட்டிற்கும் அடிபணிந்து போக வேண்டிய நிர்பந்தத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். கிராம ஊராட்சிகளிலும் இதே நிலைதான்.

  அதுமட்டுமல்லாமல் தொழிலாளர்களின் பணி பாதுகாப்பற்ற சூழ்நிலையை பயன்படுத்தி மக்கள் பிரதிநிதிகளும் அலுவலர்களும் தங்களுடைய வீடுகளிலும், சொந்த தேவைக்கான வேலைகளையும் செய்வதற்கு நிர்ப்பந்திக்கும் கொடிய முறை பரவி வருவதையும் காண முடிகிறது. மாநகராட்சி, நகராட்சிகளில் ஒப்பந்தத் தொழிலாளர் முறையை நீட்டித்து புதிதாக   ஒப்பந்தம்  ஏற்படுத்துவதற்கு   உரிய  வழிமுறைகளை  நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அவர்கள் கடந்த 2 அக்டோபர் அன்று வெளியிட்ட  சுற்றறிக்கை  தெரிவிக்கிறது.  ஏற்கனவே தமிழகம் முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சியின் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. 


  இச்சூழ்நிலையில் தேவைக்கேற்ப கூடுதலாக பணியாளர்களை நியமிக்க வேண்டும். ஆனால்  நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரின் சுற்றறிக்கையானது தற்போது பணியில் உள்ள தொழிலாளர்கள் எண்ணிக்கையை வெகுவாக குறைத்து, அவர்களை வேலையில் இருந்து வெளியேற்றி, வேலைக்கு எடுக்கப்படவுள்ள    தொழிலாளிகளுக்கு நடைமுறை சாத்தியமற்ற வேலைப்பளுவை திணித்து,   தற்போதைய  ஊதியத்தை பாதியாக வெட்டி குறைத்து, தமிழகத்தின் பொது சுகாதார பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. சமூகநீதிக் கோட்பாட்டை நீர்த்துப் போகச் செய்கிறது. 

  இக்காரணங்களால் இச்சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். கொடூர சுரண்டலுக்கும் முறைகேடுகளுக்கும் வழிவகுக்கும் ஒப்பந்த முறையை முற்றாக கைவிட வேண்டும் என்று ஏஐடியுசியின் தலைவர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை கடந்த நவம்பர் 25 அன்று  நேரில் முறையிட்டனர். 

  எனினும் புதிதாக ஒப்பந்தம் விடுவதற்கு உரிய நடவடிக்கையில்  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன என்று அறிகிறோம். அதில் தற்போது பணிபுரியும் தொழிலாளர்கள் எண்ணிக்கையை வெகுவாகக் குறைப்பதற்குரிய விவரங்கள் பரவலாக சேகரிக்கப்பட்டு வருகின்றன என்றும் அறியமுடிகிறது.

  மேலும் 2000ம் ஆண்டில் உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்பந்த தொழிலாளர் முறை திணிக்கப்பட்டது. அன்று முதல் தொழிலாளர்களின் சட்டபூர்வமான உரிமைகளை மறுப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நிரந்தரமற்ற சகல வித பெயர்களில் உள்ள தொழிலாளர்கள் மீதும் கொடூரமான சுரண்டலும் முறைகேடுகளும் தலைவிரித்தாடுகின்றன. 

  சமூக நீதிக் கொள்கையால், கைதூக்கி விடுவதற்கான முன்னுரிமை பெற்ற ஒடுக்கப்பட்ட மக்களான துப்புரவுப் தொழிலாளர்கள் மற்றும் உள்ளாட்சி தொழிலாளர்களின்  ஊதியம், பணிப் பாதுகாப்பு, வேலைப்பளு, சுயமரியாதை உள்ளிட்டவை இன்னும் கீழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இந்நிலையையும், அதற்கான காரணங்களையும், மாற்றுவதற்கான வழிவகைகளையும் முறையிட்டால், அதனை உளமாறக் கேட்பதற்குப் பொறுமையுமில்லை; அதில் கவனம் செலுத்தி தீர்க்க வேண்டும் என்ற அக்கறையும் உரியவர்களுக்கு இல்லை.

   எனவே உள்ளாட்சி தூய்மைப் பணியாளர்  உள்ளிட்ட தொழிலாளர்களின் முறையீடுகளைக் கேட்டு,  உண்மை நிலையைக் கண்டறிந்து,  மறுக்கப்பட்ட   சட்டபூர்வ உரிமைகளை பெற்றுத்தர, தக்க தலையீடு செய்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பெற்ற, தொழிலாளர்கள் பிரதிநிதிகளோடு தேசி தீர்வு கண்டு அமலாக்கத் தக்க, உத்தரவிடும் அதிகாரமும்  அதனை  அமுலாக்காத  உள்ளாட்சி அமைப்புகள், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை,  தண்டனை அளிக்கும் அதிகாரமும்   உள்ளடக்கிய தன்னாட்சி கொண்ட “உள்ளாட்சி தொழிலாளர் குறைதீர் ஆணையம்” அமைக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.  அதோடு, உள்ளாட்சிகளில் புதிய தலைமை தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு, பல்லாண்டுகள் பணிபுரிந்த தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்தல், தொழிலாளர்களை தலைவர்களின், அலுவலர்களின் சொந்த வீட்டு/விவசாய வேலைகளைச் செய்யவைத்தல் உள்ளிட்ட வாழ்க்கையையும், சுயமரியாதை யையும் பறிக்கும் கொடூர செயல்களைத் தடுக்க தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

  மேலும்  இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜுன்- 21 அன்று மாவட்ட தலைநகர்களிலும், தொழிலாளர்கள் கூடுமிடங்களிலும் பெருமளவில் தொழிலாளர்களைத் திரட்டி பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள்  நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்கவும் தீர்மானிக்கிறோம்.

  கருத்துகள் இல்லை

  Post Top Ad

  Post Bottom Ad