• சற்று முன்

    பேய் விரட்டுவதாக கூறி சாட்டையடி: ராமநாதபுரத்தில் கல்லூரி மாணவி உயிரிழப்பு



    ராமநாதபுரம் அருகே உடல் நிலை சரியில்லாத மாணவிக்கு பேய் விரட்டுவதாக கூறி சாட்டையால் தாக்கியதில் கல்லூரி மாணவி பரிதாமாக உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ளது கோரவள்ளி கிராமம். இங்கு வசிக்கும் மக்களின் குடும்பத்தினர் பெரும்பாலும் வெளிநாடுகளில் கூலி வேலைசெய்து வருபவர்களாக உள்ளனர். சிலர், உள்ளூரிலேயே விவசாயம் செய்து வருகின்றனர். கோரவள்ளி கிராமத்தைச் சேர்ந்த வீர செல்வம் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சொந்த ஊருக்கு திரும்பி தற்போது விவசாயம் செய்து வருகிறார்.

    கல்லூரி மாணவி

    இவருக்கு கோபிநாத் (20) என்ற மகனும், தாரணி (19) என்ற மகளும் உள்ளனர். இவரது மனைவி கவிதா 9 ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து இறந்துவிட்டார். தாரணி கீழக்கரை தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் வீர செல்வம் வீட்டில் ஆடு, மாடு, நாய் என கால்நடைகள் இறந்ததற்கு தற்கொலை செய்து கொண்டு இறந்த மனைவி கவிதாவின் ஆவிதான் காரணம் என சிலர் கூறியுள்ளனர். தாய் மீது உள்ள பாசத்தால் கவிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அடிக்கடி சென்று மகள் தாரணி வழிபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை தாயின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வழிபட்டு விட்டு வந்த அன்றைய தினமே தாரணிக்கு காய்ச்சல் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


    உடல் நிலை சரியில்லாத தாரணிக்கு சாட்டையடி

    உயிரிழந்த தாய் கவிதா தான் பேயாக தாரணியை பிடித்துள்ளதாக சிலர் தந்தை வீர செல்வத்திடம் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் வீர செல்வம் தனது மகள் தாரணியை செவ்வாய்கிழமை தேவிபட்டிணம் அடுத்த திருப்பாலைக்குடியில் உள்ள கோடாங்கியிடம் அழைத்து சென்று பேய் ஓட்டும் பூஜை செய்துள்ளார். ஆனால், தாரணிக்கு உடல் நிலை சரியாகவில்லை. மீண்டும் புதன்கிழமை ராமநாதபுரம் அருகே உள்ள வாணி என்கின்ற ஊரில் உள்ள பெண் பூசாரியிடம் அழைத்துச் சென்றார். அங்கு பேயோட்டும் பூஜையில் சாட்டை மற்றும் பிரம்பால் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் தாக்கியதில் காயம் ஏற்பட்டு தாரணி மயக்கமடைந்தார். பின்னர் மயக்கம் தெளிய மிளகாய் வத்தலை தீயில் சுட்டு தாரணி மூக்கில் வைத்து முயற்சித்துள்ளனர். ஆனாலும் மயக்கம் தெளியவில்லை. இதனால் பயந்து போன பெண் பூசாரி தாரணியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.

    காய்ச்சல் என்று தெரிந்தும் சிகிச்சை அளிக்காத தந்தை

    இதனையடுத்து தந்தை வீர செல்வம் தாரணியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, முதலுதவி சிகிச்சை அளித்து ரத்த பரிசோதனை செய்ததில் தாரணிக்கு டைபாய்ட் காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் வீர செல்வம் மீண்டும் ஒரு முறை பேய் ஓட்டுபவர்களிடம் அழைத்துசென்றால் உடல்நிலை சரியாகிவிடும் என கூறி தாரணியை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

    உசிலம்பட்டியில் 7 நாட்களே ஆன குழந்தை கொலை - பாட்டி கைது

    மகள்களுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு சாகும்வரை சிறை தண்டனை அன்று நள்ளிரவே தாரணிக்கு மீண்டும் கடுமையாக காய்ச்சல் ஏற்பட்டதால் உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு தாரணி இறந்ததாக மருத்துவர் தெரிவித்தார்.

    மாணவி இறப்பில் மர்மம்

    மாணவி இறப்பில் மர்மம் உள்ளதாக வழக்கு பதிவு செய்த உச்சிப்புளி காவல்துறையினர், தாரணியின் தந்தை, சகோதரர், திருப்பாலைக்குடி கோடாங்கி மற்றும் வாணியை சேர்ந்த பெண் பூசாரி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கோரவள்ளி ஊர் தலைவர் பழனிச்சாமி பிபிசி தமிழிடம் பேசுகையில், "தாரணிக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் அவரது தந்தை கோடாங்கியிடம் அழைத்து சென்றார். அங்கு சென்று பார்த்ததில் தாரணிக்கு உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்றதுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் மருத்துவமனையில் தாரணிக்கு ரத்த பரிசோதனை செய்ததில் டைபாய்ட் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு, புதன்கிழமை நள்ளிரவு தாரணி உயிரிழந்தார். தாரணி உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக கொண்டுசெல்லப்பட்டது. அப்போது தாரணி உடலில் மூன்று இடங்களில் பிரம்பால் தாக்கிய தழும்புகள் இருந்தது குறித்து உச்சிப்புளி காவல் நிலைய ஆய்வாளர் வீர செல்வத்திடம் விசாரித்தார். தனது மகளுக்கு பேய் பிடித்ததால் பேய் ஓட்ட கோடாங்கியிடம் அழைத்து சென்ற போது, அவர்கள் பிரம்பால் அடித்ததாக கூறினார். காய்ச்சல் வந்த முதல்நாளே தாரணியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருந்தால் குணப்படுத்தியிருக்கலாம். அதனை விடுத்து மூட நம்பிக்கையால் கோடாங்கியிடம் அழைத்து சென்றதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுவிட்டது" என்று ஊர் தலைவர் பழனிச்சாமி கூறினார்.

    கல்லூரி மாணவி உயிரிழந்தது குறித்து அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர் கலை. சரவணக்குமார் பிபிசி தமிழிடம் கூறுகையில், "எங்கள் பகுதியில் மூடநம்பிக்கை பழக்கம் தலை விரித்தாடுகிறது. எங்கள் ஊரில் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடுகள் நோய் வாய்ப்பட்டு இறந்திருந்தால் கூட அது காத்து கருப்பு அடித்து இறந்ததாக தான் நம்பப்படுகிறது. உடனடியாக அந்த வீட்டுக்கு கோடாங்கியை அழைத்து வந்து பூஜை செய்கின்றனர், வரும் கோடாங்கியோ ஏதாவது சித்து விளையாட்டு செய்து அவர்களிடம் பணம் பறித்து செல்கின்றனர். கிராம மக்களை மூட நம்பிக்கையில் இருந்து மீட்க பல முறை இளைஞர்கள் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறோம். ஆனாலும் சிலர் கோடாங்கிகள் சொல்வதை நம்பி ஏமாந்து விடுகின்றனர். அப்பாவி மக்களின் மூட நம்பிக்கையை பயன்படுத்தி பணம் பறிக்கும் கோடாங்கிகளை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வேண்டும்" என்று அவர் கூறினார். இந்த வழக்கு குறித்து பிபிசியிடம் பேசிய உச்சிப்புளி காவல் நிலையத்தின் காவலர் ஒருவர், "மாணவி தாரணி இறப்பில் சந்தேகம் இருப்பதால், உடற்கூறு ஆய்வு செய்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டது. ஆனால் இதுவரை உடற்கூறு ஆய்வு அறிக்கை கிடைக்கவில்லை.

    மன அழுத்தம் மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தாரணி உயிரிழந்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இரண்டு முறை சம்பந்தப்பட்ட கோடாங்கி, பெண் பூசாரி மற்றும் தந்தை வீர செல்வத்திடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. உடற்கூறு ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என்று அவர் கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad