கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் தைப்பூசத்திருவிழா திருத்தேரோட்டம்
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் தைப்பூசத்திருவிழாவில் இன்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
குடவரை கோயிலான கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானை, சோமாஸ் கந்தர், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார மகா தீபாராதனை நடந்து வந்தது.
தைப்பூசமான இன்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை நடந்தது. காலை 6 மணிக்கு கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானை சட்ட ரதத்திலும், விநாயகப் பெருமாள் கோ ரதத்திலும் எழுந்தருளுந்தினர். தொடர்ந்து 11 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. முதலில் கோ ரதம் இழுக்கப்பட்டது. பின்னர் சட்ட ரதத்தை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தெற்கு ரத வீதியில் புறப்பட்ட தேர் கீழ பஜார் வழியாக பகல் 12 மணிக்கு நிலையை அடைந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், திமுக மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் சுப்பிரமணியன், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட வர்த்தக அணி செயலார் ஜெயக்கொடி, கழுகுமலை பேரூர் திமுக செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இரவு 8 மணிக்கு மேல் கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானையுடன் பூஞ்சப்பரத்தில் வீதியுலா வருதல் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், தலைமை எழுத்தர் பரமசிவம், உள்துறை எழுத்தர் செண்பகராஜ் மற்றும் கோயில் பணியாளர்கள், சீர்பாத தாங்கிகள் செய்திருந்தனர். கழுகுமலை காவல் உதவி ஆய்வாளர் பாண்டியன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை