நீட் விலக்கு மசோதாவை மேதகு ஆளுநர் திருப்பி அனுப்பியது மாநில உரிமைகளை பறிக்கும் செயல்.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
நீட் விலக்கு மசோதாவை மேதகு ஆளுநர் திருப்பி அனுப்பியது மாநில உரிமைகளை பறிக்கும் செயல்.
மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு மேதகு ஆளுநர் கூறும் காரணங்கள் சரியானவை அல்ல.
மத்திய அரசின் முகவர் போல் மேதகு தமிழ்நாடு ஆளுநர் செயல்படுவது கண்டனத்திற்குரியது.
இதுகுறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர்
ஜி. ஆர். இரவீந்திரநாத் சென்னை ஊடகவியலாளர் சந்திப்பில் விடுத்துள்ள ஊடகங்களுக்கான செய்தி.
நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இளநிலை மருத்துவ இடங்களுக்கு விலக்கு பெறுவதற்காக ,
தமிழக சட்டமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ஏகமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது.
ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட இம் மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு ஆளுநர் அனுப்பி வைக்கவில்லை. காலம் தாழ்த்தி வந்தார்.
இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆளுநரின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து வந்தன. அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் ஆளுநரின் போக்கிற்கு எதிராக ,சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் , தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகளும் குரல் கொடுத்து வந்தன.
நாடாளுமன்றத்திலும் இந்தப் பிரச்சனை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆளுநர் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, நீட் நுழைவுத்தேர்வு சமூகநீதிக்கு எதிராக இல்லை என்ற காரணத்தைக் கூறி ,அந்த மசோதாவை,தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி உள்ளார்.
ஆளுநரின் இந்த செயல் மாநில உரிமைகளுக்கு எதிரானது.
ஒன்றிய பாஜக அரசு என்ன நினைக்கிறதோ அதை நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரு முகவராக தமிழக ஆளுநர் செயல்படுகிறார்.
ஆளுநரின் இந்தப் போக்கு சமூகநீதிக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கும் , தமிழ் வழியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கும் முதல் தலைமுறை மாணவர்களுக்கும் எதிரானது .
எனவே, இது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக ஆளுநர் தமிழக சட்டமன்றத்தையும் ,
தமிழக மக்களின் உணர்வுகளையும் இழிவு படுத்தியுள்ளார் . எனவே , மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படும் ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் .
வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஆளுநர் சுட்டிக்காட்டுவது சரியல்ல. ஏனெனில் அது தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்லூரி அல்ல.
கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு நீட் உதவியுள்ளது என ஆளுநர் தரப்பில் கூறப்படுவது சரியல்ல.
நீட் நுழைவுத் தேர்வு , பயிற்சி மையங்களில் பயிற்சி பெற முடியாத நிலையை கிராமப்புற மாணவர்களுக்கு உருவாக்குகிறது. பயிற்சி மையங்களில் சேர வசதியில்லாத ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை பாதிக்கிறது.
அரசுப்பள்ளி, மாணவர்களுக்கு எதிராகவும் உள்ளது. இதை நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு போதிய தரவுகளுடன் உறுதி செய்துள்ளது.
அது மட்டுமல்ல, நீதியரசர் கலையரசன் குழுவும் இதை உறுதிசெய்துள்ளது.
நீட் மட்டுமல்ல , எந்த ஒரு போட்டித் தேர்வும் இன்றைய நிலையில் வசதிபடைத்த நகர்புற மாணவர்களுக்கு சாதகமாகவே உள்ளது.
இந்த உண்மையை கருத்தில் கொள்ள ஆளுநர் தவறியது வருத்தமளிக்கிறது.
நீட் ஏழை எளிய மாணவர்களிடம் இருந்து பொருளாதாரச் சுரண்டலை தடுக்கிறது என உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டி ஆளுநர் கூறுவதும் சரியல்ல. நீட் தேர்வால் கட்டணக் கொள்ளையை தடுக்க இயலவில்லை.
நீட் தேர்வுக்கும் கட்டணத்திற்கும் நேரடி சம்பந்தம் இல்லை.
ஏற்கனவே 100% தனியார் மருத்துவ கல்லூரி இடங்களுக்கும் கட்டண நிர்ணயம் இருந்தது.நிகர்நிலை பல்கலை கழக கட்டணத்தை ஒன்றிய அரசு நிர்ணயம் செய்ய வேண்டிய அவசியம் இருந்தது.ஆனால் ஒன்றிய அரசு நிகர் நிலை பல்கலை கழக கட்டணத்தை நிர்ணயம் செய்யவேயில்லை. மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தின்(NMC) மூலம் 50 விழுக்காடு மருத்துவ இடங்களுக்கு மட்டுமே கட்டணம் முறைப்படுத்தப்படும் எனக் கூறியுள்ளது.
100% விழுக்காடு இடங்களுக்கும் கட்டண நிர்ணயம் இருந்ததை மத்திய அரசு விழுக்காடாக குறைத்து விட்டது.
கார்ப்பரேட் கம்பெனிகள் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கலாம் என ஏற்கனவே மத்திய அரசின் வற்புறுத்தலால் ,
இந்திய மருத்துவக் கழகத்தின் (MCI) விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. என்.எம்.சி சட்டத்தின் படி, மத்திய ' மாநில அரசுகள்தான் அவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு கவுன்சிலிங் நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும்.
இச்சட்டத்திற்கு முரணாக , மத்திய அரசு மாணவர் சேர்க்கையின் இறுதி நாளில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் தாங்களாகவே "மாப்அப் (Mop up ) கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ள அனுமதிக்கிறது.
தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு வசதியாக, அவர்கள் லாபம் அடைவதற்காக நீட் "கட் ஆஃப் (cut off) மதிப்பெண்ணையும் குறைத்து விடுகிறது.
இதன் காரணமாக கடைசி நேரத்தில், குறைந்த மதிப்பெண் எடுத்த வசதியான மாணவர்கள், மருத்துவக் கல்லூரிகளில் அதிக பணம் கொடுத்து சேர்ந்துவிடுகின்றனர். இது முறைகேடானதாகும்.
இத்தகைய மாணவர் சேர்க்கை மூலம் ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கை குழிதோண்டி புதைக்கப் படுவதால், ஏழை எளிய மாணவர்களில் ஒரு சிலர் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றால் கூட ,அவர்களால் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. கட்டணக் கொள்ளையால் ஏழை எளிய மாணவர்கள் பாதித்துள்ளனர். இதை நீட் தடுக்கவில்லை.
இன்னும் சொல்லப்போனால் மத்திய அரசு,நீட் நுழைவுத்தேர்வு மூலம், தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு, வசதியான மாணவர்களை பிடித்துக் கொடுக்கும் ஏஜென்ட் போல செயல்படுகிறது.
அது மட்டுமல்ல, நீட் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க SC/ST மாணவர்களிடமும் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
இத்தேர்வையும் பன்னாட்டு தனியார் நிறுவனங்களே நடத்துகின்றன. இத்தேர்வையும் லாப நோக்குடையதாக தேசிய தேர்வு முகமை மாற்றிவிட்டது.
எனவே,நீட் நுழைவுத் தேர்வு ஏழை எளிய மாணவர்கள் பொருளாதார ரீதியாக சுரண்டப்படுவதை தடுத்துள்ளது என்ற மேதகு தமிழக ஆளுநரின் கருத்தும் உண்மைக்கு மாறானதாகும்.
நீட் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஏராளமான முறைகேடுகள் நடைபெறுகிறது.
நீட் விலக்கு மசோதா குறித்து அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இந்நிலையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழ்நாடு அரசு கூட்டியிருப்பது வரவேற்புக்குரியது.
இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி உடன் இருந்தார்.
இவண்,
டாக்டர் ஜி .ஆர்.இரவீந்திரநாத் ,
பொதுச் செயலாளர்,
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
கருத்துகள் இல்லை