வேலூர் மாவட்டத்தில் 2 போலி டாக்டர்கள் கைது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகாவில் போலி டாக்டர்கள் அதிக அளவு உள்ளதாகவும், அவர்கள் கொரோனா உள்ளிட்ட நோய்களுக்கு தவறான மருத்துவம் பார்ப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின் ஆகியோர் போலி டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
அதன்பேரில் குடியாத்தம் அரசு மருத்துவமனை டாக்டர் ஆர்.சரவணன், குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், பாலவெங்கடராமன், கார்த்திகேயன், ஏட்டு ராமு உள்ளிட்டோர் கொண்ட தனிப்படையினர், குடியாத்தத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
அப்போது மேல்ஆலத்தூர் பகுதியில் உரிய மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்ததாக மேல்ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 44) என்பவரையும், குடியாத்தம் நெல்லூர்பேட்டை என்.எஸ்.கே.நகர் பகுதியில் கோவிந்தசாமி (52) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து மருந்து மற்றும் மாத்திரைகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர், குடியாத்தம் பகுதியில் போலி டாக்டர்கள் குறித்து அதிரடி சோதனை நடத்திய தகவல் அறிந்ததும், பல போலி டாக்டர்கள் தங்களுடைய கிளினிக்கை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்
கருத்துகள் இல்லை