கோவில்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட ரூ.2.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கட்டட பணிகள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட ரூ.2.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கட்டட பணிகள் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். அமைச்சர் கடம்பூர் ராஜூ ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டட கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ரூ.48 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வித்ய பிரகாசம் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியை அமைச்சர் திறந்து வைத்தார்.
பின்னர் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.40 லட்சத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு புதிய கட்டட கட்டுமான பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட ஆலம்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் திறந்து வைத்தார்.
இனாம் மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட சாலைப்புதூர் இ.பி. காலனியில் ரூ.17.24 லட்சத்தில் 600மீ தொலைவுக்கு தார்ச்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சிகளில், சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன், மாவட்ட திட்ட அலுவலர் தனபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் அனிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கவாசகம், வசந்தா, நகராட்சி ஆணையாளர் ராஜாராம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை