Header Ads

  • சற்று முன்

    மணிரத்னம்: கத்தி, தர்பார் தயாரிப்பாளர் லைகா நிறுவனர் சுபாஸ்கரன் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க ஆசை


    லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனர் சுபாஸ்கரனின் சமூக சேவைகளைப் பாராட்டி, மலேசியாவின் அமிஸ்ட் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

    விஜய் நடிப்பில் வெளியான 'கத்தி' படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் சுபாஸ்கரன் அல்லிராஜா. தனது லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் தொடர்ந்து பல்வேறு பிரம்மாண்ட படங்களைத் தமிழில் தயாரித்து வருகிறார். தற்போது ரஜினி நடிக்கும் 'தர்பார்', கமல் நடிக்கும் 'இந்தியன்-2', மணிரத்னம் இயக்க உள்ள 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட பல படங்களை தயாரித்து வருகிறார்.


    இவரது லைகா குழுமம், இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் ஒரு பிரிவான லைகா மொபைல் நிறுவனம், உலகின் பல நாடுகளில் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக விளங்குகிறது. இது மட்டுமின்றி, சமூக சேவையிலும் சுபாஸ்கரன் கவனம் செலுத்தி வருகிறார். இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் தமிழர்களுக்காக நூற்றுக்கணக்கான வீடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள சிறுவர்களுக்கு பல வகையான உதவிகள், விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள், குடிநீர் தட்டுப்பாடு உள்ள நாடுகளில் அதற்கான வசதிகள் என பல உதவிகளைச் செய்து வருகிறார்.

    இந்நிலையில், அவரது சமூக சேவைகளைப் பாராட்டி மலேசியாவில் உள்ள அமிஸ்ட் (ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிசின், சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி) பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. இதையொட்டி, சுபாஸ்கரனுக்கு பாராட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குநர் மணிரத்னம் பேசும்போது, ''சுபாஸ்கரனின் அபார வளர்ச்சி வியக்க வைக்கிறது. அதை ஒருநாள் சினிமாவாக பண்ண ஆசை'' என்றார்.

    தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் பேசும் போது, ''நம்மை ஆட்சி செய்த பிரிட்டிஷார் மத்தியில் அவர் பிரபல தொழிலதிபராக ஆட்சி செய்து கொண்டிருப்பது நம் அனைவருக்கும் பெருமை. அவரது வெற்றிக் கதை ஒரு பாகத்தில் அடங்காதது. முதல் பாகத்தை மணிரத்னம் எடுத்தால், நான் 2-ம் பாகம் பண்ணிக் கொள்கிறேன்'' என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad