• சற்று முன்

    அன்வர்ராஜா அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடி நீக்கம்


    அதிமுக செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய விவாதம் நடைபெற உள்ளதாகவும், புதிய அவைத்தலைவர் தேர்வும் இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவிலிருந்து கட்சியின் மூத்த தலைவர் அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ள சூழலில், இன்று அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



    இந்த கூட்டத்தில் 11 பேர் கொண்ட அதிமுக வழிகாட்டுதல் குழுவிலிருந்து உறுப்பினர் சோழவந்தான் மாணிக்கம், பாஜகவில் சேர்ந்த நிலையில், அவருக்கு பதிலாக மாற்று உறுப்பினரை சேர்ப்பது அல்லது வழிகாட்டுதல் குழுவை விரிவு படுத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அன்வர் ராஜா, சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் எனக்கூறியதாகவும், அதற்கு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின. சசிகலா இணைப்பு பற்றி தொலைக்காட்சிகளில் தொடர்ந்து கூறி வந்த அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா நள்ளிரவில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அன்வர் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

    இன்று நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் சசிகலா தொடர்பாக யாரும் பேசக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இன்று நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் புதிய அவைத்தலைவர், உட்கட்சி தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. கட்சியின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் சில மாதங்களுக்கு முன்பு மரணமடைந்த நிலையில் அந்த பதவி காலியாக உள்ளது. எம்.ஜி.ஆர். காலம் முதல் கட்சியின் மூத்த நிர்வாகிகள்தான் இந்த பதவியில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் மூத்த நிர்வாகி ஒருவரை புதிய அவைத்தலைவராக நியமிக்க ஆலோசித்து வருகிறார்கள். இன்றைய தினம் புதிய அவைத்தலைவர் தேர்வு செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad