Header Ads

  • சற்று முன்

    ப. சிதம்பரம் எச்சரிக்கை: “இந்தியா முழுவதும் சுமார் 20,000 பட்டினி சாவுகள்; வரிவிகிதம் அதிகரிக்கும்”


    நவம்பர் 2016ல் பணமதிப்பிழப்பு அறிவித்த நாளிலிருந்து படிப்படியாகக் குறைந்து இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி ஐந்து சதவீதமாக மாறிவிட்டது என்றும் தற்போது இந்தியப் பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்றும் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

    ஐ.என்.எக்ஸ்.ஊடகம் வழக்கில் கைதாகி, 106 நாட்கள் திஹார் சிறையில் கழித்துவிட்டு, ஜாமீனில் வெளிவந்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவரான சிதம்பரத்திற்கு, சென்னையில் தமிழக காங்கிரஸ் குழுவினர் வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

    ஜாமீன் வழங்கியுள்ள நீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால், ஐ.என்.எக்ஸ்.ஊடகம் வழக்கு குறித்து எதையும் சிதம்பரம் குறிப்பிடவில்லை. அதிகரித்து வரும் வெங்காய விலை மற்றும் நாளுக்குநாள் வேலைவாய்ப்புகள் குறைந்துகொண்டே வருவது தொடர்பாகப் புள்ளிவிவரங்களுடன் பேசிய அவர், அடுத்துவரவுள்ள ஜிஎஸ்டி கூட்டத்தில் பாஜக அரசு மேலும் வரிகளை அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.

    'இந்தியாவின் வளர்ச்சி வெறும் ஐந்து சதவீதமாக உள்ளது. இந்த ஐந்து சதவீதம் என்பது பொய். இதுகூட, பழைய விகிதமான மூன்றரை சதவீதம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்தியாவில் சுமார் 30 கோடி மக்கள் தினக்கூலி வேலைசெய்பவர்கள். இவர்கள் வேலை இழந்தால், என்னவாகும்? முன்னர், ஒரு மாதத்தில் 25 நாட்கள் கூலி வேலை கிடைத்தது. தற்போது ஒரு கூலி ஆள் ஒருவருக்கு வெறும் 12 அல்லது 15 நாட்கள்தான் வேலை கிடைக்கிறது,''என்றார்.
    மூன்றரை சதவீதத்தில் ஒரு நாடு வளர்ந்தால் எப்படி பொருளாதாரம் உயரும் எனக் கேள்வியெழுப்பிய அவர், ''மக்களுக்கு எச்சரிக்கை செய்தியைச் சொல்கிறேன். அடுத்துவரவுள்ள ஜிஎஸ்டி கூட்டத்தில் ஐந்து சதவீத வரிவிதிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு எட்டு சதவீதமாகவும், எட்டு சதவீதமாக உள்ள பொருட்களுக்கு 12 சதவீதமாக உயர்த்தப்போகிறார்கள். 12 சதவீதமாக உள்ள பொருட்களுக்கு 18 சதவீதமாக மாற்றுவார்கள். சாதாரண, எளிய, நடுத்தர மக்கள் வாங்கும் பொருட்களுக்கு வரிகளை அதிகரிக்கப்போகிறார்கள்,'' என எச்சரிக்கை செய்தார்.

    சிறையிலிருந்து வந்ததும் தேர்தலைச் சந்திக்கும் ஜார்கண்ட் மாநிலத்திற்குச் சென்று அங்குள்ள பொருளாதார நிலையைக் கண்டறிந்ததாகக் கூறிய சிதம்பரம், இந்தியா முழுவதும் சுமார் 20,000 பட்டினி சாவுகள் ஏற்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

    முன்னதாக நேற்று நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொண்டு, இன்று (டிசம்பர் 7) டெல்லியில் இருந்து சென்னை வந்தார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசியஅவர் காஷ்மீர் பகுதியில் 75லட்சம் மக்களுக்கு சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது என்றும் நாட்டில் பல பகுதிகளில் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்றார்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad