மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அவர்களின் மறைவிற்கு அம்பேத்கார் மக்கள் இயக்கம் சார்பில் இரங்கல்
லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனத் தலைவரும் சமூகநீதிக் காவலரும் மத்திய உணவுத் துறை மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் பீகார் மாநிலத்தில் காகரியா மாவட்டத்தில் ஷகார்பானி என்ற இடத்தில் ஜமுன் பஸ்வான்,சியா தேவி தம்பதியரின் மகனாக 1946 ம் ஆண்டு ஜீலை 5 ஆம் தேதி பிறந்தார்.எம்.ஏ.,எல்.எல்.பி.பட்டங்களை பெற்றவர்.1969 ம் ஆண்டு போலீஸ் துணை சூப்பிரண்டு பணிக்காக தேர்வு ஆகியும் அப்பணியில் சேராமல், சமுதாயப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலில் களம் புகுந்தார். 1969 ஆம் ஆண்டு பீகார் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சோசலிச தலைவர்களாக திகழ்ந்த ஜெயபிரகாஷ், நாராயணன், ராஜநாராயணன் போன்றவர்களை பின்தொடர்ந்தார். நெருக்கடி நிலையின் போது சிறை சென்றார்.1977இல் ஜனதா கட்சி தொடங்கப்பட்ட போது அதில் ஐக்கியமாகி அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஹாஜிப்பூர் தொகுதியில் இருந்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.பின்னர் ஜனதா தளத்தில் சேர்ந்தவர் அதிலிருந்து வெளியேறி 2000 ஆண்டில் லோக் ஜனசக்தி தொடங்கி நடத்தி வந்தார்.மத்தியில் வி.பி. சிங், தேவேகவுடா, வாஜ்பாய், மன்மோகன்சிங் என பல பிரதமர்களின் மந்திரிசபையில் பல்வேறு துறைகளை கவனித்த ஆற்றல்மிக்க அனுபவசாலியான அவர் பல்வேறு துறை மந்திரியாக பதவி வகித்து வந்தார். தற்போது நரேந்திரமோடி மந்திரி சபையில் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மந்திரியாக விளங்கி வந்த அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு டெல்லி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம். பீகார் மாநில அரசியலில் 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில், சமூக பணியில் ஈடுபட்டு வந்தவர் அண்ணல் அம்பேத்கர் மீது அளவற்ற பற்று கொண்டவர், தலித் சமூகத்தைச் சேர்ந்த அவர் தலித் மக்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து சமூக மக்களின் நல்வாழ்வுக்காக அண்ணல் அம்பேத்கார் வழியில் சமூக பணியாற்றியவர். தாழ்த்தப்பட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய வந்த ராம்விலாஸ் பஸ்வான் அவர்களின் இறப்பு நாடெங்கிலும் உள்ள தலித் மக்களுக்கு மட்டுமல்ல பல்வேறு சமூக மக்களுக்கும் பேரிழப்பு அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும் அவர் கட்சியினருக்கும் அம்பேத்கார் மக்கள் இயக்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்றும் நம் நினைவில் வாழ்வார்
பதிலளிநீக்கு