Header Ads

  • சற்று முன்

    அடல் சுரங்கப்பாதை திறக்கப்பட்ட சுமார் 72 மணி நேரத்திற்கு 3 விபத்துக்கள்



    பிரதமர் மோடி திறந்து வைத்த அடல் சுரங்கப்பாதையில், மூன்றே நாட்களில் மூன்று விபரீத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

    ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள அடல் சுரங்கப்பாதையை (Atal Tunnel), பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் 3ம் தேதி (சனிக்கிழமை) திறந்து வைத்தார். நீண்ட நாள் கனவாக இருந்து வந்த அடல் சுரங்கப்பாதை திறக்கப்பட்ட சுமார் 72 மணி நேரத்திற்கு உள்ளாக, அதாவது மூன்றே நாட்களில், மூன்று விபத்துக்கள் அங்கு நடைபெற்றுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அடல் சுரங்கப்பாதையில் நடைபெற்ற இந்த 3 விபத்துக்களுக்கும், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறியதே காரணமாக கூறப்படுகிறது. அதாவது வாகன ஓட்டிகள் கண்மூடித்தனமாக வாகனங்களை ஓட்டியதால்தான், இந்த மூன்று விபத்துக்களும் நிகழ்ந்ததாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அடல் சுரங்கப்பாதைக்குள் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் இந்த வாகன விபத்துக்கள் பதிவாகி உள்ளதாகவும் தெரிகிறது. அடல் சுரங்கப்பாதைக்குள் வாகனங்கள் அதிகபட்சமாக மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. ஆனால் வாகன ஓட்டிகள் இந்த வேக கட்டுப்பாட்டை மதிக்காமல், பொறுப்பற்ற முறையில் வாகனங்களை ஓட்டுவதாக கூறப்படுகிறது.

    அதிலும் ஒரு சிலரோ, செல்பி எடுப்பதற்காக அடல் சுரங்கப்பாதைக்குள் வாகனங்களை நிறுத்துவதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மிகவும் அபாயகரமானது. சுரங்கப்பாதைக்கு உள்ளே மிகவும் வேகமாக வந்த ஒரு வாகனம், மற்றொரு வாகனத்தை ஓவர்டேக் செய்ய முயற்சி செய்தபோது ஒரு விபத்து அரங்கேறியதாக கூறப்படுகிறது.

    ஆனால் சுரங்கப்பாதைக்கு உள்ளே ஓவர்டேக் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த சம்பவத்தில் அதிவேகம், தடையை மீறி ஓவர்டேக் என பல்வேறு விதிமுறை மீறல்களை அந்த வாகன ஓட்டி செய்துள்ளார். எனினும் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகளோ அல்லது படுகாயங்களோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    அதே சமயம் இந்த விபத்துக்கள் காரணமாக, அடல் சுரங்கப்பாதையின் வழியே சிறிது நேரம் போக்குவரத்தை நிறுத்த வேண்டிய சூழல் அதிகாரிகளுக்கு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதவிர மற்றொரு பிரச்னையும், அடல் சுரங்கப்பாதையில் தற்போது எழுந்து வருகிறது. வாகன ஓட்டிகள் சிலர், அடல் சுரங்கப்பாதைக்கு உள்ளே பந்தயத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

    ஆனால் சுரங்கப்பாதைக்கு உள்ளே வாகனங்கள் மூலம் பந்தயத்தில் ஈடுபடுவது விதிமுறை மீறல் ஆகும். இது போன்ற விதிமுறை மீறல்கள் அதிகாரிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளன. எனவே சுரங்கப்பாதையின் உள்ளே விபத்துக்களை தடுக்கும் விதமாக, விதிமுறை மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் அடல் சுரங்கப்பாதையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், வேக கட்டுப்பாடு போன்ற விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும், கூடுதல் எச்சரிக்கையுடன் பயணம் செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். அடல் சுரங்கப்பாதை, ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் திகழ்வது இங்கே குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad