தீயவர்களின் கூடாரமாக மாறிவரும் தீபத்திருக்கோயில் - அலட்சியம் காட்டும் அறநிலையத்துறை
தமிழகம் மட்டுமல்லாது, இந்திய தேசம் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் தினசரி ஆயிரக்கணக்கானோர் திருவண்ணாமலைக்கு ஆன்மிக பயணமாக வருகின்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் வசதிபடைத்தவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை பிராக்கெட் செய்து, “சிறப்பு தரிசனம் மற்றும் சிறப்பு மரியாதை” என்ற பெயரில், கோயில் அதிகாரிகளின் அனுமதியில்லாத ஆதரவுடன் புரோக்கர்கள் சிலர் செயல்படுவது சமீபகால டிரெண்டாக உருவாகியுள்ளது. இத்தகைய முறைகேடுகள் மற்றும் விதிமீறல்களை தடுக்க வேண்டிய, அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியப்போக்குடன் (என்ன காரணமோ?) நடந்து கொள்வதால், கோயிலுக்கு வரும் உண்மையான பக்தர்கள் மன வேதனையடைந்து செல்கின்றனர்.
புரோக்கர்கள் பிடியில் கோயில்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் கார், வேன் போன்ற வாகனங்களில் திருவண்ணாமலை கோயிலுக்கும், மலை சுற்றவும் வருகின்றனர். இதில் வசதிபடைத்த பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விரைவு தரிசனம் செய்ய, 20 மற்றும் 50 ரூபாய் டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்டு கோயிலுக்குள் சென்ற விரைவு தரிசனம் செய்வர். இதன்மூலம் கோயிலுக்கு கணிசமான வருவாயும் கிடைக்கிறது. இந்நிலையில் திருவண்ணாமலை கோயிலுக்கு வாகனங்களில் வரும் பக்தர்களை சில புரோக்கர்கள் அடையாளம் கண்டு, அவர்களிடம், சிறப்பு வழியில், விரைவு தரிசனம் மற்றும் சிறப்பு மரியாதை என கூறி அழைத்துச் செல்கின்றனர். தரிசனம் முடிந்த பின், குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை கட்டணமாக புரோக்கர்கள் பெறுகின்றனர். இதனால் கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து பக்தர்கள் சிலர் கூறியபோது, விஐபிக்கள் வாகனத்தில் வந்து இறங்கும்போதே, பக்தர்களிடம் தற்போது கூட்டம் அதிகமாக இருக்கிறது. தரிசனம் செய்ய நீண்ட நேரம் ஆகும். தனிவழியில் சென்றால் சாமியை, அருகிலிருந்து பார்க்கலாம், மேலும் கோயிலுக்குள் சிறப்பு மரியாதையும் கிடைக்கும் என கூறி அவர்களை அழைத்துச் செல்வது புரோக்கர்களின் வாடிக்கையாக இருந்து வருகிறது என்று தெரிவிக்கின்றனர்.
புரோக்கர்களை கைது செய்த நீதிபதி
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாவட்ட நீதிபதி மகிழேந்தி ஆய்வு செய்த போது, கோயிலுக்குள் புரோக்கர்கள் தொந்தரவு இருப்பதாக பக்தர்கள் அளித்த புகாரின் பேரில், நடவடிக்கை எடுக்கப்பட்டு புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர்.
திரும்ப வந்துட்டேன்னு சொல்லும்
புரோக்கர்கள்
ஆனால் கடந்த ஓராண்டிற்கு பிறகு தற்போது, 20 க்கும் மேற்பட்ட புரோக்கர்கள் கோயிலில் உலவி வருகின்றனர். கோயிலுக்குள் வரும் புரோக்கர்கள், அன்னதானம் பரிமாறுவது, அபிஷேக பொருட்கள் எடுத்து செல்வது, புரோகிதர்கள் மற்றும் கோயில் ஊழியர்களுக்கு டீ,காபி, டிபன் வாங்கி செல்வது மற்றும் பிரசாத கடை, காலணி பாதுகாப்பிடம், லக்கேஜ் பாதுகாப்பிடம் உள்ளிட்ட பகுதிகளில் உட்கார்ந்து, அவர்களது வேலையை நடத்துகின்றனர்.
அலட்சியம் காட்டும் ஆணையர்
புரோக்கர்கள் கோயிலுக்குள் உண்டியலில் சீல் வைப்பது, கதவை திறந்து விடுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவது குறித்து, திருவண்ணாமலை கோயில் இணை ஆணையரிடம் பேசியபோது, உண்டியலில் சீல் வைப்பதெல்லாம், அறநிலையத்துறை ஆய்வாளரின் வேலை, ஆள்பற்றாக்குறையினால் வெளிநபர்கள் அந்த பணியில் ஈடுபடுகின்றனர். அடுத்த முறை, இப்படி நடக்காமல் பார்க்கலாம் என்று பட்டும் படாமல் பேசினார். மேலும் புரோக்கர்களின் செயல்பாடுகள் குறித்து பேசியபோது, தான் பிசியாக இருப்பதாகவும், பிறகு பேசலாம் என்றும் பேச்சை முடித்துக் கொண்டார்.
கருத்துகள் இல்லை