பரோலில் வந்த பேரறிவாளன் ஜோலார்பேட்டையில் தாயார் அற்புதம்மாள் வரவேற்பு
ராஜிவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் தண்டனை பெற்றுவந்த பேரறிவாளன் பரோலில் வந்தார். சொந்த ஊரான ஜோலார்பேட்டையில் அவருடைய தாயார் கண்ணீர் மல்க வரவேற்றார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு, 90 நாள்கள் பரோல் கேட்டு, அவரது தாயார் அற்புதம்மாள் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கில் சிறைத்துறை தரப்பில் பேரறிவாளனுக்கு பரோல் விடுப்பு தர முடியாது எனக் கூறப்பட்டது. ஆனால், இவ்விவகாரத்தின் சிறைத்துறை மற்றும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு, பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல் விடுப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது.mஅதன்படி, இன்று காலை சென்னையில் உள்ள புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு காவல்துறை பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். ஏற்கனவே இரண்டு முறை பரோலில் வந்த பேரறிவாளன் தற்போது மூன்றாவது முறையாக 30 நாட்கள் பரோலில் தனது சொந்த வீட்டிற்கு வந்துள்ளர்.
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக பேரறிவாளனை காண வெளியாட்களுக்கு கண்டிப்பாக அனுமதியில்லை என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவருடைய தாயார் அற்புதம்மாள் கூறுகையில் என்னுடைய பிள்ளைக்கு சிறுநீர் தொற்று நோய் இருப்பது உலகத்திற்கே தெரியும். தற்பொழுது கொரானா நோய் தொற்று காலகட்டம் என்பதால் என் பிள்ளை தனக்கு பாதிக்கப்பட்ட வியாதிக்கு உரிய மருந்துகளை கடந்த 5, 6 மாத காலமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. 30 ஆண்டுகாலம் இளமையை இழந்து வாழ்க்கையை தொலைத்து விட்ட என் பிள்ளையை நான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் பரோல் கேட்டேன். மேலும் என் பிள்ளையை முன்னாள் முதலமைச்சர் கண்டிப்பாக விடுவிப்பேன் என்று உறுதியளித்தார்.மலைபோல் நம்பி இருந்தேன் அது நடக்கவில்லை நடப்பது நடக்கட்டும் பார்க்கலாம் என்றார்.
கருத்துகள் இல்லை