• சற்று முன்

    கொரோனா தடுப்பூ சி வழங்குவதை மக்கள் இயக்கமாக மாற்றிட வேண்டும்.சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கோரிக்கை

    கொரோனா தடுப்பூசி வழங்குவதை மக்கள் இயக்கமாக மாற்றிட வேண்டும்.

     மருத்துவர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்வதை கைவிட வேண்டும். பெண் மருத்துவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு  உள்ளானதாக எழுந்துள்ள பிரச்சனைக்கு, கொரானா பணியில் இருந்த பெண் மருத்துவர்களின் பாதுகாப்பில்  அலட்சியம் காட்டப்பட்டதே முக்கியக் காரணம்.  

    சிசேரியன் அறுவை சிகிச்சைகள் அதிகரிப்பது குறித்து அறிவியல் பூர்வமான அணுகுமுறை வேண்டும். 

    இவை குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் விடுக்கப்பட்டுள்ள ஊடகங்களுக்கான செய்தி. சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு , முதல் 48 மணி நேரத்திற்கான சிகிச்சை செலவை அரசே ஏற்கும் வகையில் , தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள `` நம்மை காக்கும் 48’’ திட்டம்  வரவேற்புக்குரியது. 

    கொரோனா தடுப்பூசி வழங்குவதில் தமிழக அரசு தொடர்ந்து  முன்னுரிமை வழங்கி அதிக கவனத்துடன் செயல்பட்டுவருவது பாராட்டுக்குரியது. வரவேற்புக்குரியது. 

    இந்தியாவில் “தடுப்பூசி தயக்கம்’(vaccine hesitancy) 7 விழுக்காடு அளவு இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. ஆரம்பத்திலிருந்தே கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் தமிழகத்தில் “தடுப்பூசி தயக்கமும்’, ``எதிர்ப்பும்’’ , அதிகமாகவே நிலவி வருகிறது. இந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழக அரசு நடத்திய  ஆய்வின் படி  தமிழகத்தில் ‘தடுப்பூசி தயக்கம்’ இள வயதினரிடம் 16.9 விழுக்காடா கவும்,  வயதானவர்களிடம் 27.6விழுக்காடு வரையும் உள்ளது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 75 விழுக்காட்டிற்கு மேல்  போடப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ளவர்களில் பெரும்பாலோனோர் தடுப்பூசிப் போட்டுக்கொள்வதில் தயக்கமும் எதிர்ப்பு மனநிலையும்,  பக்க விளைவுகள் பற்றிய தவறான  நம்பிக்கைகள் கொண்டவர்களாகவும் உள்ளனர். அவர்களை  தடுப்பூசிப் போட்டுக்கொள்ள இணங்க  வைக்க பல்வேறு துறைகள் மூலம்,பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய தேவையுள்ளதை கள நிலவரம் உணர்த்துகிறது.

    கொரோனா தடுப்பூசியின் அவசியம், நன்மை, அறிவியல் உண்மைகள், பாதுகாப்புத் தன்மைகளை விளக்கி அனைத்துவிதமான ஊடகங்களிலும் பல வகையான பிரச்சார விளம்பரங்கள் மூலம், தொடர்ந்து விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தவேண்டும்.

    அனைத்து மதத் தலைவர்களையும், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களையும், இளைஞர் மாணவர் அமைப்புகளையும், பெண்கள் சுயநிதிக் குழுக்களையும், தொண்டு நிறுவனங்களையும் பயன்படுத்திட வேண்டும். அவர்கள் மூலம் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களை ,போட்டுக்கொள்ள இணங்கச் செய்ய வேண்டும். அவர்களை மருத்துவ முகாம்களுக்கு அழைத்து வந்து தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளச் செய்திட வேண்டும். அவ்வாறு அழைத்து வருபவர்களுக்கும், பயனாளிகளுக்கும் ஊக்கத் தொகை வழங்கிட வேண்டும். 

     தமிழகத்தின் நீலகிரி மாவட்டம்,பீகாரின் பங்கட்வா மாதிரி ( Bankatwa model),புவனேஸ்வர் மாதிரி போன்ற சாதனை மாதிரிகளைப் பின்பற்றி விரைவில் தமிழகமும் 100 % கொரோனா தடுப்பூசி வழங்கும் இலக்கை அடையவேண்டும். அதற்கு அனைத்துத் தரப்பினரின்  பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்.  கொரோனா தடுப்பூசி வழங்குவதை மருத்துவர்கள் பொறுப்பு, அரசின் மருத்துவத் துறையின் பொறுப்பு என கருதுவதை கைவிட்டு, அதை ‘மக்கள் இயக்கமாக’’  மாற்றிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

    கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்புக்குரியது. அதை  கறாராக நடைமுறைப்படுத்திட வேண்டும். கூட்டம் சேரக்கூடிய ,டாஸ்மாக் கடைகளில் மதுபானம் பெறவும், ரேஷன் கடைகளில் ,பொருட்கள் மற்றும் பொங்கல் பரிசுகளை பெற்றிடவும், பேருந்து மற்றும் ரயில் போன்ற பொது போக்குவரத்தை பயன் படுத்திட   கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்ட சான்றிதழ் வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். இந்த அரசாணை பொருந்தாத இடங்களில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பாதவர்கள், பொதுவான இடங்களுக்கு வரும் பொழுது தங்களின் RTPCR NEGATIVE பரிசோதனை முடிவுகளை 3 நாட்களுக்கு ஒருமுறை, சொந்த செலவில் செய்து காண்பிக்க வேண்டும் என்பது போன்ற நடைமுறைகளை கொண்டுவர வேண்டும். 

     மருத்துவர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிப்பதும், அதை நிறைவேற்றாதவர்களுக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை ( Memo) அனுப்புவதும், இலக்கை நிறைவேற்ற வேண்டும் என மிரட்டும் போக்கை கடைபிடிப்பதும் சரியானதல்ல. இதனால், மருத்துவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். ஏற்கனவே கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையாக உழைத்துவரும் அவர்கள்,அரசின் இத்தகைய போக்கால் மனம் நொந்து போய் உள்ளனர்.எனவே இத்தகைய போக்கை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும். 

     தடுப்பூசிகளுக்கு எதிராகவும், நவீன அறிவியல் மருத்துவத்திற்கு எதிராகவும் திட்டமிட்டே சிலர்  உள்நோக்கோடு தவறான  செய்திகளை பரப்புகின்றனர். மருத்துவ அறிவியலைப் பற்றிய புரிந்து கொள்ளலில் மத்திய மாநில அரசுகளும் தவறான போக்கை கடைபிடிக்கின்றன. மத, இன ,தேசிய அடிப்படையிலான அடையாள அரசியலை மருத்துவ அறிவியலில் திணிப்பது, நவீன அறிவியல் மருத்துவத்திற்கு எதிரான மனநிலையை மக்கள் மத்தியில் உருவாக்குகிறது. இது தடுப்பூசி வழங்குவதிலும்,பல்வேறு நோய்ளை தடுப்பதிலும் தடைகளை ஏற்படுத்துகிறது.

    மத்திய -  மாநில அரசுகளே நவீன அறிவியல் மருத்துவத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு விட்டு, தடுப்பூசி வழங்குவதை தனிப்பட்ட மருத்துவர்களின் பொறுப்பு என அவர்கள் தலையில் கட்டுவது என்ன நியாயம்? மருத்துவ அறிவியல் குறித்த தெளிவான ,சரியான புரிதலுக்கு வர ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும். போலிமருத்துவ அறிவியலையும், தவறான மருத்துவ அறிவிலையும், காலாவதியான மருத்துவ அறிவியல் முறைகளையும், மூட நம்பிக்கைகளையும், தவறான கருத்துக்களையும் மக்களிடம் பரப்புவதை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும். தடுப்பூசிக்கு எதிரான மனநிலை என்பது திடீரென உருவான ஒன்றல்ல. அந்த மனநிலை உருவாக ஆட்சியாளர்களும் காரணமாக இருந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா தடுப்பூசி இலக்கை எட்ட முடியாததற்கு, மருத்துவர்களை பலிக்கடா ஆக்குவது  நியாயம் அல்ல.சரியல்ல. இது கடும் கண்டனத்திற்குரியது. 

     மருத்துவர்களின் நீண்டநாள் ஊதியஉயர்வுக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. கொரானா ஊக்கத்தொகை அனைவருக்கும் வழங்கப்படவில்லை. பல இடங்களில் தற்காலிக மருத்துவத்துறைப் பணியாளர்களுக்கு ஊதியம் சரியாக வழங்கப்படவில்லை. இத்தகைய நிலைமைகளிலும், மழையிலும் ,புயலிலும், வெள்ளத்திலும் , ஓய்வின்றி அனைத்து மருத்துவத்துறையினரும் வேலை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அவர்களிடம் மருத்துவத்துறை அதிகாரிகள்,  மாவட்ட ஆட்சியர்கள் நாள்தோறும் கடுமையான முறையில்  நடந்து கொள்கின்றனர். இதனால் பலர் உள ரீதியாக பாதிக்கப்பட்டு  மன நல சிகிச்சை பெறும் நிலைக்கு உள்ளாகி உள்ளனர். * நாள்தோறும் 12 மணிநேரம் வரை  வேலை செய்யும் அவர்களுக்கு , கூடுதல் பணி நேர்த்திற்கான படிகள் (over time allowance),ஆபத்தான பணிக்கான படி (risk allowance) வழங்கவேண்டும்.

    * மருத்துவத் துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதோடு, அவர்களின் உடல் நலத்தையையும், மன நலத்தையும் தமிழக அரசு காக்கவேண்டும். அதற்காக ‘மருத்துவத் துறையினருக்கான நல வாரியம்’ அமைக்கப்பட வேண்டும்.

    தடுப்பூசி செலுத்திட வீடு வீடாக அனைத்து வகை மருத்துவத்துறை பணியார்களையும்  அனுப்புவதால் , இதர கொரோனா அல்லாத மருத்துவ சேவைகள் அனைத்தும் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றன. எனவே, பயனாளிகளை முகாம்களுக்கு வரவழைத்து தடுப்பூசிகளை போட வேண்டும்.

    சென்னை இராஜிவ் காந்தி மருத்துவமனையைச் சேர்ந்த பெண் மருத்துவர்கள், சக ஆண் மருத்துவர்களால் பாலியல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். சட்ட ரீதியாக தண்டனையை தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும். பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களை வெறும் இடமாறுதல் செய்யும் நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இது சரியல்ல. 

    ரசு மற்றும் தனியார் மருத்துவ, செவிலியர் கல்லூரிகள் ,மருத்துவமனை நிர்வாகங்கள் , மருத்துவ ,செவிலிய மாணவிகள்,பெண் மருத்துவர்கள், மற்றும் பெண் மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டுவதும் பாலியல் குற்றங்கள் அதிகரிக்க காரணமாகியுள்ளன. ஆணாதிக்க மனநிலையோடு ,அலட்சியமாக செயல்படும்  மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். அனைத்து மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளிலும் ``விஷாகா’’ குழுக்களை அமைத்திட வேண்டும். அவை முறையாக செயல்படுகின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டும்.

    இது போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை ,கடந்த மாதம் ,தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் அவர்களை, தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்க நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து முன்வைத்தோம். பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் உறுதி அளித்தார்.

    சசேரியன்  அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் பெறுவது தனியார் மருத்துவமனைகளில் அதிகரித்துவருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. குழந்தை பிறப்பிற்கு நல்ல நாள்,நல்ல நேரம் பார்ப்பது போன்றவையும் காரணங்களாக இருக்கின்றன.

    • அதேசமயம் சிசேரியன் அறுவை சிகிச்சையே தேவையற்றது. சிசேரியன் அறுவை சிகிச்சையே கூடாது என்ற பார்வையும் சரியல்ல. இந்த அறுவை சிகிச்சையை செய்யும் வசதி பரவலானதும், சிறிய மருத்துவமனை

    களில் கூட செய்ய முடியும் என்ற நிலை உருவாகியிருப்பதும்  அவசரக் காலத்தில் தாய்,சேய் உயிர் காத்திட உதவுகிறது.

    குறைமாத,குறை எடை குழந்தைகள் பிறக்கவும்,காக்கவும் உதவுகிறது. பேறுகாலத் தாய்மார்கள் மற்றும் பச்சிளங் குழந்தைகளின் இறப்பு விகிதம் பன்மடங்கு குறைய காரணமாகியுள்ளது. எனவே, சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு எதிராக, அறிவியலுக்குப் புறம்பான வகையில் பரப்புரைகளை மேற்கொள்வது சரியல்ல.இது மோசமான  விளைவுகளை உருவாக்கிவிடும்.

    வணிக நோக்கில் ஒரு சில தனியார் மருத்துவமனைகள் அவசியமில்லாத சிசேரியன் அறுவை சிகிச்சைகளை சில சமயங்களில் செய்வதை மறுக்க முடியாது. குழந்தைப் பேற்றில் ஒரு சிறிய இயற்கையான சிக்கல் ஏற்பட்டாலும் ,அதை பெரிதாக்கி,வழக்குத் தொடுத்து ,மிகப்பெரிய தொகையை இழப்பீடாக கேட்பது  ,மருத்துவமனையின் நற்பெயரைக் கெடுப்பது  என்பது போன்ற  அச்சுறுத்தல் காரணமாக மருத்துவர்கள் ரிஸ்க் எடுக்காமல், defensive practice செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறர்கள். அதனாலும்  சிசேரியன் அறுவை சிகிச்சை அதிகரிக்கின்றன. 

    சிசேரியன் அறுவை சிகிச்சைகளை தணிக்கை செய்தல் (audit), நிலையான சிகிச்சை வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்துதல் (standard treatment guidelines and protocols), உச்சப் பட்ச மருத்துவ இழப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்தல் (upper limit for compensation amount), பிரசவம் பற்றிய அறிவியல் பூர்வ விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது போன்ற பல் வேறு நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே, சிசேரியன் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையைக் குறைக்க இயலும்.

    இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் பி.காளிதாசன் , பாரா மெடிக்கல் கல்வி மற்றும் நலச்சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எஸ். தனவந்தன் ஆகியோர்  உடன் இருந்தனர். 


    இவண்,

    டாக்டர். ஜி.ஆர்.இரவீந்திரநாத், 

    பொதுச் செயலாளர்,

    சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad