பூனை தள்ளியதில் டிவி தலையில் விழுந்து இரண்டு வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
சென்னை அயனாவரம் பகுதியில் வசித்து வருபவர் மொய்தீன். இவரது 2 வயது குழந்தை நஷியா பாத்திமா, நேற்று மாலை 5 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். குழந்தை தூங்கிக் கொண்டிருந்த இடத்தின் அருகே 2 அடி உயரமுள்ள நாற்காலியில் டிவி வைக்கப்பட்டிருந்தது. அப்போது வீட்டை சுற்றி வந்த பூனை ஒன்று பீரோவில் இருந்து டிவியின் மீது குதித்துள்ளது. இதனால் டிவி, தூங்கிக் கொண்டிருந்த குழந்தை மீது விழுந்ததாக தெரிகிறது.முகத்தில் பலத்த காயம் அடைந்த குழந்தையை பெற்றோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தது பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கடந்த 20 நாள்களில் நிகழும் இரண்டாவது அதிர்ச்சி சம்பவம் இதுவாகும். கடந்த ஆகஸ்ட் மாதம் தொலைக்காட்சி பெட்டி விழுந்து சென்னை சேலையூரில் 3 வயது குழந்தை உயிரிழந்தது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க குழந்தைகளை கையாள்வதில் பெற்றோர் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.
கருத்துகள் இல்லை