கோவில்பட்டி அருகே சுகாதாரப் ஆய்வாளருக்கு தாக்கிய : 6 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கயத்தாறு அருகே கரோனா வைரஸ் தொற்று பாதிப்படைந்துள்ள நபரின் குடும்ப உறுப்பினர்களை முன்னெச்சரிக்கை தடுப்பில் வைப்பதற்காக மருத்துவமனைக்கு அழைக்கச் சென்ற சுகாதார ஆய்வாளரை தாக்கி மிரட்டல் விடுத்ததாக 6 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
தில்லி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கயத்தாறு அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா நோய் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது குடும்ப உறுப்பினர்கள் 5 பேரும் அதே பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் அவர்கள் 5 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்று, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அனுமதிப்பதற்கு, அப்பகுதிக்கு சுகாதார ஆய்வாளர் காளிராஜ் சனிக்கிழமை சென்றார். அப்போது, அப்பகுதி பொதுமக்கள் சுகாதார ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்ததோடு அரசுத் துறையை அவதூறாகப் பேசி, சுகாதார ஆய்வாளரை தாக்கி, செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தினார்களாம். இதில் காயமடைந்த சுகாதார ஆய்வாளர், கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்டுள்ளவர்களை கைது செய்ய டி.எஸ்.பி. ஜெபராஜ் மற்றும் கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் முத்து ஆகியோர் தலைமையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் நாகூர்மீரான் மகன் அனிஷ்முகம்மது(27), இப்ராஹிம் மகன் செய்யது மைதீன்(28), சுனைத் மகன் முகம்மதுஆசிக்(19), பக்கீர்மைதீன் மகன் முகம்மதுயூசுப்(74), ஷாஜகான் மகன் நவாஸ்கான்(20), நாகூர்ராவுத்தர் மகன் ஜலால்(48) ஆகிய 6 பேரை நேற்று கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை